பைபிள் கதைகள் 56: எதிரியைக் கொல்ல மறுத்த தாவீது!

By அனிதா அசிசி

கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசனாக இருந்தபோதும் அரியாசனத்தை விட்டுக் கொடுக்கச் சவுலுக்கு மனம் வரவில்லை. மக்களின் ஆதரவு தாவீதுக்குப் பெருகியதைக் கண்டு எங்கே அவன் அரசனாகிவிடுவானோ எனப் பயந்தே அவனைக் கொல்லத் துணிந்தார். இளவரசன் யோனத்தான் உயிர் நண்பனாக இருந்தபோதும், சவுலின் மருமகனாக இருந்தபோதும் தாவீதை தனது எதிரியாகவே கருதினார் சவுல். இதனால் அரசனின் கொலைமுயற்சியிலிருந்து நான்காவது முறையாகத் தப்பித்த தாவீது, இனியும் அரண்மனையில் இருப்பது சரியல்ல என்ற முடிவுக்கு வந்தார். உடனடியாகத் தன்னுடைய வீட்டுக்குப் போய் ஒளிந்துகொண்டார்.

சவுலோ தாவீதைக் கொல்வதற்கு ஆட்களை அனுப்பினார். தன் தந்தையின் திட்டம் மீகாளுக்குத் தெரிந்துபோனது. அதனால் அவள் தன் கணவனிடம்: “இன்றிரவு நீங்கள் தப்பி ஓடாவிட்டால், நாளை உங்களை நான் பிணமாகத்தான் பார்க்க நேரிடும்” என்று பதறினாள். அவளது எச்சரிக்கைக்குச் செவிமடுத்த தாவீது “வீட்டின் வாயிலில் உன் தந்தையின் ஆட்கள் காத்திருக்கிறார்கள், நான் எப்படித் தப்புவேன்?” என்றார்.

அன்றிரவு தாவீது ஜன்னல் வழியாகத் தப்பித்துப் போக மீகாள் உதவினாள். மீகாள் மட்டுமல்ல, இளவரசன் யோனத்தானும் தன் தந்தை தாவீதைக் கொல்லத் துடிக்கிறார் என்று தெரிந்துகொண்டபின் தாவீதைத் தப்பவைத்தார். அதன்பின் பல நகரங்களுக்கு ஓடி அங்கிருக்கும் ராஜாக்களிடம் அடைக்கலம் கேட்டு, எங்கும் நிரந்தரமாகத் தங்க முடியாமல் அலைந்தார். சவுலோ தன் ஆட்களுடன் தாவீதைக் கொல்லத் துரத்திக்கொண்டே இருந்தார்.

கண்களை மறைத்த பதவி ஆசை

அதுல்லாம் என்ற குகையில் தாவீது மறைந்து வாழ்ந்தபோது அவருடைய அண்ணன்களும் தாவீது இருக்கும் இடத்துக்கு வந்து, அவருடன் சேர்ந்துகொண்டார்கள். அதேபோல் அநீதியினால் கொதித்துப்போய் அரசனுக்கு எதிராகப் புரட்சிசெய்து பிரச்சினைகளில் சிக்கியிருந்தவர்களும் கடன்தொல்லையால் அவதிப்பட்டவர்களுமாகச் சுமார் 400 ஆண்கள் தாவீதோடு சேர்ந்துகொண்டார்கள். அவர்களுக்குப் போர்ப் பயிற்சி அளித்த தாவீது அவர்களின் தலைவரானார். பின்னர் நோபு நகரில் கடவுளாகிய யகோவுக்கு ஊழியம் செய்துவந்த குருவாகிய அகிதூப்பின் மகன் அகிமெலேக்கைச் சென்று சந்தித்தார். தாவீது அவரிடம் உணவையும் ஆயுதங்களையும் பெற்றுக்கொண்டார். ஆனால், அகிமெலேக்குக்கு சவுல் அரசன் தாவீதை எதிரியாக நினைத்துக் கொல்லத் துரத்துவது குறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை. அதனால் அவர் தாவீதுக்கு உதவியது மட்டுமல்ல, கடவுளால் தேர்தெடுக்கப்பட்டவர் தாவீது என்பதையும் அறிந்திருந்ததால் மிகவும் அன்பு பாராட்டினார்.

