வார ராசிபலன் 16-10-2014 முதல் 22-10-2014 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

By சந்திரசேகர பாரதி

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், புதன் ராகு ஆகியோர் சஞ்சரிப்பது சிறப்பு. 4-ல் உள்ள குரு 8, 10, 12-ம் இடங்களைப் பார்ப்பதாலும், உங்கள் நிர்வாகத்திறமை கூடும். எதிரிகள் விலகுவார்கள். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்த காரியங்கள் இப்போது நிறைவேறும். முன்னேற்றத்துக்கான தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்களால் உங்களுக்கும் உங்களால் அவர்களுக்கும் நலம் உண்டாகும்.

நல்லவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மக்களால் ஓரளவு அனுகூலம் உண்டாகும். கணிதம், விஞ்ஞானம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சிக் காண்பார்கள். 18-ம் தேதி முதல் சூரியன் 7-ம் இடம் மாறி, சனியோடு கூடுவது சிறப்பாகாது. எதிர்ப்புக்கள் அதிகரிக்கும். பிறரிடம் சுமுகமாகப் பழகுவது அவசியம். 20-ம் தேதி முதல் சுக்கிரன் 7-ம் இடம் மாறுவதும் சிறப்பாகாது. கணவன்-மனைவி உறவு நிலை பாதிக்கும். பெண்களாலும் தொழில் கூட்டாளிகளாலும் பிரச்சினைகள் சூழும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது.

அதிர்ஷ்டமான நாட்கள்: அக்டோபர் 20, 21.

திசைகள்: கிழக்கு, வடக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: சிவப்பு, பச்சை, புகை நிறம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 4, 5, 9.

பரிகாரம்: சக்தி வழிபாடு செய்வது நல்லது. மகாலட்சுமி அஷ்டகம் படிக்கவும். ஏழைப் பெண்களுக்கு உதவவும்.

ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 6-ல் சனியும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பு. குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். பேச்சில் திறமை வெளிப்படும். பண வரவு சற்று அதிகரிக்கும். நல்லோர் தொடர்பு நலம் தரும். முக்கியமான தகவல் ஒன்று வந்து சேரும். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்குப் பாராட்டுகள் குவியும். ஆன்மிக, அறநிலையப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். பிள்ளைகளால் நல்லதும் அல்லாததுமான பலன்கள் கலந்தவாறு ஏற்படும்.

வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு விலகும். 5-ல் ராகுவும், 8-ல் செவ்வாயும் உலவுவதால் சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம்; எச்சரிக்கை தேவை. 18-ம் தேதி முதல் சூரியன் 6-ம் இடம் மாறுவதால் அரசு விவகாரங்கள் ஆக்கம் தரும். 20-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ம் இடம் மாறுவதால் வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவை. கலைஞர்களுக்கும் பெண்களுக்கும் பிரச்சினைகள் சூழும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கை தேவை.

அதிர்ஷ்டமான நாட்கள்: அக்டோபர் 20, 21.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு, மேற்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, பச்சை, நீலம்.

எண்கள்: 5, 6. 7, 8.

பரிகாரம்: குரு, ராகு, செவ்வாய் ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது.

மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 4-ல் புதனும் சுக்கிரனும் 10-ல் கேதுவும் சஞ்சரிப்பதால் குடும்ப நலம் சீராக இருந்துவரும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். நல்லவர்கள் உங்களுக்கு நலம் புரிய முன்வருவார்கள். பொருளாதார நிலை உயரும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். வாக்குவன்மை வெளிப்படும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு, கமிஷன் ஏஜன்ஸி போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண வழிபிறக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். சுப காரியங்கள் நிகழச் சந்தர்ப்பம் கனிந்துவரும்.

நல்ல தகவல் வந்து சேரும். நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். 4-ல் சூரியனும் ராகுவும் உலவுவதால் அலைச்சல் அதிகமாகும். உடல் சோர்வு ஏற்படும். 18-ம் தேதி முதல் சூரியன் 5-ம் இடம் மாறுவதும் சிறப்பாகாது. பிள்ளைகள் நலனில் கவனம் தேவை. 20-ம் தேதி முதல் சுக்கிரன் 5-ம் இடம் மாறுவது விசேஷமாகும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மகப்பேறு பாக்கியம் உண்டாகும். மந்திர, தந்திர சாஸ்திரங்களில் ஈடுபாடு கூடும். செவ்வாய் 7-ல் இருப்பதால் பிறரிடம் சுமுகமாகப் பழகுவது அவசியம்.

அதிர்ஷ்டமான நாட்கள்: அக்டோபர் 20, 21.

