’சாயிபாபா’ என்று முதலில் சொன்னவர் யார்? -நீங்களும் கூப்பிடுங்கள் ‘சாயிபாபா’வை! 

By வி. ராம்ஜி

இன்றைக்கும் யாரெல்லாம் சாயிபாபா... சாயிபாபா... சாயிபாபா என்று அழைக்கிறார்களோ அவர்களிடம் வந்துவிடுவார் சாயிபாபா. சாயி பகவானின் அருள் உங்களுக்குத் தேவை என்று நீங்கள் விரும்பினால், சாயிபாபாதான் நமக்கு நன்மைகள் அருளுவார் என்று நீங்கள் முழு மனதுடன் நம்பி, அவரை கூப்பிட்டால், உங்களைத் தேடி, நீங்கள் இருக்கும் இடத்துக்கே வருவார்.

சரி... முதன்முதலில் பகவான் சாயிபாபாவை, ‘சாயிபாபா’ என்று அழைத்த சுவாரஸ்யம்... ஆனந்த அதிசயம் எப்போது?

1854ம் வருடம், கண்டோபா கோயிலில் பிரமாண்டமாக நடந்துகொண்டிருந்தது திமீதித் திருவிழா. ஊரே கூடியிருந்த ஒப்பற்ற விழா அது. எல்லோரும் தங்கள் நேர்த்திக்கடன் செலுத்த, கனிந்த மனதுடன் வந்திருந்தார்கள். விழாவில், கூட்டத்தில் ஒரு பெண்ணுக்கு அருள் வந்தது. தன்னை மறந்து, தன்னிலை மறந்து ஆடினாள். அப்போது கூட்டத்தில் நின்றவர்களில், கூட்டத்தோடு கூட்டமாக நின்றவர்களில் இருந்த அந்த இளைஞனைப் பார்த்தாள். இன்னும் ஆட்டம் அதிகரித்தது.

‘எங்க ஊரையும் குலத்தையும் காக்க வந்தவனே. தெய்வீகத்துக்குச் சொந்தக்காரனே! இங்கேயே இரு. எங்களையெல்லாம் காப்பாற்று. எங்கேயும் போய்விடாதே’ என்றாள் அந்த இளைஞனைப் பார்த்து!

அருள் வந்து ஆடிய பெண் சுட்டிக்காட்டிய திசையப் பார்த்தார்கள் எல்லோரும். அந்த இளைஞனை நோக்கி ஓடினார்கள். ‘இங்கேயே இருங்கள்’ என்று அந்த இளைஞனிடம் வேண்டினார்கள். ஆனால் அந்த இளைஞன் அன்றைய தினமே அங்கிருந்து நகர்ந்தான். திருவிழாவில் காணாமல் போனவர் போல், மொத்த ஊரும் அந்த இளைஞனைத் தேடியது. தொலைத்தது உணர்ந்து தவித்தது.

‘என்ன பாவம் பண்ணினோமோ... இப்படி விட்டுட்டோமே’ என்று பதறியது. ‘இந்த ஊரே பாவப்பட்ட ஊர் போல இருக்கு... என்னத்தச் சொல்றது போங்க’ என்று அலுத்துக் கொண்டார்கள். ‘கண்டோபா தெய்வ சந்நிதில, கண்டோபா தெய்வமே அடையாளம் காட்டியும், கோட்டை விட்டுட்டோம்’ என்று ஒருவரையொருவர் புலம்பினார்கள்.

எல்லோருக்கும் ஆறுதல் சொன்னார் பகத்மகல்சாபதி. இவர் அந்தக் கோயிலின் அர்ச்சகர். ஆனால், உள்ளுக்குள் ரொம்பவே நொந்துபோனார். ஆழ்ந்த பக்தியும் நேர்மையும் கொண்டிருந்த அவர்,கண்டோபா தெய்வத்தை மனமுருக பிரார்த்தித்தார்.

விழாவில் இருந்து நகர்ந்த இளைஞன், பக்கத்து ஊரில் ஒரு வீட்டில் தங்கியிருந்தான். அந்த வீட்டில் யாருக்கோ திருமணம். ஏற்பாடுகள் தடபுடலாக நடந்துகொண்டிருந்தன. அக்கம்பக்கத்து ஊரிலிருந்தெல்லாம் தெரிந்தவர்களும் உறவுக்காரர்களுமாக வந்து கொண்டிருந்தார்கள். அது மாப்பிள்ளையின் வீடு. பெண் வீட்டைச் சேர்ந்தவர்களும் ஒவ்வொருவராக வந்துகொண்டிருந்தார்கள்.

