கல்கருடசேவை: நறையூர் நின்ற நம்பி

By எஸ்.ஜெயசெல்வன்

டிசம்பர் -17

பக்தியில் ஆழ்ந்த ஆழ்வார்கள் ஷேத்திரங்கள் தோறும் சென்று பெருமாளைப் பாடி பரவசம் கொண்டனர். அந்தவகையில் திருமங்கையாழ்வாரால் பாடப்பெற்ற சிறப்பு மிக்கது திருநறையூர் எனும் நாச்சியார்கோவில் நிவாசப்பெருமாள் கோயில்.

தேன் பெருக்கெடுத்தோடும் ஊர்

திருமாலின் 108 திவ்ய தேசங்களில் 20ஆவது திவ்யதேசம் திருநறையூர். திரு-இலக்குமி, நறை-தேன். திருவாகிய இலக்குமி தேவிக்குத் தேன் அனைய இனிய இருப்பானது பற்றி திருநறையூர் என்றும் தேனோடு வண்டாலும் திருச்சோலைகளின் வளத்தால் தேன் பெருக்கெடுத்து ஓடும் ஊரானதால் நறையூர் என்றும் பெயர் பெற்றதாகத் தலவரலாறு சொல்கிறது.

சண்டன், ஹேமன் எனும் அரக்கர்கள் நாட்டிற்குப் பல தீங்குகள் செய்து வந்தனர். அவர்களை அழிக்க பெரியதிருவடி (கருடன்) இந்திரன் அருளோடு வந்தார். மணமிக்க மகாமேருமலையின் சிகரம் ஒன்றைப் பிடுங்கி எறிந்து அவர்களை அழித்தருளினார். மரங்களோடு மலர் நிறைந்து மணம் வீசிய அம்மலைத் துண்டம் ஒன்று இத்தலத்தில் வந்து விழுந்தமையால் இத்தலம் சுகந்தகிரி என்னும் பெயர் பெற்றது.

திருப்பதிக்கு இணையான திருத்தலம்

கோயில் மூலஸ்தானத்திற்குள், திருக்கோலமாகக் காட்சியருள்கிறார் மூலவரான நிவாசப் பெருமாள். இவர் திருமங்கையாழ்வாருக்கு ஆச்சாரியனாக இருந்து முத்திராதானம் செய்து அருளியவர். மூலவரை ஆழ்வார், “நறையூர் நம்பி” என்று குறிப்பிடுகிறார். இத்தலம் திருப்பதிக்கு இணையாகப் போற்றப்படுகிறது. “தேன் கொண்ட சாரல் திருவேங்கடத்தானை நான் சென்று நாடி நறையூரில் கண்டேனே” என்று மங்கையாழ்வார் திருப்பதிப் பெருமானை இத்தலத்தில் நேரில் கண்டதாகப் பாசுரம் பாடியுள்ளார்.

எனவே இத்தலத்திலுள்ள திருமாலைத் தரிசித்தால் திருப்பதி பெருமாளைத் தரிசித்த பலன் கிட்டும் என்கிறார்கள். தாயாருக்குத் தனி சன்னதி இல்லை. மூலவருடன் தாயாரும் சேர்ந்து மூலவராக எழுந்தருளியுள்ளார். தாயார் திருநாமம் வஞ்சுளவல்லி. இத்திருநாமம் வஞ்சு என்ற நீர்நொச்சி மரத்தில் அடியில் இவரைக்கண்டு மகளாக ஏற்று வளர்த்த மேதாவி முனிவரால் இடப்பட்டதாகும்.

கல் வடிவிலான கருடபகவான்

கருடபகவான் மூலஸ்தானத்திலிருந்து சிறிது கீழே வடபால் தெற்கு நோக்கி அமர்ந்து அருள்கிறார். இவர்க்கு எந்தத் தலத்திலும் இல்லாத பெருஞ்சிறப்பு இத்தலத்திலுள்ளது. இவர் சாளக்கிராமத்திருமேனியர்(கற்சிலை வடிவானவர்). இங்கு நிகழும் கல்கருட பகவான் புறப்பாடு பிரசித்தி பெற்றது. கல்கருட பகவான் எழுந்தருளும் போது முதலில் நால்வர் சுமந்து வருவர்.

பின் எட்டுபேர் சுமக்க, படிப்படியாக 16 பேர், 32 பேர், 64 பேர், 128பேர் என சுமப்போர் எண்ணிக்கைக் கூடிக் கொண்டேபோகும். இறுதியாக சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வருவார். மாலை ஆறு மணிக்குப் புறப்படும் பகவான் விடியற்காலையில் தான் திருக்கோயிலை அடைவார். முதலில் நான்கு பேர் சுமக்கும் வலிமை கொண்ட பகவான், பின்னர் நூற்றுக்கணக்கானோர் சுமக்கும் அளவிற்கு வலிமை பெறுகிறார். பக்தி பரவசப் பெருக்கைக் காணத் திரள்கிறது பக்தர்கள் கூட்டம்.

மணிமாடக்கோயில்

கோச்செங்கசோழன் எழுபது சிவாலயங்களைக் கட்டிய பிறகு நிவாசப் பெருமாளின் ஆணைப்படி 71-ம் வைணவக்கோயிலாக மணி மாடக் கோயில் அமைப்பில் இக்கோயிலைக் கட்டினான். இதனைத் திருமங்கையாழ்வார் தமது பாசுரத்தில், “செங்கணான் கோச்சோழன் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம்” என்று என்று குறிப்பிடுகின்றார்.

மார்கழிப் பெருவிழா

நறையூர் நம்பியெம் பெருமாளுக்குப் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. மார்கழி மாத சுக்ல பட்சத்தில் வரும் முக்கோடித் தெப்பத் திருவிழா சிறப்புடையதாகும். இத்திருவிழாவின் ஓர் அங்கமாக கல்கருட சேவைப் புறப்பாடு சிறப்பாக நடைபெறுகிறது. இத்தலம் கும்பகோணம் திருவாரூர் பேருந்து மார்க்கத்தில் கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

45 mins ago

கல்வி

59 mins ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்