உயிர் வளர்க்கும் திருமந்திரம் 63: புசிக்க வாருங்கள் சகத்தீரே

By கரு.ஆறுமுகத்தமிழன்

கணிமையில் (computing), கட்டுறுத்தப்பட்ட அல்லது தனிஉரிம மென்பொருள் (closed source / proprietary software), கட்டற்ற அல்லது திறந்த மூல மென்பொருள் (free / open source software) என்று இரு வகைகள் உள்ளன. கட்டுறுத்தப்பட்ட அல்லது தனிஉரிம மென்பொருள் என்பது, தன்னை உருவாக்கப் பயன்படுத்திய நிரல்களைப் பொன்னேபோல் பொத்தி வைத்துக்கொள்ளும்.

தன்னை ஒரு கணினியில் நிறுவும்போதே தான் விதிக்கும் எல்லாக் கட்டுப்பாடுகளுக்கும் உட்படுவதாக வாக்குறுதி தரச் சொல்லும். பயன்படுத்துகிறவர் எவரும் தன்னைப் படியெடுக்கவோ, மாற்றவோ, பிறருடன் பங்கிட்டுக் கொள்ளவோ விடாது. மீறிச் செய்தால் சிலம்பும்; ஒத்துழைக்க மறுக்கும்; விளைவுகளைச் சந்திக்கச் சொல்லி அறைகூவும்.

கட்டற்ற அல்லது திறந்த மூல மென்பொருள் என்பது அதன் நேர் எதிர். அது, தன்னை உருவாக்கப் பயன்பட்ட நிரல்களைப் பொத்தி வைத்துக்கொள்ளாது. மக்களால் உருவாக்கப்பட்டது மக்களுக்கே என்று அனைவரும் பார்க்கத் தன்னைத் திறந்து வைக்கும். எந்தக் கட்டுப்பாடும் இன்றி யாரும் எதையும் பயன் கொள்ளலாம்; வேண்டுகிற அளவு படியெடுத்துக் கொள்ளலாம்; வேண்டியவற்றை ஒட்டலாம்; வேண்டாதவற்றை வெட்டலாம்; தேவைக்குப் பொருந்துமாறு மாற்றலாம்; யாருடனும் பங்கிட்டுக் கொள்ளலாம். மூடி மறைக்காமல் திறந்துவைப்பதை ஒரு சமூக இயக்கமாகவே கருதிச் செய்யும்.

தனிஉரிம மென்பொருள்கள் ‘இறுதிப் பயன்பாட்டாளர் உரிமம்’ (End User License) கொடுத்தால், கட்டற்ற மூல மென்பொருள்கள் ‘பொது மக்கள் உரிமம்’ (General Public License) வழங்குகின்றன; தனிஉரிம மென்பொருள்கள் ‘பதிப்புரிமை’ (copyright) கொண்டவை என்றால், கட்டற்ற மூல மென்பொருள்கள் ‘உதிர்ப்புரிமை’ (copyleft) கொண்டவை.

பதிப்புரிமை உதிர்ப்புரிமை

வேத மரபு என்பது கட்டுறுத்தப்பட்ட தனிஉரிம மென்பொருள்போல என்றால், தந்திர மரபு என்பது கட்டற்ற திறந்த மூல மென்பொருள்போல. ஆகவேதான் வேத மரபு ஒற்றைத் தரப்பினருடன் நின்று போக, தந்திர மரபோ சாக்தம், சைவம், வைணவம், இவற்றுக்கு எதிர்நிற்கும் சமணம், பௌத்தம் என்று அனைத்துத் தரப்பாலும் தழுவிக் கொள்ளப்பட்டது. பதிப்புரிமை மரபாகிய வேத மரபுமேகூட உதிர்ப்புரிமை மரபாகிய தந்திர மரபிடமிருந்து சிலவற்றைப் பெற்றது; பெற்றவற்றைப் பற்றுவழிப் பேரேட்டில் வரவு வைக்காமல் தனதாக்கிக் கொண்டது.

