அபுதாபி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது இலங்கை அணி

By செய்திப்பிரிவு

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அபுதாபியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 154.5 ஓவர்களில் 419 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. கேப்டன் தினேஷ் சந்திமால் 155, கருணாரத்னே 93, நிரோஷன் திக்வெலா 83 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் அணி தரப்பில் யாசிர் ஷா, முகமது அப்பாஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 162.3 ஓவர்களில் 422 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது.

அசார் அலி 85, ஹாரிஸ் சோஹைல் 76, ஷான் மசூத் 59, ஷமி அஸ்லாம் 51 ரன்கள் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில் ரங்கனா ஹெராத் 5 விக்கெட்கள் வீழ்த்தினார். 3 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் யாசிர் ஷாவின் சுழலில் ஆட்டம் கண்டது. 66.5 ஓவர்களில் வெறும் 138 ரன்களுக்கு இலங்கை அணி சுருண்டது. அதிகபட்சமாக நிரோஷன் திக்வெலா 40, சில்வா 25, மெண்டிஸ் 18 ரன்கள் சேர்த்தனர்.

பாகிஸ்தான் அணி தரப்பில் யாசிர் ஷா 5, முகமது அப்பாஸ் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். இதையடுத்து 136 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணிக்கு சுழற் பந்து வீச்சளார்களான ரங்கனா ஹெராத்தும், திலுருவன் பெரேராவும் இரு முனைகளில் இருந்து கடும் நெருக்கடி கொடுத்தனர். ஷமி அஸ்லாம் 2, அசார் அலி 0, ஷான் மசூத் 7, பாபர் அசாம் 3, ஆசாத் ஷபிக் 20 ரன்களில் வெளியேற பாகிஸ்தான் அணி 36 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தத்தளித்தது.

அடுத்து களமிறங்கிய கேப்டன் சர்ப்ராஸ் அகமது 19, ஹாரிஸ் சோஹைல் 34, ஹசன் அலி 8, முகமது அமிர் 9, முகமது அப்பாஸ் 0 ரன்களில் நடையை கட்ட பாகிஸ்தான் அணி 47.4 ஓவர்களில் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இலங்கை அணி தரப்பில் ரங்கனா ஹெராத் 6, திலுருவன் பெரேரா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். இரு இன்னிங்ஸையும் சேர்த்து ஹெராத் 11 விக்கெட்களை வேட்டையாடினார்.

இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்கள் மைல் கல் சாதனையை எட்டினார் ஹெராத். இந்த சாதனையை உலக அளவில் நிகழ்த்தும் 14-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். 400 விக்கெட்களை கடக்கும் 5-வது சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் ஆவார். முரளிதரன், ஷேன் வார்ன், அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோர் 400 விக்கெட்கள் மைல் கல் சாதனையை படைத்துள்ளனர்.

21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகனாக ரங்கனா ஹெராத் தேர்வானார். இலங்கை அணி மிகக் குறைந்த ரன்களை இலக்காக கொடுத்து வெற்றி பெறுவது இதுவே முதன்முறை. இதற்கு முன்னர் 2009-ல் காலே டெஸ்டில் பாகிஸ்தான் அணிக்கு 168 ரன்களை இலக்காக கொடுத்து வெற்றியை பதிவு செய்திருந்தது. அபுதாபியில் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள பாகிஸ்தான் அணி முதன் முறையாக தோல்வியை சந்தித்துள்ளது. 2-வது டெஸ்ட் வரும் 6-ம் தேதி துபையில் தொடங்குகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

44 secs ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

34 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்