திருத்தலம் அறிமுகம்: திருநெடுங்களநாதர் திருக்கோயில் - கருவறை ஒன்று விமானம் இரண்டு

By குள.சண்முகசுந்தரம்

கோயில் கருவறைக்கு மேலே பெரும்பாலும் ஒரு விமானம் இருப்பதே வழக்கம். ஆனால், திருநெடுங்களநாதரின் கருவறைக்கு தட்சண விமானம், கைலாய விமானம் என இரண்டு விமானங்கள். காசிக்கு அடுத்தபடியாக இங்குதான் இந்தச் சிறப்பு என்கிறார்கள்.

திருச்சியை அடுத்த துவாக்குடிக்கு ஐந்தாவது கிலோ மீட்டரில் இருக்கிறது திருநெடுங்குளம். அந்தக் காலத்தில் இந்தப் பகுதி முழுவதும் பசுமை படர்ந்த கழனிகளாய் இருந்தன. அதனாலேயே இது திருநெடுங்களம் என்று அழைக்கப்பட்டது. பிற்பாடு அதுவே மருவிப்போய் திருநெடுங்குளமானது. திருநெடுங்களம் குறித்து ஒரு ஐதீகம் உண்டு. முந்தைய காலத்தில் திருநெடுங்களம், வாழவந்தார் கோட்டை ஜமீனின் கட்டுக்குள் இருந்தது. ஜமீனுக்கு சொந்தமான காராம் பசு மாடுகள் திருநெடுங்குளம் காட்டுப் பகுதியில் மேய்ச்சலுக்கு வருவதுண்டு. அதில் ஒரு பசு தினமும் மாலையில் வீடு திரும்பும் போது பால் வற்றிப்போன மடியோடு திரும்பியது.

லிங்கத்துக்கு பால் சுரந்த பசு

இந்த மாயத்தை அறிவதற்காக ஜமீனின் ஆட்கள் ஒரு நாள் அந்த பசுவை மறைந்திருந்து கண்காணித்தனர். அப்போது அது ஒரு புதருக்கு அருகில் போய் நின்று தானாகவே பாலை அந்தப் புதரில் சுரந்தது. ஆச்சரியப்பட்ட ஜமீன் ஆட்கள், பசு பாலைச் சுரந்த இடத்தில் மண்வெட்டி கொண்டு வெட்டினார்கள். பூமிக்குள் சுயம்புவாய் முளைத்திருந்த சிவலிங்கம் மண்வெட்டியால் வெட்டுப்பட. பூமிக்குள்ளிருந்து பால் பீறிட, விவரம் தெரிந்து ஓடிவந்த ஜமீன்தார், அந்த இடத்திலேயே சிவனுக்குச் சிறியதாய் ஒரு ஆலயம் எழுப்பினார் என்று கூறப்படுகிறது.

சிவபெருமான் மீது காதல் கொண்ட பார்வதி தேவி, அவரைக் கரம்பிடிப்பதற்காக இந்த இடத்தில் கடுந்தவம் புரிந்தார். தவத்தை மெச்சிக் காட்சிகொடுத்த சிவன், பார்வதி தேவியைக் கைப்பிடித்த இடமும் இதுதான் என்கிறது புராணம். உமையொரு பாகனாகிய ஈசன் கருவறைக்குள் தேவிக்கு தனது இடப்பாகத்தை ஒதுக்கிக் கொடுத்து வலது பக்கமாய் சற்றுத்தள்ளி அமர்ந்திருக்கிறார். ஐதீகப்படி இங்கே தேவியும், சிவனுக்குப் பக்கத்தில் ஒப்பில்லாநாயகி அரூபமாய் அமர்ந்திருக்கிறார். அதனால்தான் இருவருக்குமாய் சேர்த்து இரண்டு விமானங்கள் கட்டப்பட்டுள்ளன.

தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்

காவிரிக்கு தென்கரையில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் எட்டாவது திருத்தலம் இது. ஒருமுறை அகத்தியரே இங்கு வந்து வழிபட்டதாகவும் நம்பிக்கை உள்ளது. வடக்குப் பிராகாரத்தில் உள்ள அகத்தியர் சந்நிதிக்கு எதிரே ஒரு கிணறு உள்ளது. இதை அகத்திய தீர்த்தம் என்கிறார்கள். சிவனுக்குப் பூஜை செய்வதற்காக அகத்தியர் தனது கட்டை விரலை பூமியில் அழுத்தியதால் வந்ததாம் இந்தக் கிணறு. இதில், கையால் எட்டித் தொட்டுவிடும் தூரத்தில் எப்போதும் தண்ணீர் நிறைந் திருக்கும்.

திருநெடுங்களநாதருக்கு மாதுளை முத்துக்கள் கொண்டு அபிஷேகம் செய்தால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை. இத்திருத்தலத்தில் சிற்ப உரல் ஒன்று உள்ளது. சிவபெருமான் தவத்தில் இருந்த போது இந்த உரலில் விரலி மஞ்சள் இடித்து அதைக் கொண்டு உடம்பில் பூசிக் குளித்து சிவபெருமானுக்கு பூஜை செய்தாராம் பார்வதி தேவி. இந்த உரலில் விரலி மஞ்சள் இடித்து ராகு காலத்தில் ஒப்பிலாம்பிகைக்கு அபிஷேகம் செய்தால் பெண்களின் திருமணத் தடைகள் நீங்கும் என்பது இப்போது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்