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, தெற்கு, வடக்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை, மெரூன், பச்சை, பொன் நிறம், மஞ்சள்.

எண்கள்: 3, 5, 6, 7.

பரிகாரம்: சூரிய நாராயணன், துர்கையை வழிபடவும்.

கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் சுக்கிரனும் ராகுவும் உலவுவது சிறப்பு. செவ்வாய் 6-ல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. எதிர்ப்புக்களைக் கடந்து வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். அரசுப்பணிகள் நிறைவேறும். முக்கியஸ்தர்களது சந்திப்பு நிகழும். அதனால் அனுகூலமும் ஏற்படும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு வரவேற்பு கூடும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். பிறரால் புகழப்படுவீர்கள். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகமாகும்.

எடுத்த காரியங்கள் இனிது நிறைவேறும். வழக்கிலும் போட்டிப் பந்தயங்களிலும் வெற்றி பெறுவீர்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும். இன் ஜினீயர்களது நிலை உயரும். 18-ம் தேதி முதல் சூரியன் 4-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. அலைச்சல் அதிகரிக்கும். உடல் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். 20-ம் தேதி முதல் சுக்கிரன் 4-ம் இடம் மாறுவதால் புதிய சொத்துக்கள் சேரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். சுகானுபவம் உண்டாகும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: அக்டோபர் 20, 21.

திசைகள்: தென்மேற்கு, கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: சாம்பல் நிறம், ஆரஞ்சு, சிவப்பு.

எண்கள்: 1, 4, 6, 9.

பரிகாரம்: சனிப் பிரீதி செய்து கொள்வது நல்லது. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவவும்.

சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும் 3-ல் சனியும் உலவுவதால் முக்கியமான எண்ணங்களில் ஒன்றிரண்டு இப்போது நிறைவேறும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழ அடிகோலப்படும். பேச்சில் திறமை வெளிப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருவாய் கிடைத்துவரும். சுபச் செலவுகள் சற்று அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு வெற்றிகள் குவியும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைத்துவரும். தொழிலாளர்களது கோரிக்கைகள் ஒன்றிரண்டு இப்போது நிறைவேறும். பொது நலப்பணிகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு வரவேற்பு கூடும்.

மக்களால் அளவோடு நலம் உண்டாகும். ஸ்பெகுலேஷன் துறைகள் ஓரளவுக்கு லாபம் தரும். 2-ல் சூரியன், ராகு ஆகியோரும் 8-ல் கேதுவும் இருப்பதால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் அவ்வப்போது ஏற்படும். பிற மொழி, மத, இனக்காரர்களால் பிரச்சினைகள் சூழும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. 18-ம் தேதி முதல் சூரியன் 3-ம் இடம் மாறுவதால் அரசு விவகாரங்களில் அனுகூலமான திருப்பம் உண்டாகும். 20-ம் தேதி முதல் சுக்கிரன் 3-ம் இடம் மாறுவதால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: அக்டோபர் 20, 21.

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, தெற்கு, மேற்கு.

நிறங்கள்: நீலம், சிவப்பு, வெண்மை, .

எண்கள்: 5, 6, 8, 9.

பரிகாரம்: ராகு, கேது, சூரியன், குருவுக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்யவும். ஸ்ரீரங்கநாதரை வழிபடவும்.

கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசியில் புதனும் சுக்கிரனும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பு. சுபக்கிரகங்கள் அனுகூலமாக இருப்பதால் சுப காரியங்கள் நிகழச் சந்தர்ப்பம் கூடிவரும். பொருள்வரவு திருப்திகரமாக இருக்கும். காரியத்தில் வெற்றி கிடைக்கும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். பெரியவர்களும் தனவந்தர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். கலைத் துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் நிலை உயரப் பெறுவார்கள்.

கடல் வாணிபம் லாபம் தரும். திரவப் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். ஜன்ம ராசியில் சூரியனும் ராகுவும் இருப்பதால் அலைச்சல் கூடவே செய்யும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். 18-ம் தேதி முதல் சூரியன் 2-ம் இடம் மாறி சனியோடு கூடுவதால் குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும். கண் உபாதை உண்டாகும். 20-ம் தேதி முதல் சுக்கிரன் 2-ம் இடம் மாறுவதால் பண வரவு அதிகமாகும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: அக்டோபர் 20, 21.

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: வெண்மை, இளநீலம், பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 6.

பரிகாரம்: ராகு, கேது, சூரியன், சனி ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது. பார்வையிழந்தோருக்கு உதவவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

53 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

4 hours ago

மேலும்