வான்கலந்த மாணிக்கவாசகம் 13: அறிய முயன்றால் அடங்கும்

By ந.கிருஷ்ணன்

பக்தியால் உள்ளம் குழைந்து அன்பில் உருகி, தொண்டாற்றுபவர்களிடம், தானே வந்து, அருள் சுரந்து, ஆட்கொள்ளும் இறைவனின் தன்மை உணராமல், இறைவனை அடைய, தன் முனைப்புடன் மனிதர்கள் செய்யும் மேலும் சில முயற்சிகளையும், அவைகளால் இறைவனைக் காணமுடியாமல் அவர்கள் தவிப்பதையும் மணிவாசகரின் திருவாசகத்தால் இப்போது காண்போம்.

அன்பாலயமும் ஆகம ஆலயமும்

ஆகமவிதிப்படி மாபெரும் சிவாலயம் கட்டி, குடமுழுக்குச் செய்ய நாளும் நேரமும் குறித்த பல்லவ மன்னனின் கனவில் தோன்றிய இறைவன், மன்னன் குறித்த சமயத்தில் பூசலார் என்னும் அன்பர் கட்டிய சிவாலயக் குடமுழுக்கு விழாவிற்குச் செல்லவிருப்பதால், வேறு நேரம் குறிக்குமாறு கூறிமறைந்தான். கனவு கலைந்த பல்லவ மன்னன் பூசலார் கட்டிய சிவாலயக் குடமுழுக்கு விழாவுக்குப் போக, பூசலாரை அழைத்து விசாரித்தான். தன் மனத்தில் தான் அன்பால் கட்டிய சிவாலயத்தை மன்னனிடம் பெருமைப்படுத்திய இறைவனின் கருணையைப் பூசலார் விளக்க, ஆகமவழியினும் மேலான அன்பு வழியின் பெருமை உணர்ந்து, தன்முனைப்பு நீங்கி, இறையருள் பெற்றான் பல்லவ மன்னன்.

இறைவன் ஆணும் அல்லன்; பெண்ணும் அல்லன்; இருந்தும், அன்பினால் இறைவனை வழிபடுபவர்கள், அவரவர் சமயங்கள் காட்டிய வழிப்படி, இறைவனை ஆண் உருவிலோ, பெண் உருவிலோ, ஆணும்-பெண்ணுமான அம்மையப்பனாகவோ, ஆணும்பெண்ணும் கலந்த அர்த்தநாரி உருவிலோ வழிபடுவார்கள். இவர்கள் அனைவரையும் எந்தவித வெறுப்பும் இல்லாமல் ஒரேவிதமாக நோக்கி அருளும் இறைவன், பெண் எனக் கருதி வழிபட்டவர்களுக்கு ஆண் உருவில் தோன்றியும், ஆண் எனக் கருதி வழிபட்டவர்களுக்கு பெண் உருவில் தோன்றியும், அம்மையப்பன் எனக் கருதி வழிபட்டவர்களுக்கு அவ்விரண்டும் அல்லாத அர்த்தநாரி உருவில் தோன்றியும் காட்சி தந்து, அவரவர் அறிவின் சிறிய எல்லையையும், அவைகளுக்கு அப்பாற்பட்ட தன்னியல்பின் பேரளவினையும் அவர்களுக்கு உணர்த்தி, ஆட்கொள்கிறான்.

சிறிதளவு இறைவனின் தன்மையை உணர்ந்தவுடன், இறைவனைத் தானே முற்றிலும் உணர்ந்ததாகக் காட்டிக்கொள்ளும் இயல்புடைய மனிதர்களையும் வெறுக்காமல் ஆட்கொள்ளும் இறைவன், அவர்களின் ஆணவத்தை நீக்கிய பின்பே ஆட்கொள்கிறான் என்கிறார் மணிவாசகர்.

பிறவியின் நோக்கம்

அகஇன்பங்கள், புறஇன்பங்கள் அனைத்தையும் வெறுத்து, ஐம்புலன்களையும் அடக்கி, பெரிய மலையில் ஏறிச் சென்று, உணவு முதலிய அனைத்தையும் துறந்து, எலும்பும் தோலுமாகிய உடலுடன் கடும்தவம் செய்யும் முனிவர்களின் அறிவுக்கும் எட்டாதவன் இறைவன் என்கிறார் பெருமான்.

இவ்வுலகு, உலகின் நுகர்பொருட்கள், உடம்பு, உடம்பில் உள்ள ஐம்பொறிகளான புறக்கருவிகள், அகக்கருவிகளான ஐம்புலன்கள், மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ஆகியவை அனைத்தையும் உயிர்களுக்கு இறைவன் படைத்துத் தந்ததன் நோக்கம், இவைகள் மூலம் உயிர்கள் அறிவு பெற்று, இறைவனின் கருணையையும், அருளையும் உணர்ந்து, சக உயிர்களிடம் அன்பு செலுத்தி, தொண்டு செய்து, இறைவனின் அருளைப்பெற்று, இறைவனால் ஆட்கொள்ளப்பட்டு, முழுமைப் பேரின்பம் பெறுவதற்கே. இதை உணராது, இறைவன் தந்த உடம்பையும், கருவிகளையும், ‘யான், எனது’ என்னும் ‘தன் முனைப்பு’ அறிவால் வாட்டி, வதைத்துத் தவம் செய்வது, இறைவனின் கருத்துக்கு மாறானது என்பது மணிவாசகர் கருத்து.

