திருத்தலம் அறிமுகம்: ஸ்ரீ வைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோயில் - கள்வனுக்கு அடைக்கலம் தந்த பெருமான்

By குள.சண்முகசுந்தரம்

அடைக்கலம் கேட்டு வந்த கள்வனைக் காப்பாற்ற திருவைகுண்டநாதனே கள்வன் அவதாரம் எடுத்த திருத்தலம் இது.

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஸ்ரீ வைகுண்டம் அருள்மிகு கள்ளபிரான் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. முன்பொரு காலத்தில் திருவைகுண்டம் மாநகரில் வீரகுப்தன் என்ற பெரு வணிகர் ஒருவர் இருந்தார். அவருக்குக் கால தூசகன் என்று ஒரு மகன் இருந்தான். தந்தை பெரு வணிகராக இருந்து பொருள் சேர்த்தபோதும் மகன் திருட்டுத் தொழிலை வழக்கமாக கொண்டான்.

கள்வன் கால தூசகன்

ஒவ்வொரு நாளும் கால தூசகன் தொழிலுக்குப் போவதற்கு முன்பாக திருவைகுண்டநாதப் பெருமாளிடம் வந்து, “திருடப் போகும் இடங்களில் யார் கண்ணிலும் படாதவாறு என்னை நீதான் காக்க வேண்டும். அப்படிக் காப்பாற்றினால், திருட்டுப் பொருளில் பாதியை உனக்குக் காணிக்கையாகத் தருவேன்” என்று வேண்டிக் கொள்வான். அதன்படியே யார் கண்ணிலும் படாதவாறு திருட்டுத் தொழிலைச் செய்துவந்தவன், திருடும் பொருளில் பாதியைப் பெருமாளுக்குக் காணிக்கையாகத் தந்துவிடும் நாணயஸ்தனாகவும் இருந்தான்.

ஒரு சமயம் மணப்படை ராஜ்ஜியத்தின் அரண்மனைக் குள்ளும் புகுந்து அங்கிருந்த பெரும் பொக்கிஷங்களை கொள்ளையடித்தான் கால தூசகன். அந்தச் சம்பவத்தின் போது கால தூசகன் தப்பிவிட்டாலும் அவனைச் சேர்ந்த கூட்டத்தினர் அரண்மனைக் காவலாளிகளிடம் சிக்கிக் கொண்டனர். அவர்களைக் கொண்டே கால தூசகனைப் பற்றித் தெரிந்துகொண்ட அரசன், அவனையும் பிடித்துவர உத்தரவிட்டான்.

கள்வனாக மாறிய பெருமாள்

இதைத் தெரிந்துகொண்ட கால தூசகன், ’’இதுவரை நான் கொள்ளையடித்த பொருட்கள் அனைத்திலும் உனக்குச் சரிபங்கு கொடுத்திருக்கிறேன். நான் நடத்திய கொள்ளைச் சம்பவங்களில் உனக்கும் பங்கிருக்கிறது. அப்படியிருக் கையில் நான் மட்டும் அரண்மனைக் காவலர்களிடம் சிக்கிக்கொள்வதா? திருட்டுச் சம்பவங்களை நிகழ்த்தியபோது என்னை யார் கண்ணிலும் படாமல் காப்பாற்றிய நீதான் இப்போதும் என்னைக் காப்பாற்ற வேண்டும்” என்று திருவைகுண்டப் பெருமாளிடம் சரணடைந்தான்.

பணத்திற்கு நான்கு தாயாதிகள்

சரணடைபவரைக் கவசம் அளித்துக் காக்கும் எம்பெருமான், கால தூசகனுக்கும் அடைக்கலம் கொடுத்தார். அவனுக்குப் பதிலாகத் தானே அரண்மனைக்குக் கால தூசகனாக சென்றார். வந்திருப்பது யார் என்று தெரியாத அரசன், “நீயும் உன் சகாக்களும் எனது அரண்மனைக்குள்ளேயே அத்துமீறி நுழைந்து களஞ்சியத்தைக் கொள்ளையடித் திருக்கிறீர்கள். ஆனால், உன்னைப் பார்த்தால் எனக்கு கோபம் வர மறுக்கிறது; உன்மீது கருணையே மிஞ்சுகிறது. உண்மையில் நீ யார்?’’ என்று கேட்டான்.

