நாக்பூர் விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று இந்தியா -இலங்கை 2-வது டெஸ்ட்டில் மோதல்: முரளி விஜய் களமிறங்குகிறார், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைப்பு

By செய்திப்பிரிவு

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாக்பூரில் இன்று தொடங்குகிறது.

3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் ஆட்டம் மழை பாதிப்பு மற்றும் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் டிராவில் முடிவடைந்தது. அந்த ஆட்டத்தில் 43 ஓவர்கள் மீதம் இருந்த நிலையில் 231 ரன்கள் இலக்கை துரத்திய இலங்கை அணி, 75 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்த நிலையில் தோல்வியின் விளிம்பு வரை சென்று தப்பித்தது. இந்நிலையில் இரு அணிகளும் இன்று 2-வது டெஸ்ட்டில் நாக்பூர் ஜம்தாவில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் மோதுகின்றன.

இந்த ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது. தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை இந்திய அணி நிர்வாகம் மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. கடந்த சில வருடங்களாக நாக்பூர் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கும் மெதுவான பேட்டிங்குக்குமே கைகொடுத்து வந்தது. ஆனால் தற்போது ஆடுகளத்தில் புற்கள் அதிகமாக காணப்படுகின்றன. இதனால் ஆடுகளத்தில் பந்துகள் எகிறி வரக்கூடும்.

ஆடுகளம் குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறும்போது, “ஆடுகளம் பார்ப்பதற்கு சிறப்பாக உள்ளது. குறைந்தது முதல் இரு நாட்களுக்காவது வேகப் பந்து வீச்சாளர்களுக்கு ஆடுகளம் உதவியாக இருக்கும்” என்றார்.

இதனால் கொல்கத்தா போட்டியின் தொடக்க நாட்கள் ஆட்டம் போன்று இந்த ஆடுகளத்திலும் இந்திய வீரர்கள் ரன்கள் சேர்ப்பதற்கு கூடுதல் முயற்சியுடன் செயல்பட வேண்டியது இருக்கும். ஈடன்கார்டனில் கடைசி நாள் ஆட்டத்தில் நெருக்கடியான சூழ்நிலையில் சிறப்பாக விளையாடி சதம் அடித்த விராட் கோலியிடம் இருந்து மேலும் ஒரு சிறப்பான இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். சுரங்கா லக்மல் உள்ளிட்ட இலங்கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மீண்டும் ஒருமுறை அவர், அச்சுறுத்தல் ஏற்படுத்துவார் என கருதப்படுகிறது.

ஷிகர் தவண் விலகி உள்ளதால் கே.எல்.ராகுலுடன் தொடக்க வீரராக தமிழகத்தைச் சேர்ந்த முரளி விஜய் களமிறங்க உள்ளார். தொழில்நுட்ப வகையில் செயல்படக்கூடிய முரளி விஜய் சிறந்த தொடக்கம் அமைத்துக் கொடுக்கக்கூடும். ஆஃப் ஸ்டெம்புக்கு வீசப்படும் பந்துகளை பொறுமையாக எதிர்கொள்வதும், சரியாக கணித்து பந்தை தொடாமல் விட்டு விடுவதிலும் முரளி விஜய் அற்புதமாக செயல்படக்கூடியவர். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்த நேர்த்தியான திறன் பேட்டிங்கை வலுப்படுத்த உதவும்.

புவனேஷ்வர் குமார் திருமணம் செய்து கொள்ள உள்ளதால் அவரும் நாக்பூர் போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக இஷாந்த் சர்மா விளையாடும் லெவனில் இடம் பெறுவார் தெரிகிறது. தற்போது அணியில் உள்ள வேகப் பந்து வீச்சாளர்களில் இஷாந்த் சர்மா மட்டுமே அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர். அவர் 77 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்த சீசனில் ரஞ்சி கோப்பை தொடரில் இஷாந்த் சர்மா 4 ஆட்டத்தில் 116 ஓவர்கள் வீசி 20 விக்கெட்கள் வீழ்த்தி நல்ல பார்மில் உள்ளார்.

ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணி வழக்கமான சுழற்பந்து வீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோருடன் களமிறங்குமா என்பது சந்தேகமாக உள்ளது. கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் இவர்களின் பங்களிப்பு மிகச்சிறிய அளவிலேயே இருந்தது. அதிலும் ரவீந்திர ஜடேஜா 2 ஓவர்கள் மட்டுமே வீசினார். இதனால் ஜடேஜாவுக்கு பதிலாக குல்தீப் யாதவ் அல்லது மித வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும்.

விஜய் சங்கரின் பந்து வீச்சு மிரட்டும் வகையில் இல்லையென்றாலும் 120 கி.மீ. வேகம் வரை வீசும் திறன் கொண்டவர். முதல்தர கிரிக்கெட்டில் 32 ஆட்டங்களில் 27 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். மேலும் பேட்டிங்கில் சதம், 10 அரை சதங்களை 49.16 சராசரியுடன் எடுத்துள்ளார். ஹர்திக் பாண்டியா அணியில் இல்லாததால், அவர் இடத்தை நிரப்புவதற்கு விஜய் சங்கரை பேட்டிங்கில் 6-வது வீரராகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரஞ்சி கோப்பையில் இந்த சீசனில் 3 ஆட்டத்தில் ஒரு சதம் மற்றும் 6 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார் என்பதற்காக மட்டும் விஜய் சங்கர், இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரியவில்லை. அடுத்த 18 மாதங்களுக்கு இந்திய அணி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரராக விஜய் சங்கரை தயார் செய்வதற்காகவே அணிக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொல்கத்தா ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் நங்கூரம் போன்று செயல்பட்டு ஆட்டத்தை சிறப்பாக கட்டமைத்த சேதேஷ்வர் புஜாரா, 2-வது இன்னிங்ஸில் அரை சதம் அடித்த கே.எல்.ராகுல் ஆகியோர் மீண்டும் பேட்டிங்கில் அசத்த தயாராக உள்ளனர். அதேவேளையில் முதல் ஆட்டத்தில் இரு இன்னிங்ஸிலும் சோபிக்க தவறிய அஜிங்க்ய ரஹானே சிறந்த திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

தினேஷ் சந்திமால் தலைமையிலான இலங்கை அணி, கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் தொடக்க நாட்களில் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால் கடைசி நாளில் அந்த அணியின் பிடி தளர்ந்தது. மேலும் தோல்வியை தவிர்க்க போராட வேண்டிய கட்டத்துக்கும் தள்ளப்பட்டது. எப்படியோ தோல்வியில் இருந்து தப்பித்தது அந்த அணிக்கு ஒரு வகையில் மகிழ்ச்சிதான். இம்முறை வானிலை குறுக்கீடு இருக்க வாய்ப்பில்லை என்பதால் தொடக்க நாட்களில் இரு அணிகளுமே ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும்.

இந்த ஆட்டத்தில் லகிரு கமகே நீக்கப்படக்கூடும். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஈடன் கார்டனில் அவர், இரு இன்னிங்ஸையும் சேர்த்து 3 விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தினார். அவருக்கு பதிலாக விஷ்வா பெர்ணான்டோ இடம் பெற வாய்ப்புள்ளது.

அணிகள் விவரம்

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல், முரளி விஜய், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, விருத்திமான் சாஹா, ரோஹித் சர்மா, குல்தீப் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, விஜய் சங்கர், முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா.

இலங்கை: தினேஷ் சந்திமால் (கேப்டன்), திமுத் கருணாரத்னே, சதீரா சமரவிக்ரமா, ஏஞ்சலோ மேத்யூஸ், தசன் ஷனகா, நிரோஷன் திக்வெலா, லகிரு கமகே, திலுருவன் பெரோ, லக்சன் சந்தன், ரங்கனா ஹெராத், தனஞ்ஜெயா டி சில்வா, சுரங்கா லக்மல், விஷ்வா பெர்ணான்டோ, ரோஷன் சில்வா. - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

37 mins ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

மேலும்