பும்ரா மிரட்டல்; இசாந்த் புதிய மைல்கல்: விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறல்

By செய்திப்பிரிவு

சவுத்தாம்டன் நகரில் நடந்து வரும் 4-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்து வரும் இங்கிலாந்து அணி தொடக்கத்திலேயே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றத்துடன் பேட் செய்து வருகிறது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் முதல் இரு போட்டிகளிலும் வென்று இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. நாட்டிங்ஹாமில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலியின்அபார சதம், அஸ்வின், பும்ரா, ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சால் 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. இதனால் 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், சவுத்தாம்டன் நகரில் 4-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோய் ரூட் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இங்கிலாந்து அணியில் இருமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயம் காரணமாக வோக்ஸ்கு பதிலாக சாம் குரன் சேர்க்கப்பட்டுள்ளார். அணிக்கு மொயின் அலி மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படாமல், 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய வீரர்களே இந்தப் போட்டியிலும் தொடர்கின்றனர்.

அலிஸ்டார் குக், ஜென்னிங்ஸ் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். ஆடுகளம் புற்கள் நிறைந்து காணப்பட்டதாலும், காலை நேர ஈரப் பதமும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. இதைப் பயன்படுத்தி, இந்திய வீரர்கள் இசாந்த் சர்மாவும், பும்ராவும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை தொடக்கத்திலிருந்தே மிரட்டினார்கள். இசாந்த் முதல் ஓவரில் மெய்டனும், பும்ரா ஒரு ரன்னும் கொடுத்தார்.

பும்ரா வீசிய 2-வது ஓவரின் முதல் பந்தில் ஜென்னிங்ஸ் கால்காப்பில் வாங்கினார். இதை நடுவரால் தவிர்க்கவே முடியாத அளவுக்கு ஸ்டெம்புகளை மறைத்து ஜென்னிங்ஸ் பந்தைத் தடுத்ததால் யோசிக்காமல் நடுவர் 'அவுட்' அளித்தார். இதனால், 3-வது ஓவரிலேயே இங்கிலாந்து அணி முதல் விக்கெட்டை இழந்தது. ஜென்னிங்ஸ் 'டக்அவுட்'டில் நடையைக் கட்டினார்.

அடுத்து கேப்டன் ஜோட் ரூட் களமிறங்கி, குக்குடன் சேர்ந்தார். இசாந்த், பும்ராவின் பந்து துல்லியமாகவும், வேகமாகவும் வந்ததால், அதைத் தொடுவதற்கு இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அஞ்சினார்கள். களத்தில் நிற்கவைத்து,  இங்கிலாந்து வீரர்களுக்கு இந்திய வீரர்கள் தங்கள் பந்துவீச்சு மூலம் படம் காட்டினார்கள்.

புதிய மைல்கல்

பும்ரா வீசிய 6-வது ஓவரில் குக் முதல் பவுண்டரி அடித்தார். ஆனால், இசாந்த் சர்மா வீசிய 7-வது ஓவரின் முதல் பந்தில் ஜோட் ரூட் (4) எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த விக்கெட்டை வீழ்த்திய போது, இசாந்த் சர்மா டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய 3-வது இந்திய வேகப்பந்துவீச்சாளர் எனும் பெருமையைப் பெற்றார். இதற்கு முன் கபில்தேவ் (434), ஜாகீர்கான் (311) விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

அடுத்து வந்த பேர்ஸ்டோ, குக்குடன் இணைந்தார். இருவரும் விக்கெட் வீழ்ச்சியைத் தடுக்கும் வகையில் நிதானமாக பேட் செய்தனர். ஆனால், ஆடுகளத்தின் தன்மையைப் பயன்படுத்திய இசாந்த் சர்மாவும், பும்ராவும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். ரன் அடிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் திணறினார்கள்.

10 ஓவரில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. பும்ரா வீசிய 13-வது ஓவரில் பேர்ஸ்டோ தடுத்து ஆட முற்பட அது பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் ரிஷாப் பந்த் கைகளில் தஞ்சமடைந்தது. பேர்ஸ்டோ 6 ரன்களில் ஆட்டமிழந்தார். மிகப்பெரிய விக்கெட்டான பேர்ஸ்டோவை பும்ரா கழற்றினார்.

அடுத்து ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி  பந்துவீச அழைக்கப்பட்டனர். இருவரின் வேகப்ப்ந்து வீச்சையும் சமாளித்து ஆடுவதற்கு குக்கும், ஸ்டோக்ஸும் திணறினார்கள், இதனால், ஸ்கோர் உயரவே இல்லை.  ஹர்திக் பாண்டியா வீசிய 18-வது ஓவரின் முதல் பந்தில் குக் அடித்த பந்து 3-வது ஸ்லிப்பில் நின்றிருந்த விராட் கோலியிடம் தஞ்சமடைந்தது. இதனால், குக் 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அடுத்து வந்த ஜோஸ் பட்லர், ஸ்டோக்ஸுடன் இணைந்து விளையாடி வருகிறார்.

பட்லர் 3 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் 7 ரன்னிலும் விளையாடி வருகின்றனர். இங்கிலாந்து அணி 18 ஓவர்களில் 40 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவிக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

38 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

55 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்