தெய்வத்தின் குரல்: வேதங்கள் அனந்தம்

By செய்திப்பிரிவு

சிருஷ்டி அத்தனையும், சிருஷ்டிக்கு அப்பாற்பட்டதும் கூட சப்த பிரபஞ்சத்தில் இருக்கிறதென்றால், அது ரொம்ப ரொம்பப் பெரிதாக அல்லவா இருக்க வேண்டும்? இப்போது வேதங்கள் என்று சொல்லப்படுகிற புஸ்தகங்கள் என்னதான் பெரிதாக இருந்தாலும், விச்வ வியாபாரத்தின் அத்தனை காரியங்களும் இந்த மந்திரங்களுக்குள் வந்துவிட்டன என்றால் சரியாக இருக்குமா என்று தோன்றலாம்.

இப்போது நமக்கு வந்திருக்கிற வேதங்கள் கொஞ்சம்தான். வேதத்திலேயே என்ன சொல்லியிருக்கிறதென்றால், வேதங்களுக்கு அளவே இல்லை - “அனந்தா வைவேதா:”- என்று இருக்கிறது. ரிஷிகளுக்கு அத்தனை வேதங்களும் ஸ்புரித்துவிட்டன என்று சொல்ல முடியாது. நாலு வேதங்களின் ஆயிரத்துச் சொச்சம் சாகைகளே (சாகை என்றால் கிளை) அவர்களுக்குத் தெரிந்தவை.

லோகம் முழுக்க சிருஷ்டித்த பிரம்மாவுக்கே வேதம் முழுக்கத் தெரிந்தது. இந்த பிரம்மாவுக்கு முன் ஒரு மஹா பிரளயம் நடந்தது. அதற்கு முந்தி இன்னொரு பிரம்மா இருந்தார். அதே மாதிரி அவருக்கும் முந்தி உண்டு. எல்லாவற்றுக்கும் முதலில் பரமாத்மாவின் எந்த சுவாச சலனத்தால், சிருஷ்டிக் கிரமம் முதல் பிரம்மாவின் தொழிலாகத் தூண்டப்பட்டதோ, அந்தச் சலனம் மட்டும் ஆகாசத்தில் இத்தனை பிரளயங்களிலும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதற்கு மட்டும் அழிவே இல்லை.

ஒவ்வொரு மஹா பிரளயத்துக்கும் அப்புறம் வருகிற புது பிரம்மா இந்த சலன சப்தங்களைக் கொண்டுதான் மறுபடி ஸ்ருஷ்டி முழுவதையும் பண்ணுகிறார். நாம் எழுப்புகிற ஒலிகள் அழிகிறதேயில்லை. ஒரு ஒலி உண்டான பின் என்றுமே அது அழியாமல் ஆகாசத்தில் இருக்கிறது என்று தெரிகிறது.

இம்மாதிரி, பிரளயத்திலும் அழியாமலிருந்த வேத சப்தங்களைக் கொண்டுதான் பிரம்மா மறுபடி லோக சிருஷ்டி பண்ணியிருக்கிறார். கல், மண், மரம், இரும்பு முதலியவற்றை வைத்துக்கொண்டு, நாம் ஒரு ஊரை நிர்மாணம் பண்ணுகிறோம். ஆனால் இந்தக் கல், மண், மரம், இரும்பு எல்லாமே பரமாத்மாவின் எண்ணத்தில் இருந்து, எண்ணுகிற மனசுக்கும் சுவாசத்திற்கும் மூலம் ஒன்றாயிருப்பதால், அவருடைய சுவாச சலனத்தினால் ஏற்பட்டவைதான். அந்தச் சலனங்களுக்குரிய சப்த ரூபத்தை, பிரம்மா வேதங்களாகக் கண்டு அத்யயனம் பண்ணின மாத்திரத்தில் சிருஷ்டி முழுக்க வந்துவிட்டது.

இப்போது அடிக்கடி பேப்பரில் [செய்தித்தாளில்] பார்க்கிறோம். பலவிதமான ‘ஸெளண்ட் வைப்ரேஷன்'களை [சப்த அதிர்வுகளை] செடிகளுக்கு அருகிலே உண்டு பண்ணினால், சில விதமான வைப்ரேஷனினால் செடி நன்றாக வளர்ந்து நிறையக் காய்க்கிறது. சில வகை வைப்ரேஷனால் வளர்ச்சி குன்றுகிறது என்று நியூஸ் வருகிறது. சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹார சக்தி எல்லாம் சப்தத்துக்கு உண்டு என்பது இதிலிருந்து நிதர்சனமாகிறது.

