எதையும் சாத்தியமாக்கும் ஜெர்மனி

By பெ.மாரிமுத்து

திக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளின் பட்டியலில் 2-வது இடத்தில் இருப்பது ஜெர்மனிதான். அந்த அணி 1954, 1974, 1990, 2014 ஆகிய ஆண்டுகளில் மகுடம் சூடியது. 13 அரை இறுதிகள், 8 இறுதிப் போட்டிகளை சந்தித்துள்ள ஜெர்மனி உலகக் கால்பந்தில் ஆதிக்கம் செலுத்தும் முதன்மையான அணிகளுள் ஒன்றாக திகழ்கிறது. ரஷ்ய உலகக் கோப்பை தொடரை நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் சந்திக்கிறது ஜெர்மனி. தகுதி சுற்றில் 10 ஆட்டங்களிலும் அபார வெற்றிகளை அந்த அணி குவித்தது. வடக்கு அயர்லாந்து, செக். குடியரசு, நார்வே, அஜர்பைஜான், சன் மரினோ ஆகிய அணிகளை தலா இரு முறை பந்தாடிய ஜெர்மனி 43 கோல்களை அடித்து மிரட்டியது. மேலும் 10 ஆட்டங்களிலும் வெறும் 4 கோல்களையே வாங்கியது.

மேலும் 2017-ம் ஆண்டு நடைபெற்ற ஃபிபா கான்பெடரேஷன் கோப்பையையும் ஜெர்மனி வென்று அசத்தியது. உலகக் கோப்பை தொடரில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் இந்தத் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த போதும் ஜெர்மனி சாதித்துக் காட்டியதில் பயிற்சியாளர் ஜோச்சிம் லோவின் பங்கு அளப்பரியது. இந்தத் தொடரில் நடுகள வீரரான லியோன் கோரட்ஸ்கா சிறந்த திறனை வெளிப்படுத்தினார். மீண்டும் ஒருமுறை நட்சத்திர வீரர்கள் என்று யாருமே அணியில் இல்லாமல் ரஷ்ய உலகக் கோப்பை தொடரை சந்திக்க உள்ளது ஜெர்மனி. ஒட்டுமொத்த குழுவாக இணைந்து உத்வேகத்துடன் செயல்படுவதுதான் அந்த அணியின் வெற்றிக்கான தாரக மந்திரம்.

இம்முறை அந்த அணி பட்டத்தை தக்க வைத்து சாதனை படைக்க வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்குகிறது. கடைசியாக பிரேசில் அணி 1958 மற்றும் 1962-ம் ஆண்டு தொடர்களில் அடுத்தடுத்து வெற்றி பெற்று கோப்பையை தக்க வைத்து சாதனை படைத்திருந்தது. 56 வருடங்களுக்குப் பிறகு இந்த சாதனையை தற்போது நிகழ்த்த ஜெர்மனி தீவிரம் காட்டக்கூடும். இதுதொடர்பாக ஜோச்சிம் லோவ் கூறும்போது, “இம்முறை நாங்கள் வரலாற்று சாதனை படைக்க முடியும். உலகக் கோப்பை தொடர், கான்பெடரேஷன் கோப்பை அதன் பின்னர் மீண்டும் உலகக் கோப்பை என தொடர்ச்சியாக 3 கோப்பைகளை எந்த அணியும் இதுவரை வெல்லவில்லை. இதனால் நாங்கள் கோப்பையை தக்க வைத்துக் கொண்டால் வரலாற்று சாதனை படைக்கலாம். பட்டம் வெல்ல வேண்டும் என்பதே எங்களது அனைவரது இலக்கு” என்றார்.

பிரேசில் அணி சாதனை படைத்த பிறகு இந்த அரை நூற்றாண்டில் அதிகளவு மாற்றங்கள் நடந்துவிட்டது. உலகக் கோப்பையில் விளையாடும் நாடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மேலும் பெரிய அணிகள் இடையிலான இடைவெளி மிகவும் குறுகலானது என்பதால் ஜெர்மனி அணி கோப்பையை தக்க வைத்துக் கொள்வதற்கான சாதனையை அடைவது சற்று கடினமாகவே இருக்கக்கூடும். ஆனால் இதற்கு மிக தெளிவான திட்டங்கள் வைத்திருப்பதாக கூறும் 58 வயதான ஜோச்சிம் லோவ், “நாங்கள் வெற்றியாளராக இருக்க வேண்டுமென்றால் ஒரு அணியாக நாங்கள் மேலும் முன்னேற்றம் காணவேண்டும். 2014 உலகக் கோப்பையில் விளையாடியதை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்” என்கிறார்.