அதற்கு எம்பெருமான், “மன்னா உனது தவறை இன்னும் நீ உணரவில்லை. மக்களுக்காக நல்ல காரியங்களுக்குச் செலவிடப்பட வேண்டிய அரண்மனைச் செல்வங்கள் அனைத்தும் உன்னாலும் உன்னைச் சுற்றியுள்ளவர்களாலும் வீணாக செலவிடப்படுகிறது. பணத்திற்கு தர்மம், திருடன், அக்னி, அரசன் என நான்கு தாயாதிகள் (பங்காளிகள்) உண்டு. இதில் அரசனானவன் தர்மத்தைச் செய்வித்துத் தன் குடிமக்களைக் காக்க வேண்டும். நீ அவ்வாறு தர்மம் காக்கத் தவறிவிட்டாய். அதை உனக்கு உணர்த்தவே நான் இந்தத் திருவிளையாடலை நடத்தினேன்” என்று சொல்லி மறைந்தார்.

தனது தவறை உணர்ந்த அரசன் அன்று முதல், அரண்மனைச் செல்வங்களைக் கொண்டு இயன்ற அளவு தன் குடிமக்களுக்கு தர்ம காரியங்களைச் செய்ய ஆரம்பித்தான். அதேபோல் அன்றிலிருந்து, கள்வனைக் காத்து அரசனுக்கு ஞானத்தையும் தெளிவையும் கொடுத்த காரணத்தால் திருவைகுண்டபதி பெருமான் கள்ளபிரான் (சோரநாதன்) எனப் பெயர் விளங்கினார்.

நவ திருப்பதிகளில் முதல் திருப்பதி

கள்ளபிரான் சுவாமி திருக்கோயில் நவதிருப்பதிகளில் முதலானதும் 108 திவ்ய தேசங்களில் 54-வது திவ்யதேசமும் ஆகும். ‘புளியங்குடி கிடந்து வரகுண மங்கையில் இருந்து வைகுந்தத்துள் நின்று’ என நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற இத்தலம் சூரியனுக்கான தலம் ஆகும். இங்கே எம்பெருமான், சந்திர விமானத்தின் கீழ் ஆதிகேசன் குடைபிடிக்க நான்கு கரங்களுடன் மார்பில் மகாலட்சுமியைத் தாங்கி கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி கொடுப்பது தனிச்சிறப்பு.

சித்திரை பிரம்மோற்சவம்

ஆனி ஜேஷ்டாபிஷேகம், புரட்டாசி சனிக்கிழமைகள், ஐப்பசி அசுவதி கருட சேவை, திருக்கார்த்திகை திருநாள், மார்கழி அத்யயனம், தையில் பெருமாள் அவதரித்த அனுஷ நட்சத்திர திருநாள் உள்ளிட்ட நாட்கள் கள்ளபிரானுக்கு விழாக் காலங்கள்.

சித்ரா பவுர்ணமி மற்றும் ஐப்பசி பவுர்ணமியின்போது சூரிய உதயத்தில் மூலவர் திருவைகுண்ட நாதரின் திருவடிகளைத் தொட்டு வணங்குவதுபோல் கருவறைக்குள் வந்து விழுகிறது சூரிய ஒளி. சிவ தலங்களில் இத்தகைய சூரிய பூஜை பல கோயில்களில் நடக்கிறது. ஆனால், பெருமாளுக்கு சூரியன் நமஸ்காரம் செய்யும் திருத்தலம் இது மட்டுமே. இதனால், சூரியன் சம்பந்தப்பட்ட நவக்கிரக தோஷங்கள் மற்றும் பித்ரு தோஷங்கள் அனைத்தும் இத்திருத்தலத்தில் வந்து கள்ளபிரானை வழிபடுவதால் காணாமல் போகும் என்பது நம்பிக்கை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

ஜோதிடம்

9 hours ago

மேலும்