72 பந்துகளில் 104 ரன்கள்; பிறந்தநாளன்று அதிரடி சதம் அடித்து டெல்லி அணிக்கு அரையிறுதிக்கு வழிகாட்டிய கம்பீர்

By செய்திப்பிரிவு

பெங்களூரில் நடந்த விஜய் ஹசாரே கோப்பைக்கான காலிறுதி ஆட்டத்தில், ஹரியானா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

இந்தப் போட்டியில் கவுதம் கம்பீர் 72 பந்துகளில் 104 ரன்கள் சேர்த்து டெல்லி அணி அரையிறுதிக்குச் செல்ல முக்கியக் காரணமாக விளங்கினார்.

பேட்டிங்கில் ஃபார்மில்லாமல் தவித்ததாகக்கூறிக் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட கம்பீர், தனது வழக்கமான அதிரடியை நேற்று வெளிப்படுத்தினார். தனது பிறந்தநாளான நேற்று கம்பீர் சதம் அடித்தது முத்தாய்ப்பாகும்.

பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் விஜய் ஹசாரே கோப்பைக்கான காலிறுதி ஆட்டம் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஹரியானா அணி 49.1 ஓவர்களில் 229 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டெல்லியின் அணியின் வேகப்பந்துவீச்சாளர் கேஜ்ரோலியா ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். இவர் 10 ஓவர்களில் 31 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சைனி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 230 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 39.2 ஓவர்களில் இலக்கை அடைந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் அதிரடியாக ஆடிய கவுதம் கம்பீர் 69 பந்துகளில் சதம் அடித்து 104 ரன்களில் ஆட்டமிழந்தார். இதில் 16 பவுண்டரிகள் அடங்கும். விஜய் ஹசாரே கோப்பையில் கவுதம் கம்பீர் அடிக்கும் 2-வது சதம் இதுவாகும். இதற்கு முன் கேரளாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கம்பீர் சதம் அடித்துள்ளார்.

இதன்மூலம் இந்தத் தொடரில் கம்பீர், இதுவரை 490 ரன்கள் சேர்த்து 3-வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் அபினவ் முகுந்த் 560 ரன்களிலும், புனீத் பிஸ்த் 502 ரன்களிலும் உள்ளனர்.

கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கம்பீர் கடைசியாக சதம் அடித்தார் அதன்பின் இப்போதுதான் கிரிக்கெட் போட்டியில் கம்பீர் சதம் அடித்துள்ளார்.

 

இதன் மூலம் லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டியில் 10 ஆயிரம் ரன்கள் எட்டிய உலகளவில் பெருமைக்குரிய 55-வது கிரிக்கெட் வீரரும், இந்திய அளவில் 9-வது வீரரும் என்ற பெருமையை கம்பீர் பெற்றார். மேலும், இந்தியாவில் லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டியில் 6 ஆயிரம் ரன்களைக் கம்பீர் கடந்து சர்வதேச அளவில் 68-வது வீரரும், இந்திய அளவில் 6-வது வீரர் எனும் பெயரைப் பெற்றார்.

இந்திய அணிக்காக 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கம்பீர் 4,154 ரன்களும், 147 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5,238 ரன்களும் சேர்த்துள்ளார். இதில் டெஸ்ட் போட்டியில் 9 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 11 சதங்களும் அடங்கும்.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்ட கம்பீர், கடந்த 2007-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அடித்த அதிரடி ஆட்டத்தையும், 2011-ம் ஆண்டு ஐசிசி உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் அடித்த ஆட்டத்தையும் இன்னும் ரசிகர்கள் மறக்கவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

ஜோதிடம்

12 hours ago

மேலும்