அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே... நூற்றாண்டு காணும் புனித மாற்கு ஆலயம்!

By செய்திப்பிரிவு

அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே, வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே, விண்மீன்கள் கண் பார்க்க சூரியன் தோன்றுமோ புகழ்மைந்தன் தோன்றினானே, கண்ணீரின் காயத்தை செந்நீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே” என்று  அன்பின் உருவாய் தோன்றிய இறைவனைப் போற்றி வணங்குகின்றனர் கிறிஸ்தவர்கள். இத்தகு ஆண்டவராகிய இயேசு குடிகொண்டிருக்கும் போத்தனூர் சிஎஸ்ஐ தூய மாற்கு தேவாலயம் வரும் 24-ம் தேதி நூற்றாண்டைக் கொண்டாடுகிறது.

1900-ம் ஆண்டுகளில் போத்தனூர் பகுதிகளில் வசித்த, ஆங்கில ப்ரோடஸ்டன்ட் சமூகத்தினரின் வழிபாட்டுக்காகவும், புனிதப் பணிக்காகவும் 1918-ல் போத்தனூர் ரயில்வே காலனியில் தூய மாற்கு தேவாலயம் கட்டத் தொடங்கினர். இந்த ஆலயம் மெட்ராஸ் லார்டு பிஷப்பால் 1919 ஜூலை 24-ம் தேதி அர்ப்பணிக்கப்பட்டது. அந்த சமயத்தில் ஆங்கிலோ இந்தியர்கள் போத்தனூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் இருந்தனர்.

இந்த தேவாலய கட்டுமானப் பணிக்காக கேரள மாநிலத்தில் இருந்து செந்நிற கற்கள் கொண்டுவரப்பட்டன. இரண்டு புளிய மரங்களுக்கு இடையே, நூறு ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக காட்சிதருகிறது இந்த புனித இல்லம். 

இதன் கட்டுமான அமைப்பு மிக அழகானது. தேவாலயத்தின் ஒவ்வொரு பகுதியும் கைகளால் கட்டப்பட்ட போதிலும், மிகுந்த கலை நுட்பத்துடன் அமைத்துள்ளனர். அழகிய  வளைவுகளை கொண்ட ஜன்னல்கள், அக்காலத்துக்கு ஏற்றபடி சிறந்த கோணத்தில் அமைக்கப்பட்டுள்ளன. அழகிய வேலைப்பாடுடன், மரத்தாலான வளைவுகளையும் கொண்டுள்ளன.

முதலாவது உலகப் போரின்போது இறந்த ஒரு போர் வீரனின் நினைவாக, அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கண்ணாடி அமைப்புகளும் உள்ளன. பழமையான,  பாரம்பரியம் மிக்க இந்தக் கட்டிடம், 100 ஆண்டுகளுக்கும் மேலாக, மிகவும் கவனத்துடனும், ரயில்வே துறையின் ஒத்துழைப்புடனும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பாரம்பரிய கட்டுமானத்தைக் கொண்ட இந்த  ஆலயத்தைப் பாதுகாப்பதில் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளனர். 

கோவையில் ஆங்கிலேயர் வழிபட்ட இத்தகைய ஆலயங்கள் இரண்டு மட்டுமே உள்ளன.
இந்த ஆலயத்துக்கு அருகேயுள்ள விளையாட்டுத் திடல், அங்கு கால்பந்து விளையாடும் குழந்தைகள், அவ்வழியே செல்லும் ரயில்களின் ஓசையும், வாகனங்களின் இரைச்சல் என எல்லாவற்றையும் கடந்து, இந்த ஆலயத்தில் வழிபாடுகளை நடத்தி, புனித நீரால் நுாறு ஆண்டுகளுக்கும் மேலாக அர்ச்சித்துள்ளனர். 

தற்போதைய நாகரிக உடையைப் போன்றே, அழகிய ஆடையணிந்த பெண்கள், கோட்டும், சூட்டும், 
தொப்பியும் அணிந்த ஆண்கள் எல்லாம் இங்கு வந்து வழிபட்டுள்ளனர். வெளிநாடுகளுக்கு சென்று குடியேறிய பின்னரும் கூட, இந்த ஆலயத்துக்கு உட்பட்டோர் இங்கு வந்து செல்லத் தவறியதில்லை. காந்தம்போல கவரும் இந்த ஆலயத்தில் இவ்வாறு தங்களது அனுபவங்களைப் பதிவு செய்கின்றனர் இப்பகுதி கிறிஸ்தவர்கள்.

“கடந்த காலங்களில் இங்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் வழிபாடு நடத்திய பாதிரியர்கள்  மற்றும் மத குருமார்களை நினைவுகூர  கடமைப்பட்டுள்ளோம். வெறும் கற்களை மட்டும் விட்டுச் செல்லாமல், பாரம்பரியத்தையும் உணர்த்திச் சென்றுள்ளனர் மூதாதையர்கள். அவர்களது இனிய நினைவுகளுடன் இறை பணியைத் தொடர்வோம்” என்கின்றனர் இந்த ஆலய  நிர்வாகிகள்.
இந்நிலையில், ஆலயத்தின் பாரம்பரியம், புனிதம், அழகு மாறாமல் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேவாலயத்தின் மேற்கூரை மாற்றப்பட்டு, அஸ்திவாரம் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆலயத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகளை நட்டுவைத்துள்ளனர். இங்கு சுமார் 150 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து வழிபாடு நடத்தலாம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு ஆராதனை, வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு ஜெபக்கூட்டம் நடைபெறுகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, புனித வெள்ளி, இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர்  உள்ளிட்ட விசேஷ நாட்களில் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் இங்கு கூடி, சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபடுவர்.

வரும் 24-ம் தேதி சிஎஸ்ஐ தூய மாற்கு தேவாலயத்தில் நடைபெறும் நூற்றாண்டு விழாவில், சிறப்பு அஞ்சல் உறையை மேற்கு மண்டல போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் ஷீலி பர்மன் வெளியிடுகிறார். இதில், கோவை திருமண்டல பேராயர் திமோத்தி ரவீந்தர், செயலர் என்.சார்லஸ் சாம்ராஜ், துணைத் தலைவர் கே.சி.ரிச்சர்டு துரை, பொருளாளர் டி.செல்வகுமார், போத்தனூர் சிஎஸ்ஐ தூய மாற்கு தேவாலய திருச்சபை போதகர் சாமுவேல் லிவிங்ஸ்டன், செயலர் தென்னரசு, பொருளாளர் பிரதாப் கமலேஷ், அஞ்சல் துறை முதுநிலை கண்காணிப்பாளர் சுதிர் கோபால் ஜக்காரியா, சேலம் கோட்ட ரயில்வே கூடுதல் மேலாளர் ஏ.அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

56 mins ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்