தெய்வத்தின் குரல்: கலைகள் யாவும் காந்தர்வ வேதம்

By செய்திப்பிரிவு

‘அ

வன் என்ன புரட்டிவிட்டானா?’ என்று சாதாரணமாக ஒரு வழக்கு இருக்கிறது. புரட்டுவதற்கு என்ன இவ்வளவு முக்கியத்துவம்? யோசித்துப் பார்த்தால், முறைப்படி புரட்டுவது ரொம்பவும் பெரிய, அர்த்தமுள்ள விஷயம் என்று தெரிகிறது. அநேகக் கலைகள் புரட்டுவதினாலேதான் பிறந்திருக்கின்றன.

இத்தனை புஸ்தகங்கள் நம்மிடம் இருக்கின்றன. ஒரு சில எழுத்துக்களைப் புரட்டிப் புரட்டி வைத்து வார்த்தைகள் ஆக்கியதால்தானே, இத்தனை புஸ்தகங்களும் வந்திருக்கின்றன.

நம்மைவிட இங்கிலீஷ்காரர்களுக்கு எழுத்து இன்னும் குறைவு. இருபத்தாறே எழுத்துக்களைப் புரட்டிவிட்டு ஏராளமாக எழுதிவிட்டார்கள். அந்தப் புரட்டலில் ஒரு முறை, ஓர் அழகு இருந்துவிட்டால் கலையாகிறது.

நமக்கும் வார்த்தைகள் தெரிகின்றன. கவியும் அதே வார்த்தைகளைத்தான் புரட்டி வைக்கிறான் — உடனே அதில் ரஸம் பிறக்கிறது, கவியைக் கொண்டாடுகிறார்கள்! நாம் வார்த்தையைப் புரட்டி எழுதினால் அதை யார் மதிக்கிறார்? தாகூர் மாதிரி ஒருவர் புரட்டுகிறபடி புரட்டினால் ஏக மதிப்பு உண்டாகிறது. அக்ஷர லக்ஷம் என்கிறார்கள்.

சைத்திரகன் தரும் ஆனந்தம்

சித்திரக் கலையும் இப்படியேதான். வர்ண பாட்டிலையும் பிரஷ்ஷையும் வைத்துக்கொண்டு நாம் ‘புரட்டுவது’ ரஞ்சகமாக இல்லை. ஆனால், சைத்திரிகன் அதே வர்ணங்களைப் புரட்டுகிறபடி புரட்டினால், அது ஆனந்தம் தருகிறது.

சங்கீதமும் புரட்டல்தான். நாம் எல்லோரும் சத்தம் போடுகிறோம். அந்தச் சப்தத்தை ஸ்வரங்களாகப் பாகுபடுத்தி, இதற்கப்புறம் இது என்று அழகாகப் புரட்டி வைத்தால் இன்பம் உண்டாகிறது. நன்றாகப் புரட்டினால் நிறைய இன்பம். புரட்டலில் நிபுணனாக இருப்பவனுக்கு ஒரு மணிக்கு இருநூறு, முந்நூறு ரூபாய் தருகிறோம். நாம் சத்தம் செய்தால் ஓய வைப்பதற்குப் பணம் கொடுக்கலாம். புரட்டல் இன்பம் இப்படிப்பட்டது.

நமது தொண்டை என்கிற மாமிச வாத்தியத்தில் காற்றைப் புரட்டுகிறோம். தவிர சங்கீத வாத்தியங்கள் பல இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் இந்தப் புரட்டல் மாத்திரம் பொது. தவில், மிருதங்கம், கஞ்சிரா போன்ற சர்ம வாத்தியங்களைத் தோலில் புரட்டுகிறார்கள்.

வீணை, தம்பூர், பிடில் போன்ற தந்தி வாத்தியங்களில் தந்தியில் புரட்டுகிறார்கள். இந்த வாத்தியங்களில் புரட்டுகளுக்கு நடுவே இழைந்து வரும் ‘அநுரணனம்’ என்ற இழைப்பு ஒலி நயமான இன்பம் தருகிறது. ஒருதரம் மீட்டினால் உண்டாகும் ஒலி இழுத்துக்கொண்டே நிற்கிறது. முதல் மீட்டலில் உண்டான ஒலி நீடித்து, இரண்டாவது மீட்டலில் எழும்பும் ஒலியோடு கவ்வி நிற்கிறது. இதுவே, அநுரணனம்.

புல்லாங்குழல், நாயனம் போன்ற துவாரமுள்ள ரந்திர வாத்தியங்களில் காற்றைப் புரட்டுகிறார்கள். ஹார்மோனியமும் ஒருவிதத்தில் ரந்திர வாத்தியந்தான். அதில் வாய்க்குப் பதில் துருத்தி இருக்கிறது.

தத்துவம் ஒன்றுதான்

புல்லாங்குழலிலும் நாயனத்திலும் துவாரங்களை விரலால் மாற்றி மாற்றி அடைத்துத் திறக்கிறார்கள் என்றால், ஹார்மோனியத்தில் பில்லைகளை மாற்றி மாற்றி அழுத்தி எடுக்கிறார்கள். தத்துவம் ஒன்றுதான்.

சப்தத்தைப் புரட்டுவதோடு, அங்கங்களைப் புரட்டிவிட்டால் நாட்டியக் கலை உண்டாகிறது. சங்கீதத்தில் காதால் கேட்டு அர்த்த ஆனந்தமும் ஸ்வர ஆனந்தமும் பெறுகிறோம். நாட்டியத்தில் இவற்றோடு கண்களால் பார்த்து, ‘அங்கசர்ய ஆனந்தமும் - (அங்கங்களைப் முறைப்படி அசைப்பதால், புரட்டுவதால் ஏற்படுகிற இன்பமும்) பெறுகிறோம்.

நவரஸ உணர்ச்சிகளை விளக்குகிற அங்க அசைவான அபிநயம் மட்டும் இல்லாமல், நவரஸமில்லாத வெறும் அங்கசரியை (அங்கப் புரட்டு) மட்டுமே ஆனந்தம் தருவது உண்டு என்பதால்தான் ‘நிருத்தம்’ என்ற கலை ஏற்பட்டிருக்கிறது.

ஈஸ்வரனுக்குச் செய்கிற அறுபத்துநாலு உபசாரங்களில் சங்கீதத்தோடுகூட, நிருத்தமும் உபசாரமாகச் சொல்லப்படுகிறது. கீர்த்தனத்தில் சப்தம், அர்த்தம், லயம் யாவும் சேர்ந்து இன்பம் தருகின்றன. ஸ்வரம் பாடும்போது சப்தமும் லயமும் மட்டும் இன்பம் தருகின்றன.

ராக ஆலாபனையில் வெறும் சப்தம் மாத்திரம் ஆனந்தம் தருகிறது அல்லவா? நிருத்தத்தில் வெறும் அங்கசரியை மட்டும் லயத்தோடு சேர்ந்து ஆனந்தம் தருகிறது.

இந்தக் கலைகள் யாவும் காந்தர்வ வேதம் எனப்படும். கந்தர்வர்கள் உற்சாகப் பிறவிகள். அவர்கள் எப்பொழுதும் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் இருப்பார்கள். மனதுக்கு உற்சாகம் தரும் கலைகளுக்கு இதனாலேயே காந்தர்வ வேதம் எனப் பெயர் ஏற்பட்டிருக்கிறது.

- தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

11 mins ago

க்ரைம்

1 min ago

இந்தியா

15 mins ago

சுற்றுலா

39 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்