உலகை ஒளிமயமாக்கும் சாந்திகிரி ஆசிரமம்

By நதீரா

“நேற்று நடந்து முடிந்ததென்ன? வெறுமனே செல்வமும் கல்வியும் அறநெறியும் மட்டும் வளர்த்துக் கொண்டிருப்பதற்கு ஈடாக இன்றைய சிந்தனை, நாளைய செயல்திறனாகவும் உருவெடுக்கிறது. இதை உயர்த்துகிற தர்மமாக எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்று சிந்திக்க வேண்டும். இந்தச் சிந்தனை பழக்கமாக அமையவும், வாழ்வில் இடர்பாடுகளை எதிர்கொள்ள நீங்கள் தொடர்ந்து செய்துவரும் செயற்பாடுகள் உங்களுக்கு உதவுவதற்கும் நான் கண்ட பாதையை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்”. இது நவஜோதி ஸ்ரீகருணாகர குரு அவர்களின் வாக்கு.

நவஜோதி ஸ்ரீகருணாகரகுருவால் உருவாக்கப்பட்ட சாந்திகிரி ஆசிரமம், கேரளத்தில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் போத்தன்கோடு கிராமத்தில் இருக்கிறது. இந்த ஆசிரமம் தாமரைப் பூவின் வடிவமைப்பில் நிறுவப்பட்டிருக்கிறது. கால தேச வர்த்தமானத்திற்கு அப்பாற்பட்டது குருவின் அன்பு. வரையறைகள் இல்லாத இறையன்பு குருவினுடையது. பகவான் கிருஷ்ணர், இயேசு, நபிகள், திருவள்ளுவர், ரமண மகரிஷி, வள்ளலார், அகத்தியர், போகர், அய்யா வைகுண்டர் போன்றோர் ஆன்மிகத்தை எங்கு நிறுத்தினார்களோ அங்கிருந்து ஆன்மிகத்தைத் தொடங்கியவர் கருணாகர குரு.

அதன் காரணமாகவே குருவின் முன் மானுடம் அனைத்தும் ஒன்றுபோல் கருதப்படுகின்றனர். சாதி, மதம், இனம், உட்பிரிவுகள், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாடு, மொழி போன்ற எதுவுமே குருவை வந்தடையத் தடையில்லை. ஒரு சிறு வேதனைகூட குருவின் வேதனையாக மாறும். பக்தர்களின் துக்கத்தை குரு தாமாகவே ஏற்றுக்கொண்டு அவற்றை அனுபவித்துத் தீர்த்தார்.

ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள சந்திரூர் என்ற கிராமத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர் கருணாகரகுரு. ஆன்மிகத் தேடலில் வீட்டைவிட்டு வெளியேறியவர், பிரம்மத்தின் விருப்பப்படி இந்த உலக வாழ்வின் இருப்பை உணர்ந்தார். பிறகு சிறு ஓலைக் குடிசையில் சாந்திகிரி ஆசிரமத்தை நிறுவினார். அன்னதானம், ஆத்மபோதனை, மருத்துவ சேவை ஆகிய மூன்றும் ஆசிரமத்தின் முக்கியச் செயல்பாடுகள். இந்த உலகில் அனைத்து இடங்களிலும் நிறைந்திருக்கும் கருணை வடிவான பிரகாசமே இறைநிலை என்பதை உணர்ந்தார். அதையே பக்தர்களுக்கும் போதித்தார்.

துக்கப் பரிகாரம்

குரு தனது ஸ்தூல உடலில் குடிகொண்டிருந்த போது உலக மக்கள் பலரும் அவரை நாடித் தங்களது துக்கப் பரிகாரத்துக்கு வேண்டி குருவின் திருவடிகளைத் தேடி வந்திருந்தனர். அவர்களது துக்கத்துக்கு முழுமையான பலனை குரு அளித்தார். ஏராளமானோர் குருவைத் தேடி வந்தபோது அந்த மக்களுக்காக இறைவனைப் போற்றவும் வழிபடவும் சரணடையவும் துக்கங்கள் நீங்குவதற்கும் வழிகாட்டினார்.

தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்திலும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் இந்த ஆசிரமத்தின் கிளைகள் நிறுவப்பட்டுள்ளன. உணவுகூட அருந்தாமல் தியானித்தும் தவமிருந்தும் நாட்டு நலனுக்காகப் பிரார்த்தனை செய்து சங்கல்பமும் செய்தார். குருவின் பவுதீக வாழ்வுக்குப் பிறகுதான் குருவை உலகம் உணரும் என்பது பிரம்ம வாக்கு. அந்த மொழிக்கேற்ப உலகம் குருவை உணரத் தொடங்கியுள்ளது.

எளியவருள் எளியவராக 72 மகத்தான ஆண்டுகள் இந்த உலகில் வாழ்ந்துவந்தார் நவஜோதி ஸ்ரீ கருணாகர குரு. மனித வாழ்க்கையை இறைவனின் விருப்பத்துக்கு இணங்க பயனுள்ளதாக்குவது எப்படி என்று வாழ்ந்து காட்டிய குரு, 1999-ம் ஆண்டு மே மாதம் 6-ம் தேதி ஆதி சங்கல்பத்தில் ஒன்றிணைந்து புதிய ஒளியாக நிறைந்து நிற்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 mins ago

தொழில்நுட்பம்

44 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்