இந்திய சதுரங்கத்தின் புதிய அத்தியாயத்தை தொடங்கும் பிரக்ஞானந்தா

By பெ.மாரிமுத்து

சதுரங்க வரலாற்றில் இந்தியாவின் பக்கங்கள் விஸ்வநாதன் ஆனந்தோடு முடிந்துவிடப் போவதில்லை என்பதை நிரூபித்திருக்கிறது உலகக் கோப்பை செஸ் தொடரில் பிரக்ஞானந்தாவின் செயல்திறன். இறுதிப் போட்டியில் அவர், சாதாரண வீரரிடம் ஒன்றும் வீழவில்லை. 10 ஆண்டுகளுக்கும் மேலாக சதுரங்க கட்டங்களை தன்னுள் அடக்கி வைத்து உலகின் நம்பர் 1 வீரராக கோலோச்சும் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனிடமே மகுடத்தை இழந்துள்ளார்.

இருப்பினும், முன்னெப்போதும் இல்லாத வகையில் மகத்துவத்திற்கு நெருக்கமாக இருக்கிறார் பிரக்ஞானந்தா. பாகுவில் முடிவடைந்த ஃபிடே உலகக் கோப்பையில் அற்புதமான செயல்திறனை பிரக்ஞானந்தா வெளிப்படுத்தியதன் மூலம் நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுக்கு எதிராக மோதும் போட்டியாளரைத் தீர்மானிக்கக்கூடிய கேண்டிடேட்ஸ் போட்டிக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளது. முக்கியத்துவமான இந்த தொடர் அடுத்த ஆண்டு கனடாவில் நடைபெறுகிறது. உலக செஸ் அரங்கில் தனது அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகி உள்ள பிரக்ஞானந்தாவின் பயணமானது நான்கரை வயதில் பல அரிய சாதனைகளுடன் தொடங்கியது. ஒரு கட்டத்தில் விஸ்வநாதன் ஆனந்த் வழிகாட்டியாக மாற பிரக்ஞானந்தாவின் பயணம் நிலையான ஏற்றம் கண்டது.

7 வயதில் தேசிய அளவிலான பட்டத்தை வென்றார். தொடர்ந்து 10 வயதில் சர்வதேச மாஸ்டரான அவர், அடுத்த 2 ஆண்டுகளில் இந்திய கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார். 2019-ம் ஆண்டின் பிற்பகுதியில், 14 வயது மற்றும் 3 மாதங்களில் 2600 என்ற இஎல்ஓ மதிப்பீட்டை அடைந்தார். கரோனா தொற்று காலக்கட்டத்தில் இணையதள செஸ் போட்டிகளில் கவனம் செலுத்தினார். 2021-ல் மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் டூர் போட்டியில் முன்னணி வீரர்களான செர்ஜி கர்ஜாகின், டீமோர் ராட்ஜபோவ் மற்றும் ஜான்-கிரிஸ்டோஃப்டுடா ஆகியோரை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் போட்டியில் கார்ல்சனை, பிரக்ஞானந்தா வீழ்த்திய போதுதான் உலகத்தின் பார்வை அவர் பக்கம் திரும்பியது. இருப்பினும் கிளாசிக்கல் வடிவத்தில் பிரக்ஞானந்தாவின் திறன் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. அவற்றுக்கு அவர், தற்போது பாகுவில் நடைபெற்ற உலகக் கோப்பையின் வாயிலாக பதில் கொடுத்துள்ளார்.

மேஜை முன் இருக்கும் போது பிரக்ஞானந்தாவின் அமைதியான நடத்தையானது அவருக்குள் இருக்கும் நம்பிக்கையான மற்றும் ஆக்ரோஷமான வீரரை மறைக்கிறது. பொதுவாகவே செஸ் விளையாட்டில் முகத்தில் உணர்ச்சிகளை காட்டக்கூடாது என்பது அடிப்படை விதி. ஆனால், வெற்றி பெற்றாலும் கூட பிரக்ஞானந்தா, அதனை தலைக்கு ஏற்றிக்கொள்வது இல்லை.

உலகக் கோப்பை தொடரில் அவர்,சிறந்த போர்க் குணங்களை வெளிப்படுத்தியுள்ளார். கால் இறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர் 2 வீரரான ஹிகாரு நகமுராவுக்கு எதிரான ஆட்டம் இதற்கு சாட்சியாக அமைந்தது. அரையிறுதியில் உலகின் நம்பர் 3 வீரரான ஃபேபியானோ கருனாவுக்கு எதிராக, அவரது தற்காப்பு திறன்கள் முன்னணியில் இருந்தன.

உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் பிரக்ஞானந்தாவுக்கு கிடைத்த அனுபவம் அவர், தன்னை அடுத்த ஆண்டு நடைபெறும் கேண்டிடேட்ஸ் தொடருக்கு மேலும் பட்டைதீட்டிக் கொள்ள உதவும். அவர், தனது 18 வயதிலேயே செஸ் உலக அரங்கில் நிறைய சாதித்துள்ளார். அவரை வழிநடத்த ஆனந்த், பயிற்சியாளர் ரமேஷ் போன்ற சிறந்த ஆளுமைகள் உள்ளனர். இதனால் உலக சாம்பியன் பட்டத்தை பிரக்ஞானந்த எட்டிப்பிடிக்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

உலகக் கோப்பை செஸ் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், தனது ட்விட்டர் பதிவில், “ஃபிடே உலகக் கோப்பையில் பிரக்ஞானந்தாவின் சிறப்பான ஆட்டத்திற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். அவர், தனது விதிவிலக்கான திறமைகளை வெளிப்படுத்தினார். வலுவான மேக்னஸ் கார்ல்சனுக்கு கடுமையான போட்டியை வழங்கினார். இது சிறிய சாதனையல்ல. வரவிருக்கும் போட்டிகள் அவருக்கு சிறப்பாக அமைய வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

42 mins ago

இந்தியா

17 mins ago

இந்தியா

27 mins ago

தமிழகம்

56 mins ago

கல்வி

59 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்