வான்கலந்த மாணிக்கவாசகம் 03: சொற்பதம் கடந்த தொல்லோன்

By ந.கிருஷ்ணன்

திருவாசகம் என்பதற்குப் பொருள் - அழகிய, தெய்வத்தன்மை வாய்ந்த சொற்களால் ஆகிய பாடல் என்கிறார் தமிழ்க்கடல் மகாமகோபாத்தியாய பண்டிதமணி கதிரேசன் செட்டியார். எல்லையற்ற பெருங் கருணையாளனான சிவப் பரம்பொருளை, மனிதன் மனம், மொழி, ஐம்பொறிகள்-ஐம்புலன்கள் ஆகியன கொண்ட ‘மெய்’ எனப்படும் மனிதஉடலால் அறிய முடியாது என்பது ஞானிகள் கண்ட உண்மை. அத்தகைய இறைவனை, திருவாசகம் உணர்ந்து ஓதுவதால் உணரலாம்; அடையலாம். இறை உணர்வு பெறாத மனித உடலிலுள்ள ஊனக் கண்களைக் கொண்டு இறைவனைக் காண இயலாது என்பது திருவாசகச் சான்று.

சொற்பதம் கடந்த தொல்லோன்

கண் முதற் புலனால் காட்சியும் இல்லோன்;

உள்ளத்து உணர்ச்சியில் கொள்ளவும் படான் – திருவாசகம்:3:111-113.

உரை உணர்வுகளான மன, மொழி, மெய் ஆகியன கடந்தால் மட்டுமே இறைஉணர்வு என்னும் கண்ணைப் பெற முடியும். ஆதலால், அத்தகைய ‘இறைஉணர்வு’ என்னும் மாபெரும் ஆற்றலை மனித உடலில் வாழும் சாதாரண மனிதன் யாரும் பெற இயலாது.

நமக்கெல்லாம் அருளவே ‘விதி’ மாற்றப்பட்டது

“கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்” என்ற விதியை இறைவன் தளர்த்தியது, எந்த மனிதனும் இறைவுணர்வை எளிதில் பெறும் ஆற்றல் கொண்ட திருவாசகத்தை மணிவாசகரின் திருவாயால் பாடும்படிச் செய்வதற்காகத்தானே தவிர மணிவாசகர் பொருட்டு அன்று; சாமானியர்களான நமக்கு அருள் புரிவதற்காகத்தான் “இறைபேரின்பத்தைத் தம் அனுபவத்தில் பெற்ற” மணிவாசகரைப் புவியில் சிலநாட்கள் வாழ்ந்து, பின் தில்லை வருமாறு பணித்தான் இறைவன்.

எல்லையற்ற இறையின்பம் என்னும் இறையருட் கண்ணைப் பெற்றுப் பின் அக்கண்ணில்லாத வாழ்வின் ஏக்கமே திருவாசகமாகப் பொழிந்தது. இறையருட் கண்ணைப் பெறாத பிறவிக்குருடர்களான நம் போன்றோருக்கு இறையருட்கண் வழங்க மணிவாசகப் பெருமானால் அருளப்பட்டதே திருவாசகமாகும். கண், வாய், காது முதலிய உடல் கருவிகளைக் கொண்டு ‘இது’, ‘அது’ என்று பொருட்களைச் சுட்டிக்காட்டி, நாம் பெறும் அறிவே ‘உரைஉணர்வு’ கொண்டு அறியும் அறிவு; அதைக் கடந்துசென்று, ‘இறைவனின் அருள்’ என்னும் ‘கண்’ கொண்டே இறைவனைக் காணவும், உணரவும் முடியும். அத்தகைய இறைவனை மனிதவுடலில் வாழும் நம்மைப் போன்றோருக்கு உணர்த்தும் ஆற்றலைத் தமக்குத் தருமாறு மணிவாசகர் இறைவனிடம் வேண்டிப் பெற்றார் என்பதை அவர் வாக்காலேயே இதோ அறிவோம்..

“உரையுணர்வு இறந்து நின்று உணர்வதோர் உணர்வே!

யான் உன்னை உரைக்குமாறு உணர்த்தே!” – திருவாசகம்:22-3

மாதவம் செய்தவர்கள் தமிழர்கள்

நாம் உய்ய, இறையுணர்வை உள்ளீடாகக் கொண்டு மணிவாசகப் பெருமான் அருளிய உயிர் உருக்கும் தமிழ்மறையே திருவாசகம். மெய்யன்புடன் ஓதுவார், கேட்பார், உணர்வார் அனைவருக்கும் பேரின்பப் பரவசம் தந்து இறையனுபவம் தருபவை. எத்துணைத் மாதவம் செய்திருந்தால் நாமெல்லாம் தமிழர்களாகப் பிறந்திருப்போம் என்று எண்ணிப்பாருங்கள். அங்ஙனம் செய்த தவத்தை வீணாக்காமல் திருவாசகம் படித்து, உணர்ந்து நாமெல்லாம் உய்தியடைவோம்.

