ஆழித்தேர்; ஆரூர்த் தேர்; நாளை தேரோட்டம் - திருவாரூர் தேர் விவரங்கள்

By வி. ராம்ஜி

திருவாரூர்த் தேரழகு என்பார்கள். அப்பேர்ப்பட்ட தேருக்கு ஆழித்தேர் என்றொரு பெயரும் உண்டு. வேதாரண்யம் விளக்கழகு என்றால், திருவாரூர் தேரழகு என்றொரு சொலவடையே உண்டு. நாளைய தினம் (1.4.19) திருவாரூர் கோயிலில் தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள்.

திருவாரூரில் தியாகராஜர் கோயில் பிரசித்தம். எதிரில் உள்ள கமலாலயம் திருக்குளம் கொள்ளை அழகு. அதேபோல், இன்னொரு பெருமையும் உண்டு. கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள்.*

திருவாரூர்த் தேருக்கு பல சிறப்புகள் உண்டு. ஆசியாவிலேயே 2வது மிகப்பெரிய உயரம் கொண்ட தேர் எனும் பெருமை, திருவாரூர்த் தேருக்கு உண்டு.

திருவாரூர் தியாகராஜர் கோயிலில், வருடந்தோறும் தேரோட்டம் சீரும் சிறப்புமாக நடைபெறும். மதுரை சித்திரைத் திருவிழா எப்படிப் பிரசித்தமோ, அதேபோல் திருவாரூர்த் தேர்த்திருவிழாவும் வெகு பிரபலம். எங்கே இருந்தாலும் சித்திரைத் திருவிழாவுக்கு மக்கள் எப்படி மதுரையில்  குழுமிவிடுவார்களோ, அதேபோல் திருவாரூர்க்காரர்களும் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்தாலும் எந்த ஊரில் வாழ்ந்துகொண்டிருந்தாலும் மறக்காமல் தேரோட்ட வைபவத்தின் போது இங்கே வந்துவிடுவார்கள்.

ஆழித்தேர் எனப்படும் திருவாரூர் தேர், சுமார் 96 அடி உயரம் கொண்டது. 360 டன் எடை கொண்டது. நான்கு நிலைகள் கொண்டு 6 மீட்டர், 1.2 மீட்டர், 1.6 மீட்டர், 1.6 மீட்டர் என பிரமாண்டமாக இருக்கும் தேர், ஆடி அசைந்து வரும் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

அந்தக் காலத்தில் அதாவது அரசர்கள் ஆண்ட காலத்திலும் அடுத்தடுத்த காலகட்டங்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் சேர்ந்து யானைகளும் தேர் இழுத்து வருமாம். தேரோட்டத்தில், நான்குமாடவீதிகளிலும் சுற்றி வந்து, மீண்டும் தேர்முட்டிக்கு வருவதற்கு, தேர் நிலைக்கு வருவதற்கு, எட்டுப்பத்து நாட்களுக்கு மேலாகுமாம். பிறகு அது தொழில்நுட்பக் காரணங்களால், படிப்படியாகக் குறைக்கப்பட்டன.  அதேபோல், அப்போதெல்லாம் அத்தனை டன் கொண்ட தேரை, திருப்புவது என்பதும் சாமானியம் அல்ல என்கிற நிலை இருந்தது. ஆனால் இப்போது ஹைட்ராலிக் பிரேக் முதலான உதவியுடன் தேர் திருப்பப்படுகிறது.  தேரின் சக்கரம் 2.59 மீட்டர் விட்டம் கொண்டவை என்றால் அதன் பிரமாண்டத்தை உணர்ந்துகொள்ளலாம்.