ஜோச்சிம் லோவ் இரு முக்கிய காரணிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். ஒன்று அணியில் தேவையான மாற்றங்களை செய்வது. மற்றொன்று பிரேசிலில் கோப்பையை கைப்பற்றியது போன்று மீண்டும் மகுடம் சூடுவதற்கு வெற்றியை துரத்துவதற்கான வேட்டையில் ஈடுபடுவது. 2006 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு ஒவ்வொரு பெரிய அளவிலான தொடரிலும் ஜெர்மனி அணியை குறைந்தது அரை இறுதி வரையாவது கொண்டு சென்றுள்ளார் ஜோச்சிம் லோவ். அந்த அணியின் வெற்றிக்கு அடித்தளம் என்பது இளம் தலைமுறை வீரர்களின் வளர்ச்சி மற்றும் கள வியூகங்களுக்கான தந்திரங்களை மேம்படுத்திக் கொள்வதில் சார்ந்திருக்கிறது.

2008-ம் ஆண்டு யூரோ கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினிடம் தோல்வியடைந்ததில் இருந்து ஜெர்மனி அணி சிறந்த பாடத்தை கற்றுக்கொண்டது. இந்தத் தொடரில் எதிரணியினர் பந்துகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க எந்த மாதிரியான பாணிகளை கடைப்பிடிக்கிறார்கள் என உற்று நோக்கி ஆராய்ந்தது ஜெர்மனி அணி. அதன் பின்னர் பந்துகளை கடத்துவதில் வேகத்தையும், வீரர்களின் உடல் நலம் மற்றும் வலிமையையும் மேம்படுத்தியது. மேலும் புதிய மட்டத்தில் திறன் மிகுந்த அளவில் பந்துகளை கடத்திச் செல்வதுடன் உயர்மட்ட அளவிலான தற்காப்பு ஆட்டத்தையும் தொடர்ச்சியாக சரிவர கடைப்பிடித்து வெற்றியின் தருணங்களை வியாபிக்கச் செய்தது.

2016-ம் ஆண்டு யுரோ கால்பந்து தொடரில் ஜோச்சிம் லோவ் புதிய தந்திரங்களை கையாண்டார். லீக் சுற்றில் ஸ்பெயின் அணியை இத்தாலி வெற்றி பெற்றதும் தனது அணியின் வழக்கமான பார்மேட்டான 3-4-3 என்பதை 5-3-2 என மாற்றியமைத்தார். டிபன்ஸ் மற்றும் தாக்குதல் ஆட்டத்துக்கு தகுந்தபடி மாற்றியமைக்கப்பட்ட இந்த கள யுத்தியை கொண்டு அந்தத் தொடரில் இத்தாலியை வென்றது ஜெர்மனி அணி. இதன் மூலம் பெரிய அளவிலான தொடரில் முதன்முறையாக இத்தாலியை தோற்கடித்து ஜெர்மனி சாதனை படைத்தது. எனவே ரஷ்ய உலகக் கோப்பையில் பல்வேறு எதிரணிகளை எதிர்கொள்ளும் போது ஜெர்மனி தனது கள யுத்திகளை மாற்றுவதில் எந்தவித சிரமத்தையும் சந்திக்காது என்றே கருதப்படுகிறது.

கான்பெடரேஷன் கோப்பைத் தொடரில் விளையாடிய 10 வீரர்கள் உலகக் கோப்பை தொடருக்கான அணியிலும் இடம் பெற்றுள்ளனர். மேலும் கேப்டனும் கோல்கீப்பருமான மனுவேல் நெவர் காயத்தில் இருந்து குணமடைந்து 8 மாதங்களுக்குப் பிறகு அணிக்கு திரும்பி உள்ளார். ஆஸ்திரியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஜெர்மனி அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்திருந்தது. இந்த ஆட்டத்தின் 2-வது பாதியில் நெவர் சிறப்பாக செயல்படத் தவறினார். எனினும் மழைக்குறுக்கீடு உள்ளிட்ட சில பாதகமான விஷயங்களும் ஜெர்மனி அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

இந்தத் தோல்வியில் இருந்து ஜெர்மனி விரைவிலேலேய மீண்டெழுந்துவிடும். இளம் வீரர்களான ஜோஸ்வா கிம்மிச், டிமோ வெர்னர் ஆகியோர் தகுதி சுற்று ஆட்டங்களில் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தனர். அணியின் முதுகெலும்பாக திகழும் ஜெரோம் போட்டெங், மட்ஸ் ஹம்மல்ஸ், ஷமி கெதிரா, மெசூட் ஓஸ்வில், தாமஸ் முல்லர், டோனி க்ரூஸ் ஆகியோரும் தங்களது அனுபவத்தால் எதையும் சாத்தியமாக்கும் முனைப்பில் மீண்டும் ஒரு முறை கோப்பையை வெல்ல ஆயத்தமாகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்