திருமாலுக்கு சுதர்சனம் வழங்கிய மணிகண்டீசுவரர்

By கீழப்பாவூர் கி.ஸ்ரீ.முருகன்

மகா கும்பாபிஷேகம்: ஏப்ரல் 25

திருமால், அஞ்சனாட்சி சமேத மணிகண்டீசுவரரை வணங்கி சுதர்சனம் என்னும் சக்ராயுதத்தைப் பெற்ற இடம் காஞ்சிபுரம் அருகிலுள்ள திருமால்பூர்.

குபன் என்ற அரசன் திருமால் பக்தன். அவனுக்கும் ததீசி என்ற முனிவருக்கும் ஒரு முறை பகை ஏற்பட்டது. குபன் திருமாலிடம் முறையிட்டான். திருமால், ததீசி முனிவர் மீது தன் சக்ராயுதத்தை ஏவினார். முனிவரின் வஜ்ர உடலைத் தாக்க முடியாமல் சக்கராயுதம் வாய் மடிந்தது. அதனால் திருமால், இத்தலத்தை அடைந்து இங்குள்ள அம்பிகை பூஜித்த மணல் லிங்கத்தை ஆயிரம் தாமரை மலர்களால் நாள்தோறும், அர்ச்சித்து சக்ராயுதம் அருள வேண்டினார்.

கண்மலர் அர்ப்பணம்

சிவபெருமான், அவரது பக்தியை சோதிக்க வேண்டி, ஒரு நாள் திருமால் கொணர்ந்த ஆயிரம் தாமரை மலர்களில் ஒன்றை மறைத்து அருளினார். திருமால் அர்ச்சிக்கும்போது ஒரு மலர் குறைவதைக் கண்டு, தனது கண்ணைப் பறித்து கண்மலரால் இறைவன் திருவடியில் அர்ச்சித்தார். இறைவன் உளமகிழ்ந்து திருமால் முன் தோன்றி “தாமரை மலருக்காக உன் கண் மலரை எடுத்து அர்ச்சித்தமையால் உனக்குத் தாமரை போலும் கண் கொடுத்தோம். இனி பதுமாஷன் எனப் பெயர் பெறுவாயாக, நீ வேண்டிய சக்ராயுதத்தை அருளினோம்” என காட்சி நல்கினார்.

திருமால் இறைவனை வணங்கி, “ என் போன்று ஆயிரம் திருநாமங்களைக் கூறி மலர் தூவி வழிபடுவோருக்கு எண்ணிய வரத்தை அருள வேண்டும்” என வரம் வேண்டினார். சிவபெருமானும் அவ்வாறே வரம் அருளினார் என காஞ்சி புராணம் கூறுகிறது. அன்று முதல் இத்தலம் “திருமாற்பேறு” என்று வழங்கப்பட்டது. தற்போது மருவி திருமால்பூர் என்றழைக்கப்படுகிறது.

தேவாரப் பாடல்பெற்ற தொண்டை மண்டலத் திருத்தலங்கள் 32-ல் இது 11-வது தலம் ஆகும். திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்களும் திருநாவுக்கரசர் நான்கு பதிகங்களும் இத்தலத்திற்கு அருளியுள்ளனர்.

நின்ற நிலையில் நந்தி

நந்திக்கு விசேஷத் தலமாகவும் இவ்வாலயம் விளங்குகிறது. பார்வதிதேவியின் சிவபூஜைக்கு துணையாக இருந்ததால் அதிகார நந்தி (கயிலாய நந்தி) நின்ற நிலையில் காட்சி தருகிறார்.

ராமாயணத்தோடு தொடர்புடையது இந்த ஆலயம். ராவணன் இத்தலத்திலுள்ள இறைவனை வழிபட வரும்போது நந்தி இருப்பதை கவனிக்காமல் உள்ளே செல்கிறார். ராவணனைப் பார்த்து “ஈசன் தியானத்தில் உள்ளார். போகாதே!” என்று நந்தி தடுத்தார். அவரை ராவணன் சபித்துவிட வானர முகமாக நந்தியின் முகம் மாறிவிடுகிறது. சபிக்கப்பட்ட முகத்தால் இராவணனுக்கு அழிவு என்று நந்தி சபிக்கிறார். எனவே நின்ற நிலையில் இருக்கும் நந்திகேஸ்வரரை வணங்கி, பின் சுவாமியை தரிசிப்பது கயிலாய தரிசனம் பெற்ற புண்ணியம் ஆகும்.

1500 ஆண்டுகள் பழமை

புராணச் சிறப்புமிக்க இந்த ஆலயம் முதலாம் பராந்தகச் சோழ மன்னனால் நிர்மாணிக்கப்பட்டது. 1500 ஆண்டுகள் பழமையானது. மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம், விருட்சம் ஆகிய நான்கு அம்சங்களால் சிறப்பு பெற்றது.

மூலவர் மணிகண்டீசுவரருக்கு எதிரில் திருமால் ஈசனை வணங்கிய நிலையில் நிற்கிறார். உற்சவர் திருமால் கையில் தாமரை மலரும் கண்ணும் உள்ளன. அம்பாள் அஞ்சனாட்சி, அஷ்டலஷ்மியுடன் கூடிய பீடத்தில் உள்ளார். பௌர்ணமிதோறும் அம்பாளுக்கு ஊஞ்சல் சேவை நடக்கிறது. மீன ராசிக்காரர்கள் அம்பாளை வழிபடச் சகலதோஷமும் நீங்கும்.

வழிபடும் முறை

சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கான தலம் இது. இறைவனுக்கு சிவப்புத் தாமரை அணிவித்து நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடுவது இங்குள்ள தரிசன முறையாக உள்ளது. பக்தர்களுக்கு சடாரி சார்த்தி, தீர்த்தம் தருவது தனிச்சிறப்பு.

திருமால்பூர் தரிசனம் செய்வோர் இறைவனை எட்டு நாமங்கள் சொல்லி வழிபடுவோர், வழிப்போக்கராக ஒரு கணப்பொழுதேனும் இத்தலத்தில் தங்கியோர், நினைத்தோர் ஆகியோருக்கு முக்தி கிட்டும். இப்பிறவியில் நினைத்தது நிறைவேறும். சந்திரன் பூஜித்த இத்தலத்தை வழிபடுவோருக்கு உலகிலுள்ள அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு என்பது ஐதீகம்.

மகாமகம், ஆடிப்பூரம், கார்த்திகை தீபம், ஆருத்ரா, ஆனித் திருமஞ்சனம் ஆகியன இவ்வாலயத்தின் முக்கிய விழாக்கள் வரும் 25.04.2016 அன்று மகா கும்பாபிஷேகம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பிடம்

செங்கல்பட்டு அரக்கோணம் செல்லும் ரயில் மார்க்கத்தில் திருமால்பூர் ரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே 4 கி.மீ, காஞ்சிபுரம் 12 கி.மீ. அரக்கோணம் 15 கி.மீ. தொலைவில் இத்திருக்கோயில் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

சினிமா

14 mins ago

இந்தியா

49 mins ago

தமிழகம்

17 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்