பிரம்மாவின் தபோ மகிமையால், power of concentration-ஆல் லோகம் முழுவதையும் வேத சப்தத்தால் அவர் உண்டாக்க முடிந்தது. நாம் தினமும் ஜபிக்கிற அதே பஞ்சாக்ஷர மந்திரத்தை ஒரு தரம் சொல்லி ஒரு சித்தர் விபூதி பூசினால், உடனே ஒரு வியாதி சொஸ்தமாகிறது என்றால், அது எப்படி? நம்மைவிட அவருக்கு உள்ள கான்ஸென்ட்ரேஷன் [மன ஒருமைப்பாட்டு] சக்தியால்தான். அதோடுகூட மந்திரத்தை அக்ஷரம், சுவரம் கொஞ்சங்கூட தப்பாமல் சுத்தமாகச் சொல்ல வேண்டும். அப்போதுதான் பலன் உண்டாகும். ஜகத் ச்ருஷ்டிக்குக் கருவியாகவே பிரம்மா பரமாத்மாவிடம் தோன்றியதால், அவருக்கு இவற்றில் பூர்ண சக்தி இருந்தது.

ஒன்றுமில்லாத ஆகாசத்திலிருந்து எலெக்ட்ரிஸிடியால் எவ்வளவோ காரியங்கள் செய்யப்படுகின்றன. அதைப் போல, எல்லாம் நிர்குணப் பிரம்மமான சைதன்ய வஸ்துவிடமிருந்து உண்டாகும். பிரளய சமயங்களில் அந்த சைதன்யம் தூங்கும். ஒரு ஸாண்டோ இருக்கிறான். அவன் தூங்கினால் அவனுடைய சக்தி ஒன்றும் வெளியே தெரிவதில்லை. குஸ்தி முதலிய காரியங்களைப் பண்ணும்பொழுது அவனுடைய சக்தி தெரிகிறது. அது போல சிருஷ்டி காலத்தில் சைதன்ய வஸ்துவின் சக்தி பல காரியங்களைச் செய்கிறது. நிர்குண வஸ்துவினிடத்திலிருந்து முதலில் ஒரு கான்ஸென்ட்ரேஷன் சக்தி (தபஸ்) கிளம்புகிறது. அதன் வழியே உண்டானவர் பிரம்மா. அவர் தபோரூபமாக உண்டானதால் சகல வேதங்களையும் பூர்ண சக்தியோடு கிரஹித்துக்கொண்டார். வேத சப்தத்திலிருந்து லோகத்தைச் சிருஷ்டித்தார். வேதங்கள் அளவிறந்தன; சிருஷ்டியும் பலவிதம்.

பரத்வாஜ மஹரிஷி மூன்று ஆயுஸ் பரியந்தம் வேதாத்தியயனம் செய்தார். பரமேச்வரன் அவருக்குப் பிரத்தியக்ஷமானார். “உமக்கு நாலாவது ஆயுஸ் கொடுக்கிறேன். அதைக் கொண்டு என்ன செய்வீர்?” என்று கேட்டார். பரத்வாஜர், 'அந்த ஆயுஸை வைத்துக்கொண்டும் வேதாத்தியயனமே பண்ணிக் கொண்டிருப்பேன்' என்று சொன்னார். எத்தனை ஆயுஸ் கிடைத்தாலும் வேதங்களைப் பூர்ணமாக அத்யயனம் பண்ணுவது சாத்தியமில்லையாதலால், இந்த அஸாத்ய விஷயத்தில் ரிஷி பிரயத்னப்படுவதைப் பார்த்து பரிதாபம் கொண்ட பரமேச்வரன், அவர் மனஸை மாற்ற வேண்டும் என்று எண்ணினார். அங்கே மூன்று பெரிய மலைகளைத் தோன்றப் பண்ணி, ஒரு பிடி மண்ணை எடுத்துக் காட்டி, 'நீ இவ்வளவு வருஷக் கணக்காக அத்யயனம் பண்ணின வேதங்கள் இந்தப் பிடி மண்ணுக்குச் சமானம். நீ இன்னும் தெரிந்துகொள்ளாதவை இந்த மலைகளைப்போல் இருக்கின்றன' என்று சொன்னார்.

வேதகிரி என்னும் திருக்கழுக்குன்றம்தான் இப்படி வேதமே மலையான இடம் என்பார்கள். நான் அங்கே கிரி பிரதக்ஷிணம் பண்ணினபோது, கூட வந்தவர்கள் “தேவ தேவ தேவ மஹாதேவ” என்று பஜனை பண்ணினார்கள். நான் அதை “வேத வேத வேத மஹாவேத” என்று மாற்றிக் கொடுத்தேன்!

பரத்வாஜ ரிஷியின் இந்தக் கதை வேதத்திலேயே “காடக”த்தில் இருக்கிறது.

- தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

51 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்