நீங்கள் புறக்கணித்தவரா, புறக்கணிக்கப்பட்டவரா?

By அனிதா அசிசி

உழைக்கிற மாடு உள்ளூர் சந்தையில் விலைபோகாது என்பது நம் முதுமொழி. உண்மைதான் நம் அருகில் இருப்பவர்களின் அருமையை அவர்களது மரணத்துக்கு பிறகே நாம் உணர்ந்துகொள்கிறோம். இது எத்தனை மோசமான புறக்கணிப்பு. இந்த அவலத்தை இயேசு வெளிப்படையாகவே அறிவித்தார். “இறைவாக்கினர் எவருக்கும் தம் சொந்த ஊரில் மதிப்பில்லை” என்று அவர் தான் சொந்த ஊர் மக்களைப் பார்த்துக் கூறினார்.

இறைவாக்கினர்களை, யோகிகளை, மகான்களை மட்டுமல்ல, சிந்தனையாளர்களை, சாதனையாளர்களை, விஞ்ஞானிகளை, விளையாட்டு வீரர்களை அவரது சொந்த ஊர் சந்தேகக் கண் கொண்டே பார்க்கின்றது. ஏன்? அதுதான் நம் ரத்தத்தில் ஊறிவிட்ட முற்சார்பு எண்ணம். ஒருவரது பெற்றோர், அவரது குடும்பப் பின்னணி, அவரது சாதி, அவர் பிறந்து வளர்ந்து வாழும் சூழல், தோற்றம், நிறம், அவர் பேசும் மொழி ஆகியவற்றைக் கொண்டே ஒருவரது ஆளுமையை,, செயல்பாட்டை எடைபோடும் அலட்சியப் பார்வையை மனித சமூகம் காலம் காலமாகச் செய்து வருகிறது.

மாறாக ஒவ்வொரு மனிதரும் அவரவர் மதிப்பீடுகளால், அவர்கள் முன்வைக்கும் கோட்பாடுகளால், அதன் செயல்பாடுகளால், அதையே வாழ்ந்துகாட்டும் அவர்களது முன்மாதிரிகளால் மட்டுமே கணிக்கப்பட வேண்டும். இயேசுவின் சொந்த ஊரைச் சேர்ந்த மக்கள் அவரைப் புறக்கணித்தனர். “இவர் நாம் பார்த்து வளர்ந்த தச்சர் யோசேப்பின் மகன்தானே? இவர் நமக்கு ஆன்மிக வழியைக் காட்டுவதா?” என்று அவரை முற்றாகப் புறக்கணித்தார்கள். அந்தச் சம்பவத்தை மாற்கு புத்தகத்தில் கூர்ந்து நோக்குவோம் வாருங்கள்

சொந்த ஊரில் இயேசு

இயேசு பலநூறு மைல்கள் நடந்து சென்றே மக்களுக்குப் பயிற்றுவித்த பிராந்தியங்களில் ஒன்று கலிலேயா. அவர் இரண்டாவது முறையாக கலிலேயாவுக்குத் திரும்பி வந்தபோது சுற்றுவட்டாரமெங்கும் அவருடைய புகழ் பரவியது. கலிலேயர்களின் ஜெபக்கூடங்களில் அவர் கற்பிக்கத் தொடங்கினார். எல்லாரும் அவரை உயர்வாக மதித்தார்கள்.

அடுத்து தாம் வளர்ந்த ஊரான நாசரேத்துக்கு அவர் வந்தார்; தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெபக்கூடத்துக்குச் சென்று, வாசிப்பதற்காக எழுந்து நின்றார். யூதர்கள் தீர்க்கதரிசி என்று நம்பிய அவர்களின் முன்னோரான ஏசாயா எழுதிவைத்துச் சென்றிருந்த தீர்க்கதரிசனச் சுருள் அவரிடம் கொடுக்கப்பட்டது; அந்தச் சுருளை வாங்கிய இயேசு அதைப் பிரித்து வாசிக்க ஆரம்பித்தார்

“பரலோகத் தந்தையின் சக்தி என்மேல் இருக்கிறது, ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்க அவர் என்னை நியமித்தார்; சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையும் பார்வையற்றவர்களுக்குப் பார்வையும் கிடைக்குமென்று பிரசங்கிப்பதற்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு விடுதலை அளிப்பதற்காகவும், பரலோகத் தந்தையின் அனுக்கிரக காலத்தைப் பிரசங்கிப்பதற்காகவும் அவர் என்னை அனுப்பினார்” என்று எழுதப்பட்டிருந்த பகுதியை வாசித்தார். அதன்பின், அந்தச் சுருளைச் சுருட்டி ஜெபக்கூடப் பணியாளனிடம் கொடுத்துவிட்டு உட்கார்ந்தார். அங்கிருந்த எல்லாருடைய கண்களும் அவர் மீதே இருந்தன. பின்பு அவர் பேசத் தொடங்கி, “இப்போது நீங்கள் கேட்ட இந்த வேதவசனம் இன்று நிறைவேறியிருக்கிறது” என்றார்.

