மார்கழி மாதச் சிறப்புக் கட்டுரை: ஓங்கி உலகளந்த உத்தமன்பேர் பாடி

By செய்திப்பிரிவு

சூடிக்கொடுத்த சுடர்கொடி, மல்லிநாடாண்ட மடமயில், அல்லிநாள் தாமரை மேல் ஆரணங்கின் இன்துணைவி, வேயர் பயந்த விளக்கு, பாடவல்ல நாச்சியார், கோதை, ஸ்ரீவிஷ்ணு சித்த குலநந்தன கல்பவல்லி, பட்டர்பிரான் கோதை என்றெல்லாம் பெருமதிப்புடனும் மகிழ்ச்சியுடனும் அழைக்கப்படும் ஆண்டாள் அருளிச் செய்த பிரபந்தம் திருப்பாவை.

முப்பது பாசுரங்களுடைய திருப்பாவையின் ஏற்றம் சொல்லில் அடங்காது. பகவத் ராமாநுஜர் அநுஸந்தித்த அவரால் உபநிஷத் என்றே கொண்டாடப்பட்ட திருப்பாவை, காலத்தை வென்ற பக்தி இலக்கியம், சங்கத்தமிழ்மாலை; (திரு)மாலைக் கட்டிய மாலை!

வேதங்கள் உபநிடதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் என இவை எல்லாவற்றின் சாரமான பிழிவாக விளங்குவது திருப்பாவை. ஸ்ரீமந் நாராயணனே பரதத்துவம் என்று, தகப்பனாரானா பெரியாழ்வாரைப் போல, அறுதியிட்டுக் கூறுவதோடு, தனக்குப் பின்னால் அவதரிக்கப்போகும் ராமாநுஜரின் நோக்கிலேயே விசிஷ்தவைதக் கோட்பாடுகளையும் உள்ளடக்கித் தமிழ் தெரிந்த அனைவரும், அன்றாடம் ஓதி, பக்தி பெருக்கிட மகிழ்ந்து பகவத் கிருபைக்குப் பாத்திரமாகும்படி, தனது பெருங்கருணையால் ஆண்டாள் நமக்குச் செய்த மஹோபகாரமாக, வழங்கியுள்ள, தெய்வீகப் பாமாலை திருப்பாவை.

“அஞ்சுகுடிக்கொரு சந்ததியாய், ஆழ்வார்கள் தஞ்செயலை விஞ்சி நிற்கும் தன்மையனாய், பிஞ்சாய்ப் பழுத்த ஆண்டாள்” என்று மணவாள மாமுநிகள் வியந்து பேசுகிறார். ஆக, தனக்கு முன் அவதரித்த ஆழ்வார்கள் ஐவரின் திருமகள் போல் என்றும், ஆழ்வார்கள் அனைவருக்குமே இவளே சந்ததி என்றும்கூட, ஆண்டாளின் மேன்மை கொண்டாடப்படுகிறது.

வேதமனைத்துக்கும் வித்தாகும் கோதைத் தமிழ்

வேத வேதாந்தங்களின் பிழிவு இதில் உள்ளது. மிகப் பெரிய ஆலமரத்தின் வித்து மிகச் சிறியதாக உள்ளது போன்று, திருப்பாவை வேதமனைத்துக்கும் வித்து. ஆண்டாளே, சர்வகாரணபூதனான பகவானை வெள்ளத்தரவில் துயலமர்ந்த வித்து என்கிறாள். அவனை அறிவதற்கான ‘வித்து’ திருப்பாவை.

பரந்தாமன் ஸ்ரீகிருஷ்ணன், அர்ச்சுனனுக்கு உரைத்தது பகவத்- கீதை; ஸாக்ஷாத் பூமிப்பிராட்டி, ஆண்டாளாக அவதரித்து, நமக்கு உரைத்தது ‘பகவதி கீதை’யாகிய திருப்பாவை. பகவத் கீதையால் அன்று விளைந்த பயன் கௌரவர்களும் மேலும் எண்ணற்றவர்களும் அழிந்தனர். பாண்டவர் ஐவரே காப்பாற்றப்பட்டனர். பகவதி கீதையாலோ நம்மைச் சீர்குலைக்கும் ஐம்புலன்களும் அழியும். ஆனால், அதனால் ஆயிரக்கணக் கானோர் உயிந்து போவர் என்கிறார் 45-ம் பட்டம் வில்லிவலம் ஸ்ரீமதழகிய சிங்கர்.