தந்திரத்தைத் தழுவிக்கொண்ட எல்லா மரபுகளும் தந்திரத்தின் நிரல்களை, அதாவது செயல்முறை களை, தத்தம் தேவைகளுக்கு ஏற்ப வெட்டியும் ஒட்டியும் மாற்றியமைத்து, மாற்று முறைகளாக்கி, உலகப் பயன்பாட்டுக்கு முன்வைத்தன. ஒற்றைப்படுத்தலை மறுதலித்துப் பன்மைப்படுத்தின. தந்திர ஓகம் எந்த வரம்பும் இல்லாமல், திறந்த நிலையில் தன்னைக் காமத்துக்கும் வழங்கியது; கடவுளுக்கும் வழங்கியது.

சடங்கு மீறலுக்கும் வகை செய்தது; மாற்றுச் சடங்கு முறைக்கும் வகை செய்தது. சித்தாந்தம் செய்யவும் இடம் தந்தது; சித்தாந்த மறுதலைக்கும் இடம் தந்தது. தந்திரத்தைக் கருத்துருவாக்கி எழுந்த ஆகம மரபு, வழிபாட்டுச் செயல்முறைகளை எளிமைப்படுத்தியும் பக்தியை முன்னிலைப்படுத்தியும் கோவில் கட்டமைப்பை முறைப்படுத்திப் பெரிதாக்கியது. இவ்வாறாக, நீண்டு நீண்டு யாருக்கும் இடம் தருகிற சங்கப் பலகைபோல ஆயிற்று தந்திர மரபு.

திருமந்திரத்தின் மரபு

திருமந்திரம் தந்திர மரபு தழுவியது. திருமந்திரத்தின் ஒன்பது பகுதிகளுக்கும் தந்திரங்கள் என்றே பெயர்.

வந்த மடம்ஏழும் மன்னும்சன் மார்க்கத்தின்

முந்தி உதிக்கின்ற மூலன் மடவரை

தந்திரம் ஒன்பது, சார்வுமூ வாயிரம்,

சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே

(திருமந்திரம் 101)

மூலனின் உண்மை மரபில் கிளைத்து வந்த கிளைமரபுகள் ஏழு. ஏழுக்கும் மூலநூல் திருமந்திரம். அழகிய ஆகம நூலாகிய அது ஒன்பது தந்திரங்களாகப் பிரிக்கப்பட்டு மூவாயிரம் பாடல்களால் செய்யப்பட்டிருக்கிறது.

திருமந்திரம் ஆகமம் என்பதற்கும் தந்திர மரபு தழுவியது என்பதற்கும் அகச் சான்று இந்தப் பாட்டு. இந்தப் பாட்டு திருமூலரால் எழுதப்பட்டதன்று; அவருடைய வழிவந்த மாணவர்களில் யாரோ ஒருவரால் பாயிரமாக எழுதப்பட்டது என்றாலும், நூலின் சாரம் உணர்ந்து, பொருத்தமாகவே எழுதப்பட்டிருக்கிறது. யாருக்கும் திறந்து கிடக்கிற தந்திர மரபிலிருந்து ஊற்றம் பெற்ற திருமூலர், தந்திர மரபின் அடியொற்றித் தமது திருமந்திரத்தையும் திறந்த மரபாக, யாரும் பயிலும் மரபாக, வேண்டியது கொண்டு வேண்டாதது தள்ளும் மரபாகவே செய்து வைத்திருக்கிறார்.

தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை;

முத்திக்கு இருந்த முனிவரும் தேவரும்

ஒத்துஉடன் வேறாய் இருந்து துதிசெயும்

பத்திமை யால்இப் பயன்அறி யாரே.

(திருமந்திரம் 98)

விடுதலை பெறுவதற்கான விவரத்தைச் சொல்லியாகி விட்டது; சொல்லும் விவரத்தை வீட்டுக்குள் வரவேற்று அருகில் உட்கார வைத்துச் சொன்னால் பலருக்கும் எட்டாமல் போகும் என்பதால், வீட்டுக்கு வெளியில், தாழ்வாரத்தில் வைத்து, எல்லோர்க்கும் எட்டும்படி, வெளிப்படையாகவே சொல்லியாகி விட்டது. ஆனாலும் தாழ்வாரத்தில் வைத்துக் கூவிக் கூவி வழங்கச் சுக்கா மிளகா விடுதலை என்று ஐயப்பட்டு, முனிவர்களும் தேவர்களும் விடுதலை விவரத்தைப் பயன்கொள்ள மாட்டாமல் விலகி நிற்கிறார்கள்.

