மேரி கோமின் வெற்றி ரகசியம்

By பி.எம்.சுதிர்

ர்வதேச போட்டிகளில் நான் பெறும் ஒவ்வொரு பதக்கமும் முக்கியமானவை. ஏனென்றால் ஒவ்வொரு பதக்கத்தையும் வெல்ல நான் கடுமையாக போராட வேண்டி இருந்தது - ஆசிய மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற 34 வயதான மேரி கோம் சொன்ன வார்த்தைகள் இவை. இவை வெறும் வார்த்தைகள் அல்ல என்பதை அவரது வாழ்க்கையைப் பற்றி தெரிந்துகொண்டாலே நம்மால் உணர முடியும்.

மணிப்பூரில் உள்ள கங்தேயி கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் மேரி கோம். விவசாயக் கூலிகளான அவரது பெற்றோருக்கு மேரி கோம்தான் மூத்த மகள். குடும்பக் கஷ்டம் தெரிந்தவர் என்பதால் சிறுவயதிலேயே பெற்றோருக்கு உதவியாக மேரி கோமும் வயலுக்கு செல்வதுண்டு. மேரி கோமின் அப்பாவான தோன்பா கோம், சிறுவயதில் மல்யுத்த வீரராக இருந்தவர் என்பதால், தனது மகளையும் விளையாட்டு வீராங்கனையாக்க விரும்பியுள்ளார். அதற்காக அவருக்கு சிறு பயிற்சிகளையும் கொடுத்துள்ளார்.

1998-ம் ஆண்டில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் டிங்கோ சிங், குத்துச்சண்டையில் வாகை சூட, இந்தத் துறையில் மேரி கோமுக்கு ஆர்வம் பிறந்துள்ளது. தன் பெற்றோரிடம் தெரிவிக்காமலேயே, இம்பாலில் உள்ள குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளார் மேரி கோம்.

2000-ம் ஆண்டில் பயிற்சி பெறத் தொடங்கிய சில வாரங்களிலேயே பயிற்சியாளரின் செல்லப் பெண்ணாகி விட்டார் மேரி கோம். குத்துச்சண்டையின் அடிப்படைகளை கற்றுக்கொண்டவர், வெகு சீக்கிரத்தில் அந்த பயிற்சி மையத்தின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவராக வலம் வரத் தொடங்கினார். 2000-ம் ஆண்டில் மணிப்பூரில் நடந்த மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்று தன் பதக்க வேட்டையைத் தொடங்கினார்.

தன் மகள் ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாக உருப்பெற்றதையும், மாநில அளவிலான போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதையும் நாளிதழில் பார்த்துத்தான் தெரிந்துகொண்டார் அவரது தந்தை தோன்பா கோம். ஆனால் இதற்காக அவர் மேரி கோமை பாராட்டவில்லை. மாறாக கடிந்துகொண்டார்.

“குத்துச்சண்டை போட்டியெல்லாம் பெண்களுக்கு சரிப்பட்டு வராது. இதனால் முகம் இறுக்கமாகிவிடும், காயங்கள் ஏற்படும். உன்னை யாரும் கல்யாணம் செய்துகொள்ள மாட்டார்கள்” என்றெல்லாம் கூறி, அவரை திசை திருப்பப் பார்த்தார். ஆனால் அதற்கெல்லாம் அவர் அசையவில்லை. அவரது தாயாரும் தந்தையின் பல்லவியையே பாடினார்.

பெற்றோரின் ஆதரவு கிடைக்காதது ஒருபுறம் மேரி கோமை தளர்த்த, மறுபுறம் ஸ்பான்சர்கள் கிடைக்காததும் அவரை வருத்தியது. இருப்பினும் தளராத மேரி கோம், தான் கலந்துகொண்ட போட்டிகளில் எல்லாம் அடுத்தடுத்து வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கினார். 2000 முதல் 2005-ம் ஆண்டுவரை அடுத்தடுத்து 5 முறை தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்றார்.

உள்ளூர் போட்டிகளில் வெற்றிக்கொடி நாட்டியவர், சர்வதேச அரங்கில் தன் முத்திரையைப் பதித்தது 2001-ம் ஆண்டில்தான். இந்த ஆண்டில் நடந்த உலக அமெச்சூர் குத்துச்சண்டை போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் சர்வதேச அளவில் தன் முதல் பதக்கத்தை அவர் கைப்பற்ற்றினார். இதைத்தொடர்ந்து அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. அன்றிலிருந்து இன்றுவரை மகளிர் ஆசிய குத்துச்சண்டை போட்டியில் 5 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப்பதக்கமும், உலக அமெச்சூர் குத்துச்சண்டை போட்டியில் 5 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப்பதக்கமும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கமும், ஒலிம்பிக்கில் ஒரு வெண்கலப் பதக்கமும் அவர் வாங்கிக் குவித்துள்ளார்.

தனது வெற்றியின் ரகசியத்தைப் பற்றி கூறும் அவர், “நான் உயரம் குறைந்தவள் (5 அடி 2 அங்குலம்) என்பது என் பலவீனங்களில் ஒன்று. ஆனால் அந்த பலவீனத்தை போக்கும் வகையில் குத்துச்சண்டை களத்தில் சுறுசுறுப்பாக செயல்படுவேன். முதலில் சில நிமிடங்கள் எதிராளிகளை அதிகம் ஓட விடுவேன். இதனால் அவர்கள் தளர்ந்திருக்கும் நேரமாக பார்த்து சரமாரியாக குத்துகளை விட்டு அவர்களை கலங்கடிப்பேன். குத்துச்சண்டையில் வெல்ல உறுதியான உடலை விட உறுதியான இதயம் தேவை. அந்த இதயம்தான் என்னை வெற்றிபெறச் செய்கிறது. ” என்கிறார்.

பெற்றோரின் எதிர்ப்பு, ஸ்பான்சர்கள் கிடைக்காதது, 3 குழந்தைகளை பராமரிப்பது, ஏறிக்கொண்டிருக்கும் வயது என்று பல சவால்களைக் கடந்து இந்தியாவுக்காக தொடர்ந்து பதக்கங்களை குவித்துக்கொண்டிருக்கிறது அவரது கரங்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக ராஜ்யசபாவிலும் நியமன எம்பியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பிஸியாக இருக்கும் மேரி கோமின் கனவு, அடுத்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத்தர வேண்டும் என்பதுதான். அந்த கனவு நிறைவேற அவரை வாழ்த்துவோம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

19 mins ago

தமிழகம்

22 mins ago

இந்தியா

26 mins ago

இந்தியா

37 mins ago

ஆன்மிகம்

48 mins ago

இந்தியா

54 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கல்வி

1 hour ago

மாவட்டங்கள்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்