ஆண்டாள் மனநிலை

வண்பதுவை நகரே திருவாய்ப்பாடி என்றும், வடபத்ரசாயி, பரமஸ்வாமி திருக்கோயிலே நந்தகோபர் திருமாளிகை என்றும் பாவித்து பல ஆயர்குலச் சிறுமிகளோடு மார்கழி விடியலில் பாவை நோன்பு மேற்கொண்டு பகவான் கிருஷ்ணனின் திருமாளிகை யினுட் புகுந்து, நந்தகோபர், யசோதை, எம்பெருமாட்டி, நப்பின்னைப் பிராட்டியார், பலதேவன் முதலானோரை எழுப்பி, கிருஷ்ணனையும் துயிலெழச் செய்து அவனிடம் பறை கேட்டு விண்ணப்பிப்பதாகவும் பகவானும் உகந்து அதை அளிப்பதாகவும் திருப்பாவை பாசுரங்கள் அமைந்துள்ளன.

பாவை நோன்பு

பாவை நோன்பு என்பது பாவையைக் குறித்துச் செய்யப்படும் நோன்பு எனப் பொருள் தரும். பாவையரால் கொள்ளப்பெறும் நோன்பு என்றும் கொள்ளலாம்.

“பாவை” என்பது பெண் தெய்வத்தைக் குறிக்கும் சொல் ஆகும். பாடல் தோறும் “எம்பாவாய்” என்று முடிவது இத்தகைய வழிபாட்டைக் காட்டுகிறது. ஈரநுண்மணலால் சமைக்கப்பட்ட தேவியின் உருவத்தை வழிபடவே ஆயர் சிறுமியர் சென்றனர். மேலும், “நம்பாவைக்குச் செய்யும் கிரிசைகள்..” இத்தகைய வழிபாடொன்றைச் சுட்டுவதாகவே உள்ளன. இவ்வாறு பாவை அமைத்துள்ள இடமே பாவைக்களம் எனப்படுகிறது. கண்ணனை அடைய வேண்டி இச்சிறுமியர் தேவிவழிபாடு செய்தனர்.

விடியல் வருணனை

ஹேமந்தருது; மார்கழி; விடியற்காலம்! மேற்கு வானில் பௌர்ணமி நிலவு; சிறிது சிறிதாகக் கீழிறங்கிக் கொண்டிருக்கிறது அதன் கீழே வியாழன் அத்தமித்துக் கொண்டிருக்கிறது; கிழக்கே வெள்ளி முளைத்து மேலெழுந்து வந்து கொண்டிருக்கிறது. நல்ல குளிர்; பனிப்பொழிவு.

margazhi-bookjpgவேயர் குலக்கொடியும் ஆயர் குலவிளக்கும் முனைவர் சீ. சுந்தரம் வித்யுத் பதிப்பகம், நெமிலிச்சேரி, குரோம்பேட்டை, சென்னை – 44 விலை: ரூ. 250, தொடர்புக்கு: 044- 22654210

வயதேறிய ஆயர் குலத்து முதியவர்கள், குளிருக்கஞ்சி வெளியே வராமல் வீட்டினுள் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். சில்லென்று இலேசாகக் காற்று வீசிக்கொண்டிருக்கிறது. பனிமூட்டம் வேறு. பிரம்ம முகூர்த்தம்! விடியற்காலை, சுமார் நான்கு மணி! சிற்றஞ்சிறுகாலை!

ஆங்காங்கே, பலவிதமான பறவைகள் எழுந்து ஒலிக்கின்றன. இரவில் இணைபிரியாமல் உறங்கிய பறவைகளும் ஒலி எழுப்பி பதில் ஒலி எழுப்பி உரையாடுவதுபோல், சிலம்பி, இரைதேடப் புறப்படும் காலம்! திருக்கோயில்களில் எல்லாம் விடியலில் எழும் சங்கநாதம்! யோகியர், முனிவர் எல்லாம் மெல்ல எழுந்து ஹரி நாமஸ்மரணம் செய்கிறார்கள்! மணம் வீசும் அளபாரங்கள், இங்குமங்கும் அசைய, ஆபரணங்கள் ஒலிக்க, ஆய்ச்சியர்கள் தயிர் கடைவதின் ஒலி!