அடக்குதலும் அறிதலும்

ஐம்புலன்களையும் அடக்கும் தேவர்களும் இல்லை என்பதால் அவைகளை அடக்குக என்பவர்கள் அறிவிலாதவர்கள்; ஐம்புலன்களும் அடங்கிவிட்டால், அறிவற்ற சடப்பொருளாகிவிடும் இவ்வுடல் என்பதால், ஐம்புலன்களையும் அடக்காத அறிவை அறிந்தேன் என்கிறார் திருமூலநாயனார். (அசேதனம்- சடப்பொருள்) இதன் பொருள், அடக்க நினைத்தால் அடங்காமல் அலையும் ஐம்புலன்களும், மனமும், அவைகளை அன்பே சிவமாம் இறையருள் அறிவைக்கொண்டு அறிய முயன்றால், அவ்வறிவுக்கு, ஐம்புலன்களும் மனமும் அடங்கிப் பணிசெய்யும் என்பதாகும். ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்பார் மணிவாசகர்.

அஞ்சும் அடக்குஅடக்கு என்பர் அறிவிலார்

அஞ்சும் அடக்கும் அமரரும் அங்குஇல்லை;

அஞ்சும் அடக்கில் அசேதனம் ஆம்என்றிட்டு

அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே - திருமந்திரம் :2௦33

“மனம்: அடக்க நினைத்தால் அலையும், அறிய முயன்றால் அடங்கும்” என்பது தத்துவஞானி வேதாத்திரி மகரிஷியின் அருள்வாக்கு.

இவ்வாறு பல்வேறு வகைப்பட்ட முயற்சிகளுக்கும் அகப்படாமல் ஒளித்து நின்ற கள்வனாகிய இறைவனை இன்று தம் கண்ணெதிரே கண்டோம் என்கிறார் மணிவாசகர். இங்கு கண்டேன் என்று தன்னை மட்டும் ஒருமையில் கூறாமல், ‘கண்டனம்’ என்று பன்மையில் கூறியது கவனிக்க வேண்டிய செய்தி. முதலமைச்சர் திருவாதவூரருடன் சென்ற அனைவரும் மறை-பயில் அந்தணன் வடிவில் குருவாக நின்ற இறைவனைக் கண்டிருக்கவேண்டும். மனிதவடிவில் இருந்த குருவை இறைவன் என்று மற்றவர்கள் கருதவில்லை. இறைவன் என்று உணர்ந்துகொண்டதால் மட்டுமே, முதலமைச்சர் திருவாதவூரர் மாணிக்கவாசகரானார்.

பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும்

ஒளிக்கும் சோரனைக் கண்டனம்

ஆர்மின் ஆர்மின் நாள்மலர்ப் பிணையலில்

தாள்தளை இடுமின்

சுற்றுமின் சூழ்மின் தொடர்மின் விடேன்மின்

பற்றுமின் என்றவர் பற்றுமுற்று ஒளித்தும் - திருவாசகம்:அண்டப்பகுதி:140-145

ஒருவருடைய பொருளை, அவர் அறியாமல் திருடிக்கொள்பவனையே ‘சோரன்’(கள்வன்) என்று கூறுவோம். அனைத்து உடல்வாழ் உயிர்களின் ஆழ்மனத்தின் உள்ளே அவைகள் அறியாமல் கலந்து வாழ்வதால் ‘ஒளிக்கும் சோரன்’ என்றார் பெருமான். இவ்வாறு நமக்குள் உள்ளே ஒளிந்து கொண்டிருக்கும் சோரனாம் இறைவனை இங்கே, அங்கே என்று வெளியே தேடி அலையும் நாம், நமக்குள் தேட முயற்சி செய்யாததால்தான் அவன் அகப்படவில்லை.

இறைவனைக் கண்ட இறையனுபவ ஆனந்தத்தால் தன்னை மறந்து, “விரைந்து வாருங்கள்! புதிய நறுமண மலர்மாலைகளால் இறைவனின் திருப்பாதங்களைக் கட்டுங்கள்; அவனைச் சுற்றி வளைத்துக் கொள்ளுங்கள்; தொடருங்கள்; விடாமல் பிடியுங்கள்” என்ற முதலமைச்சர் வாதவூரரின் ஆணையை மீறி இறைவன் தன்னைப் பிறர் கண்களுக்கு ஒளித்துக் கொண்டான்.

இதன்பின், மணிவாசகராக மாறிவிட்ட திருவாதவூரரின் முழுமையான இறையனுபவப் பிழிவை, தேனை, பாலை, தெளிந்த கருப்பஞ்சாற்றின் இனிமையை, கனிந்த திருவாசகத் தேனால் சுவைக்க அடுத்தவாரம் வரைக் காத்திருப்போம்.

தொடர்புக்கு:krishnan@msuniv.ac.in
(வாசகம் தொடரும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

6 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்