துயர் தீர்க்கும் தும்பிக்கையான் பாதம்

By என்.ராஜேஸ்வரி

செப்டம்பர் 5: விநாயக சதுர்த்தி

ஸ்ரீவைணவர்கள் தும்பிக்கை ஆழ்வார் என்று அழைப்பார்கள். சைவர்கள் கணபதி அதாவது சிவ கணங்களின் அதிபதி என்ற பொருளில் அழைத்து ஆராதிப்பார்கள். எல்லா சம்பிரதாயங்களைச் சேந்தவர்களுக்கும் முக்கியமானவர் இவர். பிள்ளையார், கணேசன், கஜமுகன், விக்னேஸ்வரன் என எந்தப் பெயரில் ஆராதித்தாலும், தடைகளை நீக்கி ஆனந்தம் தருபவர் விநாயகர். இவரது பிறந்த நாளே விநாயக சதுர்த்தி.

விநாயகர் பிறப்பு

உலகத்தைக் காக்கும் தொழிலில் சிவன் இருக்க, தனக்கு எப்போதும் கூடவே இருந்து பாதுகாப்பு அளிக்க ஆண்மகன் ஒருவர் வேண்டும் என்று பார்வதி நினைத்தார். அதனால் தனது திருவுடலில் பூசிக் குளிக்க வைத்திருந்த மஞ்சள் பொடியை, தனது தெய்வீக சக்தியை விட்டுக் குழைத்து, ஒரு சிறிய கோபுரம் போல் ஆக்கினார். இதனைத் தனது மோதிர விரலால் பார்வதி தொட்டார். தெய்வீக ஆன்மா கொண்ட அழகிய குழந்தையாக திருவுரு பெற்றது, அந்த மஞ்சள் பொடி கோபுரம். அந்த நிகழ்வையொட்டி வந்ததுதான் ‘பிடித்து வைத்தால் பிள்ளையார்’ என்ற சொலவடை. எளிதாக உருவானதுபோலவே, எளிமையான பூஜையில் மனம் மகிழ்ந்து வரமளிப்பவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எங்கு பார்த்தாலும் கிடைக்கும் ஒரு அருகம்புல் போதும் அவர் மனதைக் குளிர்விக்க.

ஏன் அருகம்புல்?

தனது தந்தை என்பது தெரியாமல், தாயைக் காப்பதற்காக அவருடன் சண்டையிட்ட விநாயகருக்குப் பரிசாகக் கிடைத்தது, யானைத் தலைதான். ஆனாலும் உண்மை தெரிந்த பின் ஈசன் அவருக்கு தனது சிவகணங்களின் தொகுப்புக்குத் தலைமை ஏற்கச் சொல்லி அளித்த பதவி கணபதி. அந்தப் பதவியே அவரது பெயராக ஆனது. பின்னாளில் அவருக்கு ஏற்பட்ட உடல் சூட்டைத் தணிக்க முனிவர்கள் ஓர் உபாயம் கண்டுபிடித்தனர். அதன்படி அருகம்புல் கொத்துக்களைப் பறித்து வந்து அவர் தலையில் சூட்டினார்கள். இதனால் சூடு தணிந்தவர் ஆனந்த கணபதியாக நர்த்தனம் ஆடினார். சென்னை அருள்மிகு கபாலீஸ்வரர் கோயிலில் நர்த்தன கணபதிக்குத் தனிச் சன்னிதி உண்டு. சிறப்பு அலங்காரங்களுடன் காணப்படும் இக்கணபதியை விநாயக சதுர்த்தியன்று அர்ச்சித்து வழிபட வாழ்வு வளம் பெறும் என்பது ஐதீகம்.

சரஸ்வதியும், லஷ்மியும் இருபுறமும் இருக்க அருள்பாலிக்கும் விநாயகர் படங்களை வணிகத் தலங்களில் வைத்திருப்பது உண்டு. பல யுகங்களாக வழக்கத்தில் உள்ள விநாயக சதுர்த்திப் பண்டிகை உலகமெல்லாம் கொண்டாடப்படுகிறது.

பக்த துக்காராமுக்கு விநாயகர் என்றால் ரொம்ப பிரியம். அவர் அழைக்கும்பொழுதெல்லாம் விநாயகர் அவருடன் மதிய உணவு சாப்பிட வருவாராம். இதனைக் கேள்விப்பட்ட பெரும் செல்வந்தர் சின்சுவாட், பக்த துக்காராமைத் தனது இல்லத்தில் சாப்பிட அழைக்க நினைத்தார்.

பல மைல் தூரத்தில் இருந்தாலும், அவரது இந்தச் சிந்தனையை உணர்ந்தார் துக்காராம். இப்பொழுது கிளம்பினால்தான் மதிய உணவிற்குள் செல்ல முடியும் என்று எண்ணிக் கிளம்பிவிட்டார். துக்காராமை அழைக்க வந்த சின்சுவாட்டின் பணியாளர் வழியிலேயே அவரைச் சந்திக்கும்படி ஆயிற்று. இருவரும் சின்சுவாட்டின் மாளிகையை அடைந்தனர். பந்தியில் அமரும் முன், இரண்டு இலைகள் அதிகமாகப் போடச் சொன்னார் துக்கா. ஒன்று விநாயகருக்கும், மற்றொன்று விட்டலுக்கும் என்று விளக்கம் கொடுத்தார். இலையில் உணவு பரிமாறி வெகு நேரமாகியும், விநாயகர் வரவில்லை. விட்டல் வந்து இலை முன் அமர்ந்துவிட்டதாக உறுதியளித்தார் துக்காராம். அங்கிருந்தவர்கள் விநாயகர் வருவாரா என வினவினர்.

கடலில் மூழ்கிவிட்ட தனது பக்தர் ஒருவரைக் காப்பாற்ற விநாயகர் சென்றுள்ளதால் கூடிய விரைவில் வந்துவிடுவார் என்று துக்காராம் சொல்லிக் கொண்டு இருக்கும்பொழுதே வந்துவிட்டார் விநாயகர். துக்காராம் கண்களுக்கு மட்டுமே விநாயகர் தென்பட்டாராம். கடலில் இறங்கியதால் அவரது உடைகள் நனைந்துள்ளன என்று மேலும் கூறியுள்ளார்.

அங்கு கூடியிருந்த மற்றவர்களுக்கு விநாயகர் தெரியாவிட்டாலும், அவரது ஈர உடையில் இருந்து தண்ணீர் சொட்டுவது மட்டும் தெரிந்தது. இலையில் உணவுப் பொருட்கள் காலியாவதையும் காண முடிந்தது. தனவந்தர் சின்சுவாட்டும் அங்கு குழுமி இருந்த பக்தர்களும் ஆனந்தப் பரவசம் அடைந்தனர். எதனையும் எதிர்பாராத துக்காராமின் அன்பே விட்டலையும் விநாயகரையும் வரவழைத்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

6 mins ago

இந்தியா

26 mins ago

தமிழகம்

39 mins ago

உலகம்

50 mins ago

உலகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்