மறுத்த மக்கள்

அங்கிருந்த மக்கள் அனைவரும் இயேசு பேசிய வார்த்தைகளைக் கேட்டு ஆச்சரியத்துடன், “இவர் தச்சர் யோசேப்பின் மகன் அல்லவா?” என்று கூறி, அவரைப் பாராட்டிப் பேச ஆரம்பித்தார்கள். அப்போது இயேசு, “ ‘மருத்துவனே, நீயே உன்னைக் குணப்படுத்திக்கொள்’ என்ற பழமொழியை நீங்கள் எனக்குப் பொருத்தி, ‘கப்பர்நகூம் நகரில் நீ செய்ததாக நாங்கள் கேள்விப்பட்ட காரியங்களை இங்கே உன்னுடைய சொந்த ஊரிலும் செய்’ என்று சொல்வீர்கள். ஆனாலும், உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், எந்தத் தீர்க்கதரிசியும் தன் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

நிஜமாகவே உங்களுக்குச் சொல்கிறேன், எலியாவின் நாட்களில் இஸ்ரவேலில் அநேக தொழுநோயாளிகள் இருந்தார்கள்; ஆனால், சிரியாவைச் சேர்ந்த நாகமானைத் தவிர அவர்களில் வேறொருவரும் சுத்தமாக்கப்படவில்லை” என்றார். ஜெபக்கூடத்தில் இவற்றைக் கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் கோபத்தில் கொதித்தெழுந்தார்கள். தங்கள் கண்முன்னால் இயேசு அற்புதங்களைச் செய்வார் என்று வேடிக்கை மனோபாவத்தோடு யூதர்கள் கூடியிருந்தார்கள். ஆனால் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டவர்களுக்கு கோபம் தலைக்கேறியது.

இயேசுவை அவசர அவசரமாய் நகருக்கு வெளியே கொண்டுபோனார்கள். அந்நகரம் அமைந்திருந்த மலையின் விளிம்பிலிருந்து தலைகுப்புறத் தள்ளிவிடுவதற்காக அவரை அங்கு கொண்டுசென்றார்கள். இயேசுவோ அவர்கள் நடுவே புகுந்து அங்கிருந்து அகன்றுவிட்டார். பின்பு அவர் தன் சொந்த ஊரை விட்டு நீங்கி, கலிலேயாவில் உள்ள கப்பர்நகூம் என்ற நகருக்குப் போய், ஓய்வுநாளின்போது மக்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார்.

நமது இடம் எது?

நாம் சிந்திக்க வேண்டிய தருணம் இது. இயேசுவைப்போல நீங்களும் புறக்கணிக்கப்பட்டவராக இருக்கலாம். அல்லது நீங்களே மற்றவர்களைப் புறக்கணித்தவராக இருக்கலாம். இந்த நிமிடம் முதல் அதை மாற்றுவோம். நாம் நமது குடும்பத்தினரை, உறவினரை, உடன் பணிபுரியும் ஊழியர்களைப் பார்க்கின்றபோது, முற்சார்பு எண்ணத்துடன் பார்த்திருந்தால் அதை மாற்றிக்கொள்ளவே இயேசு துணிச்சலாக தன் சொந்த ஊரில் மனம் திறந்தார். ஒருவர் நமக்கு உபகாரம் செய்தால் மட்டுமே அவரைப் போற்றுவதைத் தவறென்றார்.

ஒருவரது சொந்த இயல்புகள், திறமைகள், அவர்களது நல்ல குணங்களுக்காக அவரை நாம் மதிக்கவும் ஏற்றுக்கொள்வும் வேண்டும் என்பதை நமக்கு இயேசு பயிற்றுவித்திருக்கிறார். எனவே நம் அருகாமையில் வாழ்கிறவர்களின் சொற்களுக்குச் செவிகொடுக்கப் பழகுவோம். நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு நபரையும் சற்று உன்னிப்பாகக் கவனித்து, அவர்களை முற்சாற்பு எண்ணமின்றிப் பார்க்கின்ற, மதிக்கின்ற பழக்கத்தை உருவாக்குவோம். அப்போதுதான் நாமும் புறக்கணிக்கப்படாத மனிதர்களாக வலம் வரமுடியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

4 mins ago

ஜோதிடம்

44 mins ago

ஜோதிடம்

52 mins ago

தமிழகம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

தமிழகம்

8 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்