சற்றே கிழக்கு வெளுக்கிறது; எருமைகள் பனிப்புல் மேய்வதற்காக அவிழ்த்து விடப்பட்டு, இங்கும் அங்கும் பரவி நிற்பதைக் காணமுடிகிறது.

இளங்கன்றுகளை உடைய எருமைகள், காலையில் கறக்கப்படாததாலும் தம் கன்றுகளை விட்டுப் பிரிந்து நிற்பதாலும், அக்கன்றுகளை நினைத்து, தாயன்பினாலும், முலைக்கடுப்பினாலும், வீடுகட்கு முன் நின்று பாலைச் சொரிகின்றன. இருந்தவிடத்திலேயே நின்று, அசைவதால், மண்ணில் ஒழுகும் பால், மிதித்துத் துவைக்கப்பட்டு “பால் சேறு” ஆகிக் கொண்டிருக்கிறது.

ஆண்டாளும் அவள் வயதொத்த இடைச்சிறுமிகளும் பாவை நோன்பை, முறையாக, முன்னோர்கள் செய்தபடி, செவதற்காகக் கூட்டமாய் நடந்து சென்று, உறங்கிக்கொண்டிருக்கும் தம் தோழிகளை ஒவ்வொருவராக எழுப்புகிறார்கள். தலைகளில் பனிவீழ, அம்மகளிரின் வாயிற்கடை பற்றி நின்று அழைக்கிறார்கள்.

ஆங்காங்கே, கோழிகள் கூவுகின்றன! மனத்துக்கினிய இறைவனின் ஸ்ரீமந் நாராயணனின், ஸ்ரீ கிருஷ்ணனின் பல்வேறு நாமங்களை ஈடுபாட்டோடும் பாடிப் பரவசமாகியவாறே இச்சிறுமிகள் செல்கிறார்கள். முதல் ஆநளே, உங்கட்கு பறை தருகின்றேன் என்று கிருஷ்ணன் கூறியதை அவனுக்கு நினைவூட்டி அவனருள் பெற அவனை எழுப்ப நந்தகோபர் திருமாளிகைக்குச் செல்கிறார்கள்.

ஆண்டாள் எண்ணெய்க் காப்பு உற்சவம்

ஆண்டாள் நீராடிய ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளத்தின் கரையில் திருமலை நாயக்கர் கட்டிய மண்டபத்தில் எண்ணெய்க் காப்பு உற்சவம் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறும்.

ஆண்டாள் இந்த எட்டு நாட்களிலும் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி தனது தோழிகளை அழைத்துக் கொண்டு எண்ணெய்க்காப்பு மண்டபம் செல்கிறாள். மதியம் மூன்று மணிக்கு எண்ணெய்க் காப்பு சேவையும் ஷோடச உபசாரமும் தொடங்குகிறது. வாசனைத் திரவியங்கள், பால், இளநீர் உட்பட மூலிகைகள் 63 கொண்டு காய்ச்சப்படுகிறது. இத்தைலத்தை ஆண்டாளின் திருமுடியில் இட்டு சிக்கலெடுத்து கொண்டை போட்டு தாம்பூலம் தரிக்கிறாள்.

பின் திருமஞ்சனத் தொட்டிக்கு எழுந்தருளி திருமஞ்சனம் காண்கிறாள். மிகப் பெரிய கொண்டை அலங்காரத்துடன் மாலை 4.30 மணிக்கு ஆண்டாள் பக்தி உலா நடைபெறும். இந்த உற்சவம் தமிழகத்திலேயே ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டுமே நடக்கிறது.

- வெ. புனிதா வெள்ளை

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்

பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்

பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்துநீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது.

இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றன்னோடு

உற்றோமே யாவோம் உனக்கே நாமாட்செய்வோம்

மற்றை நங்காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்!

- முனைவர் சீ. சுந்தரம்
(வேயர் குலக்கொடியும்  ஆயர் குலவிளக்கும் (திருப்பாவை விளக்கவுரை)  புத்தகத்தின் முகவுரையிலிருந்து)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்