அகிமெலேக்கின் இந்தச் செயலை ஒற்றர்கள் வழியே கேள்விப்பட்ட சவுல் அரசன், நோபு நகருக்கு ஆட்களை அனுப்பி தாவீதுக்கு உதவிய அகிமெலேக்கையும் 85 குருமார்கள் உள்ளிட்ட அவரது குடும்பத்தார் அனைவரையும் அரண்மனைக்கு அழைத்துவரச் செய்தான். அகிமெலேக்குக் கொடுத்த நியாயமான விளக்கத்தைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாதபடி சவுலின் கண்களைப் பதவியாசை மறைத்தது. இதனால், “எனக்குத் துரோகம் செய்த அகிமெலேக்கையும் இந்தக் குருமார்களையும் கொன்றுபோடுங்கள்” என்று உத்தரவிட்டான்.

குருமார்கள் வாழ்ந்த நோபு நகரத்தையும் தாக்கி, ஆண்கள், பெண்கள், பிள்ளைகள், கைக்குழந்தைகள் எல்லாரையும் வாளுக்குப் பலியாக்கினான். ஆடுமாடுகளையும் கழுதைகளையும்கூட அவன் விட்டுவைக்கவில்லை. ஆனால், அகிமெலேக்கின் மகன்களில் ஒருவராகிய அபியத்தார் கொலைக்களத்திலிருந்து தப்பியோடி தாவீதிடம் தஞ்சமடைந்து சவுல் இரக்கமின்றி நடத்திய படுகொலைகளைப் பற்றி எடுத்துக் கூறினார். தன்பொருட்டு இத்தனை மரணங்கள் நிகழ்ந்ததை எண்ணி தாவீது மிகவும் வருந்தி அழுதார்.

ஓயாத துரத்தல்

தாவீதிடம் பலமுறை தோற்ற பெலிஸ்தியர்கள் கேகிலா என்ற நகரத்தைத் தாக்கி, அங்குள்ள தானியங்களையும் செல்வங்களையும் கொள்ளையடித்துக் கொண்டிருந்ததைக் கேள்விப்பட்ட தாவீது, தனது சிறு படையுடன் விரைந்து சென்று கேகிலா நகரத்தாரைக் காப்பாற்றினார். தாவீதின் தாக்குதலுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் பெலிஸ்தியர் அனைத்தையும் விட்டுவிட்டு ஓடினார்கள்.

கேகிலாவின் மக்களைத் தாவீது காப்பாற்றிய செய்தி சவுலின் காதுகளுக்குச் சென்றதும் அவரது ரத்தம் கொதித்தது. கடவுள் அவனது வெற்றிகள் அனைத்திலும் கூடவே இருக்கிறார் என்ற பொறாமையும் சவுலை வாட்டியது. பெரும் படையுடன் சவுல் புறப்பட்டு வருவதைக் கடவுள் வழியே அறிந்த தாவீது, அங்கிருந்து தப்பித்து, தன்னுடன் இருந்த 600 வீரர்களுடன் சீப் வனாந்தரத்துக்குள் சென்று அங்கே பதுங்கியிருந்தார்.

ஆனால், விடாமல் தாவீதைத் தேடிய சவுலுக்கு அந்த இடமும் தெரிந்துபோனதால், தாவீதும் அவரது படையணியும் ஓரேசில் தங்கினார்கள். சவுல் அரசன் அதையும் மோப்பம் பிடித்தார். பின்னர் அங்கிருந்தும் ஓடிய தாவீது, மாகோன் வனாந்தரத்தில் போய்ப் பதுங்கிக்கொண்டார். அங்கும் சவுல் விரைந்து வருவதை அறிந்த தாவீது அருகிலிருந்த என்கேதிக்கு என்ற செங்குத்தான மலைப் பகுதிக்குப் போய், அங்கிருந்த குகைகளில் தங்கினார்.

