ஞாயிறு போற்றுதும்... ஞாயிறு போற்றுதும்...

By எஸ்.ரவிகுமார்

‘யுக்’ என்ற சம்ஸ்கிருதச் சொல்லிலிருந்து வந்ததுதான் ‘யோகா’. ஒருங்கிணைப்பது, ஒழுங்குபடுத்துவது, கட்டுப்படுத்துவது என்பது இதன் பொருள். வழக்கமான உடற்பயிற்சிகளிலிருந்து, இதுதான் யோகாவை வேறுபடுத்துகிறது.

பயிற்சிக் கூடங்களில் செய்வதுபோல, உடலை வலுப்படுத்துவது மட்டுமே அல்ல யோகா. உடலின் இயக்கத்தோடு சுவாசத்தையும் சீராக்கி, அதன் மூலம் எண்ண ஓட்டத்தை ஒழுங்குபடுத்தி, நம் அறிவாற்றலை ஆக்கத்தை நோக்கி இட்டுச் செல்வதுதான் யோகா எனலாம்.

இந்தியாவில் பன்னெடுங்காலத்துக்கு முன்பு தோன்றிய யோகா முறைகளைப் பதினெண் சித்தர்களில் ஒருவரான பதஞ்சலி முனிவர்தான் தொகுத்து, ஒரு வடிவம் கொடுத்தார் என்று கூறப்படுகிறது.

உடலுக்கு நெகிழ்வுத்தன்மையையும், அதே சமயத்தில் உறுதியையும் கொடுக்கக்கூடியவையே யோகாசனங்கள். புத்தகங்கள் அல்லது வீடியோ செயல் விளக்கங்களைப் பார்த்து யோகா செய்வது கூடாது. பல காலமாக யோகா செய்பவர் ஓர் ஆசனத்தை எளிதாகச் செய்துவிடக்கூடும். புதிதாகச் செய்யப் பழகுபவர் அதை வீடியோவில் பார்த்துச் செய்யும்போது, தசைப்பிடிப்பு, சுளுக்கு, மூச்சுப் பிடிப்பு போன்றவை ஏற்படக் கூடும். எனவே, உடற்கூறுகளையும், யோகாசன வழிமுறைகளையும் நன்கு அறிந்த பயிற்சியாளரின் உதவியுடன் கற்பது அவசியம்.

எது உகந்த நேரம்?

எந்த வயதினரும் யோகாசனம் செய்யலாம். உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதயப் பாதிப்பு உள்ளவர்கள், மூச்சுத் திணறல் உள்ளவர்கள், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், கர்ப்பிணிகள் கட்டாயம் ஒரு குருவின் ஆலோசனை, மேற்பார்வையில்தான் யோகாசனங்கள் செய்ய வேண்டும்.

அதிகாலை, மாலை வேளைகள் யோகா செய்ய ஏற்ற நேரம். காபி, டீ போன்ற பானங்கள் அருந்தியிருந்தால் அரை மணி நேர இடைவெளிக்குப் பிறகும், மிதமான உணவு என்றால், இரண்டு மணி நேர இடைவெளிக்குப் பிறகும், முழு சாப்பாடு சாப்பிட்டிருந்தால், நான்கு மணி நேர இடைவெளிக்குப் பிறகும் யோகா செய்யலாம். அதாவது, வயிறு காலியாக இருக்கும்போதுதான் யோகா செய்ய வேண்டும்.

உட்கார்ந்த நிலையில் செய்கிற பத்மாசனம், வஜ்ராசனம், சசாங்காசனம், உஷ்ட்ராசனம், வக்ராசனம், நின்ற நிலையில் செய்கிற கோணாசனம், திரிகோணாசனம், பரிவிருத்த திரிகோணாசனம், அர்த்தகடி சக்ராசனம், அர்த்த சக்ராசனம், மல்லாந்து படுத்த நிலையில் இருந்து செய்கிற பவனமுக்தாசனம், சேதுபந்தாசனம், ஹாலாசனம், குப்புறப் படுத்த நிலையில் செய்கிற மகராசனம், புஜங்காசனம், சலபாசனம், தனுராசனம் என்று ஏராளமான ஆசனங்கள் உள்ளன. இதுதவிர கபாலபதி, நாடிசுத்தி, பஸ்திரிகா, பிரம்மரி, சீதலி, சீத்காரி எனச் சுவாசத்தைச் சீராக்கக்கூடிய பிராணாயாமப் பயிற்சிகள் உள்ளன.

