அத்தி வரதர் நின்ற கோலம் முதல் நாள்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் நின்ற கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர்

By கே.சுந்தரராமன்

| அத்தி வரதர் வைபவம் 2019 மீள் பார்வை பதிவுகள் |

அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தில் 32-ம் நாளில் அத்தி வரதர் வெண் பட்டு உடுத்தி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலுக்குள் உள்ள அனந்த சரஸ் குளத்தில் இருந்து அத்திவரதரை கடந்த ஜூலை 1-ம் தேதி வெளியே எடுத்தனர். அத்திவரதர் பக்தர்களுக்கு 31 நாட்கள் சயனக்கோலத்தில் அருள்பாலித்து வந்தார். சயனக்கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதரை சுமார் 40 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

கத்தரிப்பூ நிற கரையுடன் கூடிய வெண்பட்டு உடுத்தி அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்ததார். அதிகாலை 5.15 மணி முதல் பொதுமக்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர். மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, மாவட்ட வருவாய் அலுவலர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் நின்ற கோலத்தில் இருந்த அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கும் நிகழ்வையொட்டி அவர் நின்ற நிலையில் இருக்கும் புகைப்படங்கள் பலருக்கு தனியார் சிலர் மூலம் இலவசமாக வழங்கப்பட்டன. நீர், மோர் தானங்கள், அன்னதானங்கள் வழங்கும் நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே நடைபெற்றன.

போக்குவரத்தில் கட்டுப்பாடு

அத்திவரதர் நின்ற கோலத்தில் நிற்கும் நிகழ்ச்சிக்கு அதிக அளவில் மக்கள் வரலாம் என்ற எதிர்பார்ப்பால் போக்குவரத்தில் கடும் கெடுபிடிகள் விதிக்கப்பட்டன. ரங்கசாமி குளம் வரை மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. அதன் பிறகு வரதராஜப் பெருமாள் கோயில் நோக்கிச் செல்லும் மோட்டார் சைக்கிள் உட்பட எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

தினந்தோறும் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம்

அத்திவரதர் விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தினம்தோறும் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பணீந்திரரெட்டி தெரிவித்தார்.

அத்தி வரதர் வைபவத்தையொட்டி இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. செட்டித் தெரு சேவா பாரதி அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பணீந்திர ரெட்டி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அத்தி வரதரை தரிசித்துவிட்டு வந்த பொதுமக்கள் பலருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அன்னதானம் வழங்கிய பின் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திரரெட்டி மற்றும் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அத்தி வரதரை தரிசித்துவிட்டு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் தானம் வழங்கும் திட்டத்துக்கு தமிழக முதல்வர் கே.பழனிச்சாமி ரூ.1 லட்சம் நிதி உதவி செய்துள்ளார். இந்த திட்டத்துக்காக 46 தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளோம். அண்ணா அவென்யூ மற்றும் வாழைத்தோப்பு பகுதியில் பொதுமக்கள் ஓய்வெடுக்க அமைக்கப்பட்டுள்ள இடத்தில் 30 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க திட்டமிட்டுள்ளோம்.

இந்த அன்னதானத்துக்கு தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலிருந்து யார் வேண்டுமானாலும் நன்கொடை அளிக்கலாம். தினம்தோறும் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கத் திட்டமிட்டுள்ளோம். கிழக்கு கோபுரம் பகுதியில் 30 ஆயிரம் பக்தர்களுக்கும், மேற்கு கோபுரம் பகுதியில் 20 ஆயிரம் பக்தர்களுக்கும், கோயில் சுற்று வட்டாரப் பகுதியில் 50 ஆயிரம் பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படும். அன்னதானத் திட்டத்துக்கு ஆன்லைன் மூலம் நன்கொடை அளிக்கலாம் என்று அறிவித்த சில நாட்களிலேயே ரூ.10 லட்சம் நன்கொடை வந்துள்ளது.

நின்றகோலத்தில் அதிக பக்தர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பின் அடிப்படையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது 7,700 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றனர்.

48 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற அத்தி வரதர் வைபவம் - 2019

**

2019-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி வரை சயன கோலத்தில் அருள்பாலித்த அத்தி வரதர் ஆகஸ்ட் 1 முதல் 16-ம் தேதி வரை நின்ற கோலத்தில் அருள்பாலித்தார். பின்னர் ஜூலை 17-ம் தேதி மீண்டும் அனந்த சரஸ் திருக்குளத்திலேயே வைக்கப்பட்டார்.

**

பிரம்மதேவன் போற்றிய பேரருளாளன், அத்தி வரதர் வரலாறு, காஞ்சி வரதராஜர் கோயில் திருவிழாக்கள், சந்நிதிகள், காஞ்சிபுரத்தைச் சுற்றி உள்ள திவ்யதேசங்கள், காஞ்சி வரதரும் கூரத்தாழ்வானும், காஞ்சி வரதரும் ராமானுஜரும், காஞ்சி வரதரும் வேதாந்த தேசிகரும், காஞ்சி வரதரும் திருக்கச்சி நம்பிகளும் - ஆகிய தலைப்புகளில் கட்டுரைகளும், அத்தி வரதர் வைபவம் - 2019 – ஒவ்வொரு நாள் நிகழ்வுகள் அனைத்தும் விரைவில் நூல் வடிவில்....

**

படித்து அத்தி வரதர் அருள் பெறுவோம்..

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்