தெய்வத்தின் குரல்: வெள்ளையரின் ஆராய்ச்சி - நல்லதும் கெட்டதும்

By செய்திப்பிரிவு

இப்போது தேசம் இருக்கிற துர்த்தசையில், ‘ஓரியன்டலிஸ்ட்', ‘இன்டாலஜிஸ்ட்' எனப்படுகிற வெள்ளைக்காரர்களும், அவர்களுடைய வழியைப் பின்பற்றுகிற நம்முடைய ஆராய்ச்சியாளர்களும் சொல்லுகிறதிலிருந்துதான் வேதங்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

வேதங்களைப் பற்றி ரொம்பவும் உபயோகமான பல ஆராய்ச்சிகளை வெள்ளைக்காரர்கள் பண்ணியிருப்பதை ஒப்புக் கொள்கிறேன். அவர்களுடைய தொண்டுக்கு நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும். மாக்ஸ்முல்லர் போலப் பலர் வாஸ்தவமாகவே வேதத்திலுள்ள கௌரவ புத்தியினாலேயே எத்தனையோ பரிச்ரமப்பட்டு தோண்டித் துருவிச் சேகரம் பண்ணி, ஆராய்ந்திருக்கிறார்கள்.

வால்யூம் வால்யூமாகப் புஸ்தகம் போட்டிருக்கிறார்கள். ஸர் வில்லியம் ஜோன்ஸ் என்று இருநூறு வருஷங்களுக்கு முந்திக் கல்கத்தா ஹைகோர்ட் ஜட்ஜாக இருந்தவர் ஆரம்பித்த “ஏஷியாடிக் ஸொஸைட்டி” போட்டிருக்கும் வைதிக புஸ்தகங்களைப் பார்த்தாலே பிரமிப்பாயிருக்கும்.

மாக்ஸ்முல்லர், ஈஸ்ட் இண்டியா கம்பெனி உதவியுடன் ஸாயண பாஷ்யத்தோடு ரிக் வேதத்தையும், இன்னும் பல ஹிந்து மத நூல்களையும் சீரியலாக அச்சிட்டிருக்கிறார். இப்படி இங்கிலீஷ்காரர்கள் மட்டுமின்றி, ஜெர்மனி, பிரான்ஸ், ருஷ்யா தேசத்தவர்களும் நிரம்ப உழைத்து ஆராய்ச்சி பண்ணியுள்ளனர்.

“கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்ததைவிட, ஹிந்துக்களின் வேதங்களை நாம் கண்டுபிடித்ததுதான் பெரிய டிஸ்கவரி” என்று கூத்தாடிய வெள்ளைக்காரர் உண்டு. தேசம் முழுவதும் சிதறிக் கிடந்த வேத வேதாங்கங்களைக் கண்டு பிடித்து, தர்ம-க்ருஹ்ய-ச்ரௌத ஸூத்ரங்களோடு மொழி பெயர்த்து ‘பப்ளிஷ்' பண்ணியிருக்கிறார்கள்.

வைதிக சாஸ்திரங்கள் மட்டுமின்றி குண்டலினீ தந்திரம் பிரபலமானதே ‘ஆர்தர் அவலான்' என்கிற ஸர் ஜான் உட்ராஃபின் புஸ்தகங்களால்தான். நம் கலாசாரத்தின் மற்ற அம்சங்களுக்கும் உதவிய வெள்ளைக்காரர் உண்டு. கர்ஸன் வைஸ்ராயாக இருந்தபோது Protection of Ancient Monuments என்று சட்டம் கொண்டு வந்ததால்தான் நம்முடைய கோயில்கள் முதலியவற்றை யார் வேண்டுமானாலும் இடிக்கலாம் என்ற நிலை மாறிற்று.

