பக்தியும் இசையும் இணையும் புள்ளி

By வா.ரவிக்குமார்

கர்னாடக இசைப் பாடகர்களில் தனக்கெனத் தனி முத்திரை பதித்த எம்.டி.ராமநாதன், புகழ்பெற்ற கதாகாலட்சேபக் கலைஞர் பனிபாய் ஆகியோரைப் பற்றி ஆவணப்படங்களை எடுத்திருப்பவர் சௌதாமினி. ஆலயங்களின் வழிபாடுகளின்போதும் சடங்குகளின்போதும் வாசிக்கப்படும் மங்கள வாத்தியமானப் பாரம்பரியப் பெருமை மிக்க நாகஸ்வரத்தைப் பற்றி, கோயில் நாகஸ்வரம் (The Temple Nagaswaram) என்னும் ஆவணப்படத்தை, இந்திய அரசின் திரைப்படப் பிரிவுக்காக 2013-ல் எடுத்திருக்கிறார் சௌதாமினி.

இந்தப் படம் கடந்த ஆண்டில் FID: Marseille திரைப்பட விழாவிலும் கலந்துகொண்டிருக்கிறது. பக்தியும் நாதமும் இரண்டறக் கலக்கும் பல செய்திகள் ஆவணப்படத்தில் பளிச்சிடுகின்றன. அதிலிருந்து சில பொறிகள்:

நாகஸ்வரம் செய்யப்படும் மரத்துக்கும் புராணத்துக்கும் இருக்கும் தொடர்பு, நாகஸ்வரக் கலைஞர்கள் ஆலயத்தில் நடக்கும் ஒவ்வொரு சடங்கின்போதும் வாசிக்கும் முறைகள், நாகஸ்வரக் கலைஞர்கள், நாகஸ்வரத்தை உருவாக்கும் கலைஞர்கள் என ஆவணப்படம் முழுதும் காட்சிகள் விரிகின்றன. “நாகஸ்வரம் உருவாக்கம் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நுணுக்கம் இருக்கிறது” என்கிறார் திருவாவடுதுறையைச் சேர்ந்த சக்திவேல் ஆச்சாரி.

புராணத் தொடர்பு

“நாகஸ்வரம் செய்யப்படும் ஆச்சா மரம், ராமாயணக் காலத்திலேயே இருந்த மரம். ராமாயணக் காலத்துல இதுக்கு `மறாமரம்’னு பேரு. வாலியோட உயிர் ஏழு மறாமரத்தில் இருந்தது. ராமன் ஒரே பாணத்துல ஏழு மரங்களையும் தொளைக்கிறாரு. இப்படித்தான் வாலி வதம் நடக்கிறது. அத்தகைய வலிமையுள்ள அந்த மரம்தான் ஆச்சா மரம். அந்த ஆச்சா மரத்தில்தான் நாகஸ்வரம் செய்கிறோம். நாகஸ்வர உருவாக்தில் இருக்கும் தாத்பர்யங்கள் ராமாயணத்தோடு கலந்துதான் இருக்கு” என்கிறார் ஆவணப்படத்தில் பேசும் செந்தில் ஆச்சாரி.

அப்பு, சுப்புவுக்கு கிடைத்த கவுரவம்

திருவாரூரில் நாகஸ்வரம் வாசிக்கும் சகோதரர்களாகப் புகழ் பெற்றிருந்தனர் அப்பு, சுப்பு. அரசவையில் வாசிக்க ஷாஜி மஹாராஜாவிடமிருந்து இவர்களுக்கு அழைப்பு வந்தது. தர்பாரில் எல்லாக் கலைஞர்களும் ஒரே நேரத்தில் வாசிப்பார்கள். அப்படிக் கூட்டத்தோடு வாசிப்பதற்கு சகோதரர்களுக்கு விருப்பமில்லை. ஆனாலும் அரசரின் உத்தரவாயிற்றே… மறுக்க முடியுமா? அப்புவும் சுப்புவும் திருவாரூர் கோயிலுக்குச் சென்று `தியாகேசா இதென்ன சோதனை..’ என்று வேண்டிவிட்டு திரும்பினர். சாலையில் நடந்து செல்லும் ஒருவர், `சங்கு குளத்தில் மூழ்கிட்டுப் போங்கடா’ என்று சொல்கிறார். அவர்களும் அப்படியே மூழ்கிவிட்டு, தர்பாருக்குச் சென்று நாகஸ்வரம் வாசித்தனர். இவர்களின் வாசிப்பைக் கேட்ட அரசன், மற்ற வாத்தியங்களை வாசிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம்.

இஞ்சிக்குடி கணேசன், எந்தெந்த நேரத்தில் சுவாமிக்கு என்னென்ன முறைகளில் வாசிக்க வேண்டும் என்றும் ஆவணப்படத்தில் விளக்கியிருக்கிறார்.

மல்லாரிகள் பலவிதம்

சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும்போது தீர்த்த மல்லாரி, அபிஷேகம் முடிந்து, அலங்காரம் முடிந்து நைவேத்யம் செய்யும் போது தளிகை மல்லாரி, சுவாமி எழுந்தருளும்போது பெரிய மல்லாரி, சின்ன மல்லாரி ஆகியவை நாகஸ்வரத்தில் வாசிக்கப்படும்.

கோயில் நாகஸ்வரம் ஆவணப்படத்தின் மூலம் பக்தியையும் இசையையும் ஒரே புள்ளியில் கொண்டுவந்திருக்கிறார் சௌதாமினி என்பது, உள்ளங்கை ரேகை போல் அவ்வளவு தெளிவு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

33 mins ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்