மாமல்லபுரத்தில் மஹோதயம்

By செய்திப்பிரிவு

அமாவாசை, மாதப்பிறப்பு, சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்படும் தினங்கள் புண்ணிய காலங்களாக சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் ஒரு சில நட்சத்திரங்கள், திதிகள், ராசிகள் குறிப்பிட்ட நாட்களில்அமைந்துவிட்டால் அந்த நாள்கள் மிகச் சிறந்த புண்ணிய நாள்களாக அமைந்து விடுகின்றன. இந்த விளம்பி வருடத்தில் பல மடங்கு புண்ணியம் தரும் திருநாள் இந்தத் தை அமாவாசை தினத்தில் நடைபெறவுள்ளது. அந்தப் புண்ணியத் திருநாளே மஹோதயம்.

இந்தப் புண்ணியத் திருநாள் நூறு சூரிய கிரகணங்களுக்கு இணையானதாகக் கருதப்படுகிறது. தை மாதத்தில் அமாவாசையன்று ஞாயிற்றுக்கிழமை திருவோண நட்சத்திரத்தில் அமைந்தால் இது அர்த்தோதயம் எனப்படும். அதைப் போலவே தை மாதம் அமாவாசையன்று திருவோணம் நட்சத்திரம் கூடிய திங்கட்கிழமையை மஹோதய புண்ணிய நாளாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன.

அத்தகைய நாட்களில், கங்கை, யமுனை, கோதாவரி, காவிரி போன்ற புண்ணிய நதிகளிலும் புண்ணிய தீர்த்தங்களிலும் சமுத்திரங்களிலும் புனித நீராடி, நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகச் சிறந்த நற்பலன்களைத் தரும்.

மேலும், தகப்பனார் இல்லாதவர்கள், அமாவாசை, மகாளய பட்சங்கள் போன்ற நாள்களில் தர்ப்பணம் செய்ய இயலாமல் போனவர்களும் இந்த மஹோதய புண்ணிய காலத்தில் தர்ப்பணம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும்.

பல வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் இத்தகைய அரிய நிகழ்வான மஹோதய புண்ணிய காலம், இந்த விளம்பி வருடத்தில் தை அமாவாசையன்று, திருவோண நட்சத்திரத்தில் 4.2.2019 திங்கட்கிழமையன்று நடைபெறவுள்ளது.

எங்கே விசேஷம்?

திருப்புல்லாணி சேதுக்கரை இந்த நாளில் தரிசனம் செய்வதற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது. இலங்கை செல்ல எத்தனிக்கும் முன் ராமன் இந்தச் சேதுவிலே நீராடி, தர்ப்ப சயன ராமனாய் அரிதுயில் கொண்ட திவ்ய தேசம் இதுவாகும்.

திருக்கடல்மல்லை என்னும் மாமல்லபுரம் அர்த்த சேது என்றழைக்கப்படுகிறது. புண்டரீக மாமுனிவன் என்னும் மாமுனிவனுக்காகப் பாற்கடல் வாசன் தன் அரவணையைத் துறந்து இந்த மகாபலிபுரக் கடற்கரையில் ஸ்தலசயனமாய்க் கிடந்து மாமுனிவனின் பக்திக்கு இணங்கிக் காட்சி தந்தார். எம்பெருமானே இந்தக் கடற்கரை நீரைத் தன் திருக்கைகளால் வாரி இரைத்தமையால் இந்தக் கடற்கரை அர்த்த சேது என்றே போற்றப்படுகிறது.

ஆழ்வார்களில் நடுவரான பூதத்தாழ்வார் அவதரித்த திருத்தலம் இது. பூதத்தாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்த திவ்யதேசமாகவும் கருதப்படுகிறது.

ஆழ்வார்கள், அடியவர்கள் பெருமை போற்றிய இந்த திவ்ய தேசத்தில் மஹோதய புண்ணிய கால தீர்த்தவாரி உற்சவம் வரும் தை மாதம் 21-ம் தேதி, அமாவாசை திதி, திருவோண நட்சத்திரத்தில் திங்கட்கிழமையன்று வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.

அந்த நன்னாளில், ஸ்தலசயனப் பெருமாளும் திருவலவெந்தை ஆதி வராகப் பெருமாளான ஞானப்பிரானும் கருட வாகனத்தில் எழுந்தருள உடன் பூதத்தாழ்வாரும் மகாபலிபுரக் கடற்கரைக்கு எழுந்தருளி காலை எட்டு மணியளவில் தீர்த்தவாரி மஹோற்சவம் நடைபெறவுள்ளது. இந்த நன்னாளில் மடாதிபதிகள், ஆன்மிக மகான்கள் பலர் எழுந்தருளி தீர்த்தவாரியில் கலந்து கொள்கிறார்கள்.

மிகச் சிறந்த, அரிதான இந்தப் புண்ணிய நன்னாளில் பக்தர்கள் யாவரும் கடற்கரையில் புனித நீராடி தம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து ஸ்தலசயனப் பெருமாளையும் ஞானப்பிரானையும் பூதத்தாழ்வாரையும் சேவித்து இறையருள் பெற வேண்டுகிறோம்.

புனித நீராடும் முறை

பக்தர்கள் யாவரும், கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள புண்டரீக புஷ்கரணியில் முதலில் புனித நீராட வேண்டும். பின்பு கருட வாகனங்களில் புறப்பாடு காணும் எம்பெருமான்களுடன், உடன் வந்து கடற்கரையை அடைய வேண்டும். அங்கே சக்கரத்தாழ்வாருக்கு திருமஞ்சனம் நடைபெறுவதை சேவித்த பின்பு, சூரியோதய காலத்தில் தீர்த்தவாரி நடைபெற்ற பிறகே, கடலில் நீராட வேண்டும்.

கடலில் நீராடிய பின்பு, மீண்டும் நன்னீரில் நீராடுதல் கூடாது. மஹோதய புண்ணிய காலம் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் புண்ணிய காலம் என்பதால், மஹோதய புண்ணிய கால தர்ப்பணம் மட்டுமே செய்ய வேண்டும். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் பாக்கியம் பெற்றவர்கள், கடலில் நீராடி கடற்கரை மணலில் தர்ப்பணம் செய்யலாம். பின்பு, ஸ்தலசயனப்பெருமாளையும், ஆதிவராகப் பெருமாளையும் தரிசித்து திருவருள் பெற வேண்டும். ஆதி வராகப் பெருமாள் சன்னிதியில் பக்தர்களுக்கு உணவு வசதியும் செய்யப்பட்டுள்ளது.

- மாமல்லை முரளி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

23 mins ago

ஜோதிடம்

28 mins ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஓடிடி களம்

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்