கொல்கத்தா: நடப்பு ஐபிஎல் சீசனின் 31-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இதில் 2 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. 224 ரன்களை விரட்டிய அந்த அணிக்கு தனி ஒருவராக ஆடி வெற்றியை தேடி தந்தார் ஜாஸ் பட்லர். அவர் 55 பந்துகளில் சதம் கடந்தார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. சுனில் நரைன் சதம் விளாசினார். ரகுவன்ஷி 18 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். ரிங்கு சிங் 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் பவுலர்களில் அவேஷ் கான் மற்றும் குல்தீப் சென் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தனர்.
224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விரட்டியது. ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். ஜெய்ஸ்வால், 19 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் சஞ்சு சாம்சன் 12 ரன்களில் வெளியேறினார். அதிரடியாக ஆடி, 14 பந்துகளில் 34 ரன்கள் எடுத்த ரியான் பராக், ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் வெளியேறினார். பராக் உடன் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் பட்லர்.
துருவ் ஜுரல் 2 ரன்கள், அஸ்வின் 8 ரன்கள் மற்றும் ஹெட்மயர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். பவல், 13 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார். போல்ட் ரன் அவுட் ஆனார்.
ஒரு பக்கம் விக்கெட் சரிந்த போதும் ஜாஸ் பட்லர் நிலையாக பேட் செய்தார். அது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நம்பிக்கை தரும் வகையில் அமைந்தது. கடைசி இரண்டு ஓவர்களில் ராஜஸ்தான் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரில் 19 ரன்கள் எடுத்தார் பட்லர். கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே தேவைப்பட அந்த ஓவரை வருண் சக்கரவர்த்தி வீசினார்.
பட்லர் 98 ரன்களுடன் ஸ்ட்ரைக்கில் இருந்தார். கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் விளாசினார். 55 பந்துகளில் சதம் கடந்தார். இருந்தும் அடுத்த 3 பந்துகளில் ரன் ஏதும் எடுக்கவில்லை. 5-வது பந்தில் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. அதன் மூலம் இரு அணியின் ரன்களும் சமன் ஆனது. கடைசி பந்தில் 1 ரன் எடுத்து ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
தனி ஒருவராக இறுதிவரை ஆடி இருந்தார் பட்லர். இந்தப் போட்டியில் இம்பேக்ட் வீரராக அவர் விளையாடி இருந்தார். பொறுமையுடன், பதற்றம் கொள்ளாமல் இன்னிங்ஸை அவர் அணுகினார். அதுவே ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது.