கண்ணவண்ணம் கண்ட கலைஞன்

By முனைவர் செளந்தர மகாதேவன்

நம் வீட்டு வாசல் கோலத்திலிருந்து தொடங்குகின்றது நம் ஓவிய ரசனையின் தொடக்கப்புள்ளி. வண்ணங்களில் குழைத்த சொல்லிலாக் கவிதைகள் ஓவியங்கள். கண்டதும் விழியில் நுழைந்து இதயம் கவரும் உன்னதக் கலை வடிவம்.

ஆங்கில இந்து நாளிதழ் மூலமாகக் கேலிச் சித்திரக் கலைஞராக நன்கு அறிமுகமானவர் கார்டூனிஸ்ட் கேசவ் வெங்கட ராகவன். இவர் அருமையான ஓவியக் கலைஞரும் கூட. சிற்பங்களுக்குரிய முப்பரிமாணமாய் அவருடைய ஓவியச் சிற்பங்கள் முன் நீண்டு நின்று உயிர்த்துடிப்பாய்ப் பேசுகின்றன நம்மோடு.

இந்தியப் புராணங்களை அறிந்தவர்

நீலக்கடலின் நீட்சியாய், வான்முகிலின் நீட்சியாய் மத்பாகவதத்தை ஆத்மார்த்தமாய் உள்வாங்கி நீலவண்ணத்திலும் பல கோல வண்ணத்திலும் சமூகவலைதளங்களில் விதவிதமாய் ஓவியங்களை தந்துகொண்டே இருக்கிறார். புராணக்கதை மரபில் கேசவின் ஓவியங்கள் ஏதோவொரு கதையை வண்ணங்களால் நம்மிடம் சொல்லிக்கொண்டே யிருக்கின்றன.

இந்திய வீடுகளின் வாசல்கள் வண்ணப்பொடிகளால் அழகுபடுத்தப்பட்ட கோலங்களால் தினமும் உயிர்பெறுகின்றன எனும்போது இந்திய ஓவிய மரபும் அப்படித்தானே இருக்க முடியும்?

ஓவியத்தில் கம்பராமாயணம்

ஸ்ரீ ராமநவமி வாழ்த்துக்கள் என்ற தலைப்பிட்டு கேசவ் வரைந்த ராமர் ஓவியம் கம்பராமாயணப் பாடல்களின் ஓவியச் சுருக்கமாய் அமைவதைக் காண முடிகிறது. சீதா பிராட்டியார் ராமபிரானின் இடது தோளுக்குப் பின் ஆதரவாய் சாய்ந்து ஒன்றி நிற்க,

அனுமன் எண்சாண் உடலை ஈரடியாய் குறுக்கிப் பக்திப்பெருக்கால் தன் தலைவனிடம் சரணாகதியடைந்து கைகூப்பி நிற்க, சரணாகதியடைந்த தன் அன்புத் தொண்டனை அன்போடும் பாசத்தோடும் அந்தச் சக்கரவர்த்தித் திருமகன் ராமபிரானின் இடக்கரம் ஆஞ்சநேயரை அன்போடு வருடிக்கொடுக்கிறது. அந்த ஓவியத்தில் ராமபிரானின் கமலக் கண்களில் கருணையை கேசவ் காட்டுகிறார்.

கண்ணனின் லீலைகள்

கண்ணவண்ணமாம் கருநீல வண்ணத்தில் அவர் நித்தமும் வரையும் ஓவியங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. காளிங்கமர்த்தனனாக, கோவர்த்தனகிரிதாரியாக, யசோதை மைந்தனாக ஒவ்வொரு நாளும் கண்ண ஊர்வலம் நடத்திவருகிறார்.

ஆடையில்லாமல் குட்டிக்குழந்தையாய் யசோதா முன் நிற்கும் கண்ணனை ரவிவர்மாவின் ஓவியம் அழகியலோடு பதிவு செய்திருப்பதைப் போல, சிறுகோவணத்தோடு கண்ணீர் சிந்த யசோதா முன் கண்ணனை கேசவ் ஒரு கணம் நிறுத்திப் பார்க்கிறார்.

புராணப் பின்னணி கொண்ட கதாபாத்திரங்களைப் படைக்கும் கேசவ் நம்மை அந்தக் காலகட்டத்திற்கு அழைத்துச்செல்வதில் வெற்றியடைகிறார்.அவர் படைக்கும் பாத்திரங்கள் அழகான கமலக்கண்கள் உடையதாக அமைகின்றன.வியப்பையும், கோபத்தையும், காதலையும், கருணையையும், வருத்தத்தையும் அவர் அக்கண்கள் மூலம் மிக எளிதாக உணர்த்திவிடுகிறார்.

மகாபாரத யுத்தத்தில் அம்பு தைக்கப்பட்டு இறுதி வினாடியில் இருக்கிற பிதாமகர் பீஷ்மரைக் கையில் தாங்கிய கிருஷ்ணரைக் கண்களில் வழியும் கண்ணீரோடு பீஷ்மர் சரணாகதியடைந்து கைகூப்பித்தொழும் காட்சியைத் தத்ரூபமாய் வரைந்து ரசிகனைக் கண்ணீர் சிந்த வைக்கிறார். விதவிதமாய்க் கண்ணலீலைகளை வரைந்து கண்ணதாசனாய் மாறிவிடும் கேசவ்வின் எந்த ஓவிய முகமும் நமக்குக் கண்ணனின் சாயலில் அமைவதாகவே தெரிகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

14 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

வாழ்வியல்

33 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்