திருவாசகத்தேனை சுவைக்க மொழி ஆளுமை மட்டுமே போதாது. திருவாசகம் குறித்த பதஉரை, விளக்கஉரை, தெளிவுரை என்று பல அறிஞர்களின் நீண்ட விளக்க நூல்களைப் படித்த பின்னும் நம் இரும்பு மனங்கள் ஏன் உருக மறுக்கின்றன என்பதை நாம் சிந்திக்கவேண்டும். திருவாசகம் கற்பதற்கான நூல் அன்று; இறைவனை உணர்வதற்கான வாசகம். திருவாசகம் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருந்தாலும், மொழி ஆளுமையினால் மட்டும் அதன் ஆன்மாவைத் தொட்டுவிட முடியாது; நிபந்தனையற்ற, எதிர்பார்ப்பில்லாத, வரம்பில்லாத இறையன்பே திருவாசகத்தின் அடிநாதம்-இயல்புமொழி. அந்த அன்புமொழி புரிந்தால்தான் திருவாசகத்திற்கு உருக இயலும்.

கற்றாவின் மனம்போலக் கரைக!

மணிவாசகத்தில் சொல்வதானால், இறைவனின் திருவடி அருளைப் பெற, கற்றாவின் (கன்றை ஈன்ற பசுவின்) மனம் போலக் கசிந்துருக வேண்டும்; கன்றை ஈன்ற பசுவின் மனம், தான் ஈன்ற கன்று வளர்ந்து, தனக்கு ‘இதைச் செய்யும், அதைச் செய்யும்’ என்ற எந்த எதிர்பார்ப்பும் இன்றியே, தன் கன்றின்மேல் கொண்ட அன்பு ஒன்றாலேயே அது உருகுகின்றது; “உன் ஒலிக்கின்ற கழலையுடைய திருவடிமேல் அன்பு கனிந்து கசிந்து உருகும் மனத்தை எனக்கருளவே யான் உன்பால் வேண்டுகிறேன்” என்று குற்றாலத்துறையும் இறைவனிடம் மனமுருகி வேண்டுகிறார் மணிவாசகர்.

உற்றாரை யான் வேண்டேன்; ஊர் வேண்டேன்; பேர் வேண்டேன்;

கற்றாரை யான் வேண்டேன்; கற்பனவும் இனி அமையும்

குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா! உன் குரைகழற்கே

கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே! – திருவாசகம்:39-3

கன்றை இழந்த கறவை மாட்டிடம் நாம் எப்படிப் பால் கறப்போம் என்பதைச் சற்று சிந்திப்போம். வைக்கோல் பொம்மைக் கன்றுக்குட்டியைக் காட்டித்தானே? “மாணிக்க வாசக! சிலநாட்கள் இங்கு வாழ்ந்து, பின் தில்லைக்கு வந்து என்னைப் பார்” என்று இறைவன் மணிவாசகரைப் பிரிந்ததால்தான் மணிவாசகரின் மனம் ‘கற்றா’வின் மனம்போலக் கசிந்துருகியது; நமக்கான ‘திருவாசகம் கிடைத்தது. இதுவே இறைவன் நமக்காக நிகழ்த்திய திருவிளையாடல்.

எவரொருவர் திருவாசகச் சூழலில் தன்னைப் பொருத்தி மாணிக்கவாசராகவே உருகிக் கரைகிறாரோ, அவருக்கு இறைவனை அடைவது மிக எளிது. இதைத்தான் வள்ளலார் “ “நான்” கலந்து பாடுங்கால்” என்று நமக்குச் சொன்னார். திருமூலதேவர் “ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்” என்றார்.

மாணிக்கவாசகரைப் பலப்பல கடினமான சோதனைகளும், துயரங்களும் பெருமழைபோல் தாக்கின. அவைகளின் காரணமாக, உலகின் பலதரப்பட்ட குறைபாடுள்ள மனிதர்களின் குற்றங்களைத் தாமே செய்ததாகத் தம்பால் ஏற்றிக்கொண்டார் மணிவாசகர்; அத்துன்பச்சூழலில், அவர்களாகவே மாறிப்போய் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கியதால் பிறந்தன பல்வேறுவகைத் திருவாசகப் பாடல்கள்.

திருவாசகப் பாடல்களில் கரையும் குறைபாடுள்ள பலதரப்பட்ட மனிதர்கள், “இதோ இப்பாடல்கள் எமக்காகவே படைக்கப்பட்டன; “இவை நமக்கானவை” “ என்று உணர்வார்கள், கடைத்தேறுவார்கள் என்பது உறுதி. மாணிக்கவாசகர் முதன் முதலில் சுவைத்த இறையின்பம் குறித்து விரிவாக அறிய நமக்கெல்லாம் ஆசை உண்டல்லவா? தாம் பெற்ற முதல் இறைஅனுபவத்தை மணிவாசகர் நம்முடன் அணுஅணுவாகப் பகிர்ந்துகொள்வதை அடுத்த வாரம் காண்போம்.

தொடர்புக்கு:krishnan@msuniv.ac.in
(வாசகம் தொடரும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

உலகம்

20 mins ago

வணிகம்

37 mins ago

சினிமா

59 mins ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

6 hours ago

மேலும்