ஃபெர்கூஸன் தேசம் முழுவதும் உள்ள நம் சிற்பச் செல்வங்களை ஃபோட்டோ எடுத்துப் பிரச்சாரம் பண்ணினான். கன்னிங் ஹாம், மார்ட்டிமர் வீலர், ஸர் ஜான் மார்ஷல் முதலானவர்கள் ஆர்க்கியாலஜியில் [தொல் பொருளியலில்] நிரம்பச் செய்திருக்கிறார்கள். மெக்கென்ஸி தேசம் முழுவதும் ஏட்டுச் சுவடிகளைச் சேகரித்ததால்தான் நம் பழைய சாஸ்திரங்களில் பலவற்றை இன்று தெரிந்துகொள்ள முடிகிறது. எபிக்ராஃபிக்கென்றே [சாசனங்களுக்கென்றே] இலாகா வைத்ததும் வெள்ளைக்கார ஆட்சியில்தான்.

இப்படியாக, நமக்கு எத்தனையோ கெடுதலை உண்டு பண்ணின வெள்ளைக்கார ஆட்சியிலும் சில நன்மைகள் விளைந்தன. ஆனாலும் இந்த நன்மைக்குள்ளேயேகூடச் சில கெடுதல்களும் உண்டாயின.

ஏனென்றால் ஓரியன்டலிஸ்ட், இன்டாலஜிஸ்ட் என்கிறவர்களில் பலருடைய உத்தேசம், வேதத்திலிருந்து சரித்திரத்தை நிர்மாணிப்பது, அப்படிச் சொல்லிக்கொண்டு ஆரியர்-திராவிடர் என்று துவேஷம் உண்டாக்குவது முதலானவைதான். அவர்கள் ‘பகுத்தறிவுக் கொள்கை' என்பதன்படி அதீந்திரியமானதையெல்லாம் allegory (உருவகம்) என்று தப்பர்த்தம் செய்வார்கள்.

எவல்யூஷன் தியரி (பரிணாமக் கொள்கைப்) படி வேதரிஷிகள் நம்மைவிட தாழ்ந்த Primitive -கள் என்றே வைத்து இவர்கள் பெரும்பாலும் வியாக்கியானம் செய்வார்கள். கிறிஸ்துவ மதத்தைப் பரப்பும் உள்நோக்கத்திலேயே நம் மதநூல்களை ஆராய்ச்சி செய்து, நடுநிலைமை மாதிரி காட்டிக்கொண்டே நம்மை மட்டந்தட்டியவர்களும் உண்டு.

தங்கள் பாஷைக்கும் ஸம்ஸ்கிருதத்துக்கும் உள்ள ஒற்றுமையைப் பார்த்து comparitive philology [மொழி ஒப்பு இயல்] -காகவே ஆராய்ச்சி பண்ணினவர் அநேகர்.

அவர்கள் செய்த ரிஸர்ச், பிரசாரம், உழைப்புக்கெல்லாம் அவர்களை நாம் சிலாகிக்கலாம். ஆனால் வேதங்களின் முக்கிய நோக்கம் ( purpose ) லோக க்ஷேமார்த்தம் வேத சப்தத்தைப் பரப்பி அத்யயனம் பண்ணுவது, யக்ஞம் முதலான வைதிக கர்மாக்களைப் பண்ணுவது என்பனவே.

இந்த இரண்டையும் தள்ளிவிட்டு, புத்திக்கு அதீதமான வேதத்தை புத்தியால் ஆராய்ந்து, ஜனங்களின் வாக்கிலும் காரியத்திலும் உயிரோடு வாழ வேண்டிய வேதத்தைப் பெரிய புஸ்தகங்களாக்கி லைப்ரரியில் வைப்பது, ஜூவில் (Zoo) இருக்க வேண்டிய ஜீவ ஜந்துக்களைச் ‘செத்த காலே'ஜில் [மியூசியத்தில்] வைக்கிற மாதிரித்தான்.

தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

37 mins ago

தமிழகம்

53 mins ago

கல்வி

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்