சூரிய நமஸ்காரம்

யோகாசனம் மற்றும் பிராணாயாமத்தின் தொகுப்புதான் ‘சூரிய நமஸ்காரம்’ எனப்படுகிறது. ஊர்த்துவாசனம், பாத ஹஸ்தாசனம், அஸ்வ சஞ்சலாசனம், சதுரங்க தண்டாசனம், சசாங்காசனம், அஷ்டாங்க நமஸ்காரம், புஜங்காசனம், பர்வதாசனம் ஆகிய ஆசனங்களை உள்ளடக்கி 12 நிலைகளில் செய்வதே சூரிய நமஸ்காரம் ஆகும்.

இந்த 12 நிலைகளையும் அடுத்தடுத்து ஒரு கோவையாகச் செய்து முடித்தால் ஒரு சூரிய நமஸ்காரம். இதுபோல 12, 24, 48 என அவரவர் உடல்திறனுக்கேற்ப சூரிய நமஸ்காரங்கள் செய்வார்கள். சூரியனைத் துதிக்கும் மந்திரங்கள் நடுநடுவே உச்சரிக்கப்படும். பத்து நிலைகளில் சூரிய நமஸ்காரம் செய்வதும் உண்டு.

விரதம், நோன்பு, உபவாசம் எனப் பெயர்கள் எதுவாக இருந்தாலும், அதை இறை வழிபாட்டோடு இணைப்பது நம் மரபு. அதேபோலத்தான் சூரிய நமஸ்காரமும். இது முழுக்க முழுக்க நமது உடலை வலுப்படுத்துவதற்கான, ஆற்றலை அதிகரித்துக்கொள்வதற்கான பயிற்சியே. தனது அளப்பரிய ஆற்றலால் உலகத்தைப் பிரகாசிக்கச் செய்துகொண்டிருக்கிற, தனது ஒளியாற்றலால் உலக உயிர்களின் வாழ்வாதாரத்துக்குக் காரணமாக இருக்கிற, கண்ணுக்கு எதிரே தெரியக்கூடிய ஆற்றலின் இருப்பிடம், ஆற்றலின் பிறப்பிடம் என்பதால், சூரியனை முன்னிறுத்தி இந்தச் சூரிய வணக்கம் செய்யப்படுகிறது.

இது தசைகள், மூட்டுகள், முதுகெலும்பு, இடுப்புக்குப் பயிற்சி அளித்து வளையும் தன்மையை அதிகரிக்கிறது. ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது. ரத்தத்தில் பிராண சக்தியை (ஆக்சிஜன்) அதிகரிக்கிறது. இதயத்துக்கு நன்மை அளிக்கிறது. நரம்பு மண்டலம், சுவாச மண்டலச் செயல்பாடுகளைச் சீராக்குகிறது. தேவையற்ற கொழுப்பைக் கரைத்து உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கிறது. சுரப்பிகளின் இயக்கங்களைச் சீராக்குகிறது. உடலோடு மனத்துக்கும் புத்துணர்ச்சி தருகிறது. மன அழுத்தம், மன இறுக்கம், கவலைகள், பதற்றம் நீங்கி மனம் ஒருமைப்படுகிறது. ஞாபக சக்தி வளர்கிறது. எனவே, முறையாக யோகாசனம் பயின்று உடலை உறுதிசெய்வோம். ஆரோக்கியமான சமூகம் படைப்போம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

29 mins ago

உலகம்

50 mins ago

வாழ்வியல்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

மேலும்