குகை இருட்டில் திறக்கப்பட்ட கண்கள்

இதை அறிந்துகொண்ட சவுல், 3,000 தலைசிறந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்து, வரையாடுகள் திரிகிற செங்குத்தான அந்தப் பாறைகளின் நடுவே தாவீதையும் அவருடைய ஆட்களையும் தேடிக்கொண்டு போனார். அப்போது சவுலுக்குச் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. அதனால் அங்கிருந்த ஒரு குகைக்குள் போனார். அது இருளாய் இருந்தது. அப்போது, தாவீதும் அவருடைய வீரர்களும் அந்தக் குகையின் உள்ளே இருந்த மறைவுகளில் பதுங்கியிருந்தார்கள்.

தாவீதின் வீரர்கள் அவரிடம், “இன்றைக்கு நம் கடவுளாகிய யகோவா உங்கள் கைகளின் வெகு அருகில் உங்கள் எதிரியைக் கொண்டுவந்து கொடுத்திருக்கிறார். அவரை நீர் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்” என்று தூண்டினார்கள். ஆனால், தாவீது எழுந்து சத்தமில்லாமல் போய், சவுல் போட்டிருந்த கையில்லாத அங்கியின் ஓரத்தை வெட்டி எடுத்தார். அவரது ஆட்களோ தாவீதின் செயலால் கோபமுற்று சவுலைக் கொல்லத் துடித்து மறைவுகளிலிருந்து வெளிப்பட்டார்கள். ஆனால், தாவீது தன்னுடைய வீரர்களைத் தடுத்து, “ சவுல் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட நம் அரசர். அவர் மேல் உங்கள் கைகள் படக் கூடாது” என்று சொல்லித் தன் ஆட்களை எச்சரித்தார். சவுலோ இதைக் கேட்டு குகையிலிருந்து தலைதெறிக்க வெளியே ஓடினார்.

அப்போது, தாவீதும் அந்தக் குகையிலிருந்து வெளியே வந்து, “என் எஜமானே, சவுல் ராஜாவே.. நீங்கள் குகையில் இருந்தபோது கடவுள் உங்களை எப்படி என் கையில் கொடுத்தார் என்பதை இன்றைக்கு நீங்களே பார்த்தீர்கள். ஆனால், நான் உங்களைக் கொல்லவில்லை. ஏனெனில், நீங்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். உங்களுடைய கையில்லாத அங்கியின் ஓரத்தை வெட்டி எடுத்துக்கொண்டேன். நான் இதை மட்டும்தான் வெட்டி எடுத்தேன், உங்களைக் கொல்லவில்லை. இதிலிருந்தே நீங்கள் தெரிந்துகொள்ளலாம். நான் உங்களுக்கு எதிராக எந்தப் பாவமும் செய்யவில்லை. ஆனால், நீங்கள் என் உயிரை வேட்டையாடத் துடிக்கிறீர்கள்.

இஸ்ரவேலின் ராஜா யாரைத் தேடி அலைகிறார்? யாரைத் துரத்திக்கொண்டு வருகிறார்? இந்தச் செத்த நாயையா? இந்தச் சாதாரண பூச்சியையா? உங்களுக்கும் எனக்கும் நடுவில் நின்று கடவுளே தீர்ப்பு கொடுக்கட்டும். நீங்கள் எனக்குத் தீர்ப்புக் கொடுக்காதீர்கள்” என்றார். கடவுள் முன்பாக தாவீதின் பணிவைக் கண்டு சவுலின் ஆணவம் உடைந்து நொறுங்கியது.

(பைபிள் கதைகள் தொடரும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

15 mins ago

க்ரைம்

5 mins ago

இந்தியா

19 mins ago

சுற்றுலா

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்