பண்டைய காலங்களில்  இந்த பிரம்மாண்டமான தேரை இழுப்பதற்கு 12,000 பேர் தேவைப்பட்டனர் என கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது என்கிறார்கள். ஆள் பற்றாக்குறையால், மக்கள் வடம் பிடித்து இழுக்கும்போது, பின்புறத்தில் யானைகளை வைத்து முட்டித் தள்ளி தேரை நகர்த்தியுள்ளனர். இப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க, யானைக்குப் பதிலாக 4 புல்டோசர்கள் கொண்டு தேர் இழுக்கப்படுகின்றன.

ஆரூர் எனப்படும் திருவாரூரில், தியாகராஜர் கோயிலின் நான்கு மாட வீதிகளிலும், தேரோட்டம் வரும்போது, ‘ஆரூரா... தியாகேசா...’ எனும் கோஷங்களுடன் பக்தர்கள் மெய்சிலிர்த்து தரிசிப்பார்கள். அப்படி தேர் வரும் இடங்களிலெல்லாம் ஆங்காங்கே பக்தர்களுக்கு நீர் மோர், பானகம், அன்னதானம், விசிறி முதலானவை வழங்கப்படும்.

ஆழித் தேரானது, நான்கு நிலைகளையும், பூதப்பார், சிறுஉறுதலம், பெரியஉறுதலம், நடகாசனம், விமாசனம், தேவாசனம், சிம்மாசனம் பீடம் என 7 அடுக்குகளைக் கொண்டுள்ளது.

இந்த தேரின் நான்காவது நிலையில்தான்  உத்ஸவர் தியாகராஜ சுவாமி வீற்றிருப்பார். இந்த பீடம் மட்டுமே 31 அடி உயரமும், 31 அடி அகலமும் கொண்டது என்றால் அந்த பீடத்தின் பிரமாண்டமே சிலிர்க்கவைக்கிறதுதானே!

ஆழித் தேரை அலங்கரிக்கும் பணியானது, தேரோட்டத்துக்கு ஐந்தாறு நாட்கள் முன்னதாகவே நடைபெற்றுவிடுமாம். ஏராளமான மூங்கில் கழிகள் பயன்படுத்தப்படும். மேலும் தேருக்கான தேர்ச்சீலைகளே சுமார் 3 ஆயிரம் மீட்டர் அளவுக்கு வாங்கப்பட்டு அலங்கரிக்கப்படும் என்கிறார்கள் ஆலய நிர்வாகத்தினர்.

 தேரில், பிரம்மா தேரோட்டி பொம்மையும், நான்கு வேதங்களை முன்னிறுத்தும் பெரிய குதிரை பொம்மைகளும் என ஏராளமான பொம்மைகள் பொருத்தப்பட்டிருக்கும்.

தேரை அலங்கரிக்கும்போது, 500 கிலோ எடையுடைய துணிகள், 50 டன் எடை கொண்ட கயிறுகள், 5 டன் பனைமரக் கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன.

திருவாரூர் தேரின் முன்புறத்தில் 4 பெரிய வடம் பிடிக்கும்  கயிறுகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. ஒரு வடம் (கயிறு) 21 அங்குலம் சுற்றளவும் 425 அடி நீளம் கொண்டதாகவும் இருக்கின்றன.

ஆழித்தேர் ஓடுவதை காண்பதை காட்டிலும், தியாகராஜ கோயிலின் நான்கு வீதிகளிலும் திரும்புவதை காண்பதற்கே, அதிக கூட்டம் கூடும். ஏனெனில், அவ்வளவு பிரம்மாண்டமான அந்தத் தேரின் சக்கரங்களை இரும்பு பிளேட்டுகளின் மீது மசையை கொட்டி, இழுத்து திருப்புவதைப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கும்.

நாளைய தினம் 1.4.19 அன்று திருவாரூரில் ‘ஆரூரா... தியாகேசா...’ கோஷங்களுக்கு மத்தியில், லட்சக்கணக்கான பக்தர்களுக்கு நடுவே, ஆழித்தேரோட்டம் நடைபெறுகிறது.

‘ஆரூரா... தியாகேசா..!’

 

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

3 mins ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

10 hours ago

மேலும்