விடிந்தால் கல்யாணம். பெண் வீட்டாருக்குத் தெரிந்தவர்கள், நண்பர்கள் என கிட்டத்தட்ட பலரும் வந்துவிட்டார்கள். அந்தப் பெண்ணின் சொந்த ஊர்...ஷீர்டி. ஆகவே, திருமணத்துக்கு, ஷீர்டியில் இருந்தும் எண்ணற்ற மக்கள், அந்த ஊருக்கு வந்திருந்தார்கள். முக்கியமாக, கண்டோபா கோயிலின் குருக்கள், பகத்மகல்சாபதியும் வந்திருந்தார். மனம் முழுக்க அந்த இளைஞனே வியாபித்திருந்தான். அப்போதுதான், அது நிகழ்ந்தது.

அந்த இளைஞனை, அங்கே பகத்மகல்சாபதி பார்த்துவிட்டார். கண்ணில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது. முகம் முழுக்க சிரிப்பு பரவியது. உதடுகள் கண்டோபா தெய்வத்தின் பெயரை உச்சரித்தன. உற்சாகத்தில் ஓடிவந்தார். இளைஞனைக் கட்டிக் கொண்டார். ‘சாயி... சாயி... சாயி...’ என்று சொல்லிக் கொண்டே ஆரத்தழுவினார். விலகி வந்து, இரண்டடி பின்னே சென்று விழுந்து நமஸ்கரித்தார். ‘சாயி... சாயி... சாயிபாபா...’ என்று அரற்றியபடியே இருந்தார். பரவசம் பொங்க, சொல்லிக் கொண்டே இருந்தார்.

அங்கே இருந்த ஷீர்டிக்காரர்கள் ஓடிவந்தார்கள். மெய்சிலிர்த்துப் போனார்கள். அனைவரும் தடாலென விழுந்து வணங்கினார்கள். ‘சாயிபாபா... சாயிபாபா...’ என்று கைகூப்பிச் சொன்னார்கள். பகவான் சாயிபாபாவை, அந்த மகோன்னதமான குருவை, இறையருள் பெற்ற சித்தபுருஷனை அனைவரும் போற்றினார்கள். கொண்டாடினார்கள். வணங்கினார்கள்.

இன்றைக்கு உலகமே கொண்டாடி வணங்கிக் கொண்டிருக்கும் பகவான் சாயிபாபாவை, அருளாடிய அந்தப் பெண் அடையாளம் கண்டு சொன்னாள். கண்டோபா கோயிலின் குருக்கள் பகத்மகல் சாபதி பார்த்துவிட்டு, ஊருக்கே சொன்னார். சொன்னது மட்டுமின்றி, ‘சாயிபாபா...’ என்று பெயரும் வைத்தார். அந்தப் பெண்மணி செய்த புண்ணியம் இது. கோயிலின் அர்ச்சகரின் இறைபக்திக்கு, அந்த இறைவனே வழங்கிய கொடை.


பாபாவின் அருள், அந்த ஊருக்குள் பரவியது. ஷீர்டியின் செடிகொடிகளுக்கும் அவரின் அருள் போய்ச் சேர்ந்தது. வேர் வரை பரவி, வளர்ந்தன. இது ஷீர்டி தாண்டியும் மெல்ல மெல்லப் பரவியது. இன்றைக்கும் தேசம் முழுக்கப் பரவிக்கொண்டிருக்கிறது.

இன்றைக்கும் யாரெல்லாம் சாயி ராம்... சாயி ராம்... சாயிராம் என்று அழைக்கிறார்களோ அவர்களிடம் வந்துவிடுவார் சாயிபாபா. சாயி பகவானின் அருள் உங்களுக்குத் தேவை என்று நீங்கள் விரும்பினால், சாயிபாபாதான் நமக்கு நன்மைகள் அருளுவார் என்று நீங்கள் முழு மனதுடன் நம்பி, அவரை கூப்பிட்டால், உங்களைத் தேடி, நீங்கள் இருக்கும் இடத்துக்கே வருவார்.

எங்கே கூப்பிடுங்கள்... ‘சாயிபாபா... சாயிபாபா... சாயிபாபா’!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

44 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்