மேற்கு பார்த்த கணபதி

By வை.ரவிச்சந்திரன்

கோயில்கள் பலவற்றில் விநாயகர் பல பெயர்கள் தாங்கி நின்றும் அமர்ந்தும் அருள்பாலிக்கிறார். எட்டுத் திசையும் பார்த்து அமர்ந்து அருள்பாலிக்கும் விநாயக மூர்த்தங்கள் சந்நிதி கொண்டதுண்டு. அதற்கான பலன் குறித்த நம்பிக்கைகளும் உண்டு. மேற்கு பார்த்த தெய்வங்களுக்கு சில சிறப்புத் தன்மைகள் உண்டு என்பது ஐதீகம். மயிலை கபாலீச்சரம், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆகிய கோயில்கள் மேற்குத் திசை நோக்கிய தலங்கள். இந்த வகையில் மேற்கு மாம்பலத்தில் உள்ள சர்வப்பிரிய மகாகணபதி என்ற பெயர் தாங்கிய விநாயகர் கோயில் மேற்குத் திசை பார்த்து அமைந்துள்ளது. இங்கு சந்நிதி கொண்ட விநாயகரும் மேற்கு பார்த்து அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்.

இந்த விநாயகரின் பெயரையே கோயிலுக்கும் வைத்துள்ளனர். அதனால் மூலவருக்கு சர்வப்ரிய மகாகணபதி என்பது திருநாமம். ஸர்வப்ரிய என்றால் எல்லோருக்கும் பிரியமானவர் என்பது பொருள். இங்கு மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி மிக்கவர் என பக்தர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

எல்லா விதமான அபிலாஷை களையும் உடனே பூர்த்தி பண்ணி அருள்புரிபவராக விளங்குகிறார். இந்த மேற்கு பார்த்த விநாயகரைப் பல பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

தம்பதி சமேதராய் நவகிரகங்கள்

இவ்வாலயத்தில் செவ்வாய்க்கிழமைகள் தனிச் சிறப்பு பெற்றுள்ளன. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ஒரு கட்டி வெல்லம், தேங்காய்,பழம், வெற்றிலை, பாக்கு கொடுத்து, தொடர்ந்து மூன்று செவ்வாய் அர்ச்சனை செய்ய, நன்மை ஏற்படும் என்பது நம்பிக்கை. இத்திருக்கோயிலில் அமைந்துள்ள நவகிரக சந்நிதிகளில் நவகிரகங்கள் தம்பதி சமேதராய் அவரவருக்கு உரிய வாகனங்களில் எழுந்தருளியிருப்பது அபூர்வமாகக் கருதப்படுகிறது.

நவகிரகங்களில் பிரதான மூர்த்தியான சூரியன், உஷா, பிரத்யுஷா ஆகியோருடன் ஏழு குதிரைகள் பூட்டிய தனது தேரில் காட்சி அளிக்கிறார். வெண்குதிரையில் ரோஹினியுடன் சந்திர பகவான், சக்திதேவியுடன் செவ்வாய் பகவான் அன்னப் பட்சி வாகனத்திலும், ஞானதேவியுடன் புத பகவான் குதிரை வாகனத்திலும், யானை வாகனத்தில் குரு பகவான் தாரா தேவியுடனும், கருட வாகனத்தில் சுகீர்த்தியுடன் சுக்கிர பகவான், காக வாகனத்தில் நீலா, மந்தா ஆகியோருடன் சனிபகவானும், ஆடு வாகனத்தில் சிம்ஹீயுடன் ராகு பகவானும், சித்ரலேகாவுடன் சிம்ம வாகனத்தில் கேது பகவான் ஆகியோர் காட்சி அளிக்கின்றனர்.

இத்திருக்கோயிலில் தினமும் மாலை வேளையில் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணமும் திருஞான சம்பந்தர் அருளிய கோளறு திருப்பதிகமும் ஆலயம் ஆரம்பித்த நாள் முதல் தொடர்ந்து நடைபெறுகிறது. ஏகாதசியன்று நாராயணீயம் மாதர்களால் பாராயணம் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசையன்று அபிராமி அந்தாதி பாடி சிறப்புக் கூட்டு வழிபாடு நடைபெறுகிறது.

இந்த ஆலயத்தில் குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு, கேது பெயர்ச்சிகளுக்கு பரிகார ஹோமங்கள் நடைபெறுகின்றன. இதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படுவதில்லை. உலக அமைதி வேண்டி இந்த ஹோமங்கள் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

படங்கள்: ய. ராஜாங்கம்



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

44 mins ago

விளையாட்டு

1 hour ago

கல்வி

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்