ராமானுஜர் விடுதலைத் திறப்பான மந்திர உபதேசத்தினை வேண்டித் திருக்கோட்டியூர் நம்பியை அணுகுகிறார். அதைப் பெறுவதற்கு இராமானுஜர் தகுதிதானா என்று சரி பார்ப்பதற்காகத் திருக்கோட்டியூர் நம்பி இராமானுஜரைப் பதினேழு முறை திருப்பி அனுப்புகிறார். பதினெட்டாவது முறையும் திரும்பி வந்த இராமானுசருக்குத் திருக்கோட்டியூர் நம்பி மந்திர உபதேசம் செய்து வைத்தார்.

திருக்கோட்டியூர் நம்பியால் வீட்டுக்குள் வைத்துத் தனக்கு மட்டும் வழங்கப்பட்ட விடுதலைத் திறப்பை இராமானுஜர் திருக்கோட்டியூர்க் கோயில் கோபுரத்தின்மேல் ஏறி நின்று எல்லாருக்கும் வெளிப்படுமாறு கூவிச் சொன்னார். தத்துவஞானம் உரைத்தது தாழ்வரை!

காலம்உண் டாகவே காதல்செய்து

உய்ம்மின்; கருதஅரிய

ஞாலம்உண் டானொடு நான்முகன்

வானவர் நண்ணஅரிய

ஆலம்உண் டான்எங்கள் பாண்டிப்

பிரான்தன் அடியவர்க்கு

மூலபண் டாரம் வழங்குகின்

றான்வந்து முந்துமினே

(திருவாசகம், திருப்பாண்டிப் பதிகம், 36)

வானவரும், மண்ணை உண்ட திருமாலும், நான்முகனும்கூடக் காண முடியாத கடவுள்; பாண்டிப் பிரான்; பிறர் வாழத் தான் நஞ்சு உண்டவன்; தன்னுடைய மூலக் கருவூலத்தை எல்லோர்க்கும் கொடுக்கிறான்; வந்து முந்துங்கள் என்று அழைக்கிறார் மாணிக்கவாசகர். தத்துவஞானம் உரைத்தது தாழ்வரை!

காகம்உறவு கலந்துஉண்ணக்

கண்டீர்; அகண்டா காரசிவ

போகம்என்னும் பேரின்பவெள்ளம்

பொங்கித் ததும்பிப் பூரணமாய்

ஏகஉருவாய்க் கிடக்குதுஐயோ!

இன்புஉற்றிட நாம்இனி எடுத்த

தேகம் விழும்முன் புசிப்பதற்குச்

சேர வாரும் சகத்தீரே.

(தாயுமானவர் பாடல்கள், 30:3)

உணவைப் பெற்றால் காகம் தன் உறவைக் கூவி அழைத்துக் கூடி உண்கிறது. சிவபோகம் என்னும் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிக் கிடக்கிறது; முங்கிக் குளிக்க வாருங்கள். உருவாய்த் திரண்டு நிற்கிற அதனைத் தேகம் உள்ளபோதே தழுவிக்கொள்ள வாருங்கள் உலகத்தீரே என்று அழைக்கிறார் தாயுமானவர். தத்துவஞானம் உரைத்தது தாழ்வரை!

கட்டற்ற திறந்த மூல மென்பொருள், பயனாளர் எல்லோர்க்கும் திறந்து கிடப்பதைப்போலத் தத்துவ ஞானமும் எல்லோர்க்கும் திறந்தே கிடக்கிறது. தாழ்வரையில் கிடைக்கும் தந்திர ஞானத்தை விட்டுக் காசு தந்தார்க்குக் கதவு திறக்கும் குளிர்அறையில் தேட என்ன இருக்கிறது? தந்திர ஞானத்தின் தாழ்வரைக்கு வாருங்கள் சகத்தீரே!

(மேலும் ஞானம் திறப்போம்) கட்டுரையாசிரியர்,
தொடர்புக்கு: arumugatamilan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்