விவிலிய மாந்தர்கள்: கடவுளை நம்பிய மாவீரர்!

By ஜோ.ஆரோக்யா

உடல் பலத்தையும் படை பலத்தையும் நம்பி, வெற்றிகளைக் குவித்தவர்களை மாவீரர்கள் என்கிறது வரலாறு. விவிலியத்தில் வரும் யெப்தா கடவுளை நம்பிய மாவீரர். அவருடைய தாய் பாலியல் தொழிலில் தள்ளப்பட்டவர். அவர், கீலேயாத் என்பவருக்கு யெப்தாவைப் பெற்றெடுத்தார்.

கீலேயாத், யெப்தாவை மகனாக அங்கீகரித்தார். யெப்தாவுக்கும் அவரது அம்மாவுக்கும் தனது வீட்டிலேயே அடைக்கலம் கொடுத்தார். யெப்தாவின் தந்தை கீலேயாத்தின் பெயரே அவர் தலைவராக இருந்த நகரத்துக்கும் சூட்டப்பட்டிருந்தது. அது இஸ்ரவேலர்கள் திரளாக வசித்துவந்த ஒரு நகரம்.

கீலேயாத்தின் சட்டப்பூர்வ மனைவிக்கும் பல பிள்ளைகள் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் வளர்ந்து பெரியவர்களானபோது, யெப்தாவை அவர்கள் வெறுத்தார்கள், எனவே யெப்தாவிடம் “நீ வேறொருத்திக்குப் பிறந்தவன், நாங்களே உண்மையான வாரிசுகள். எங்கள் தந்தையின் சொத்தில் உனக்குப் பங்கு கிடையாது. இந்த ஊரைவிட்டு ஓடிப்போய்விடு” என்று கூறி துரத்தினார்கள். அதற்கு கீலேயாத்தின் மூப்பர்களும் துணை நின்றார்கள்.

அதனால், யெப்தா, பிறந்து வளர்ந்த கீலேயாத்தைவிட்டுக் கிளம்பி தோப் என்ற நகரத்தில் குடியேறி வாழ்ந்தார். தன் சகோதரர்களை அவர் எதிர்க்கவில்லை. வேலை இல்லாத பல இளைஞர்கள் யெப்தாவுடன் சேர்ந்துகொண்டார்கள். அந்த இளைஞர்களைக் கொண்டு ஒரு திறமையான படக்குழுவை உருவாக்கி அவர்களுக்குப் யெப்தா பயிற்சியளித்தார்.

தனது வீரம், படைக்குழுவால் மட்டுமல்ல; பெற்றோர் தனக்குக் காட்டிச் சென்ற ஆன்மிக வழியைப் பின்பற்றும் பக்தியாலும் அவர் அறியப்பட்டிருந்தார். பல தாக்குதல்கள், தோப் நகரத்துள் ஊடுருவும் அந்நியர்களை வெற்றிகரமாகத் துரத்தியடித்தல் ஆகியவற்றைத் திறம்படச் செய்துவந்த யெப்தா, தாமொரு மாவீரர் என்பதை நிரூபணம் செய்திருந்தார். யெப்தாவைக் கண்டு, இஸ்ரவேலர்களும் வேற்றின மக்களும் வியந்தனர்.

துரத்தப்பட்டவர் அழைக்கப்பட்டார்

காலம் உருண்டோடியது. இஸ்ரவேலர்களுடன் அம்மோனியர்கள் தொடர்ந்து போர் தொடுத்தார்கள். இதனால் தங்கள் நிலப்பரப்பையும் கால்நடைகள், விளைச்சல்களையும் அம்மோனியர்களிடம் அவர்கள் அடிக்கடி இழந்து வந்தனர். நமக்குத் தலைமை தாங்கவும் அம்மோனியர்களுடன் மோதவும் நம்மிடம் சிறந்த வீரன் இல்லையே என அவர்கள் ஏங்கியபோது,  கீலேயாத்தின் மூப்பர்களுக்கு யெப்தாவின் நினைவு வந்தது.

தோப் நகருக்குக் கிளம்பிச்சென்ற அவர்கள், யெப்தாவின் முன்னால் போய் நின்று “நீங்கள் வந்து எங்களுக்குப் படைத் தளபதியாக இருங்கள், நாம் அம்மோனியர்களோடு போர் செய்யலாம்” என்று அழைத்தார்கள். அப்போது யெப்தா அவர்களிடம், “என்னை முற்றிலும் வெறுத்து, என்னுடைய அப்பாவின் வீட்டிலிருந்து நீங்கள்தானே என்னைத் துரத்தியடித்தீர்கள்? இப்போது உங்களுக்குக் கஷ்டம் என்றதும் ஒதுக்கப்பட்டவளின் மகனைத் தேடி வருகிறீர்கள்.” என்று தனது ஆறாத காயத்தின் வலியிலிருந்து கேட்டார்.

அப்போது மூப்பர்கள் வெட்கித் தலை குனிந்தனர். பின்னர் யெப்தாவிடம், “நீங்கள் சொல்வது உண்மைதான், ஆனால் இப்போது அதற்காக வருந்தி, உங்களை அழைத்துக்கொண்டு போவதற்காக வந்திருக்கிறோம். நீங்கள் எங்களுடன் வந்து அம்மோனியர்களோடு போர் செய்தால், கீலேயாத்தில் வாழும் நம் மக்களுக்கு உங்களைத் தலைவராக்குவோம்” என்று சொன்னார்கள்.

ஆனால், யெப்தா இந்த இடத்தில் தன்னை முதன்மைப் படுத்தவில்லை. தாம் ஒரு வீரனாக இருப்பது கடவுளாகிய பரலோகத் தந்தையால் என்பதை உணர்ந்திருந்ததால், கீலேயாத்தின் மூப்பர்களிடம், “என்னை விரும்பி அழைக்கிறீர்கள்; நான் வருகிறேன். ஆனால் நம் கடவுளாகிய யகோவா, அம்மோனியர்களோடு போர் செய்து அவர்களை வீழ்த்த நமக்குக் கருணை காட்டினால் மட்டுமே நான் உங்களுக்குத் தலைவராக இருக்க ஒப்புக்கொள்வேன்!” என்று சொன்னார்.

அதற்கு மூப்பர்களும் ஒப்புக்கொண்டார்கள். யெப்தா தாம் துரத்தியடிக்கப்பட்ட சொந்த நகரத்துக்குத் தம் குடும்பத்துடன் புறப்பட்டுப் போனார். மக்கள் பெருந்திரளாகக் கூடி அவரையும் அவரது குடும்பத்தையும் வரவேற்றபோது வெல்ல முடியாத மாவீரன் என்று பெயரெடுத்த யெப்தா ஒரு சிறுவனைப் போல் நெகிழ்ந்து கண்ணீர் சிந்தினார். கீலேயாத் மக்களும் மூப்பர்களும் சேர்ந்து யெப்தாவைத் தங்களுடைய தலைவராகவும் படைத் தளபதியாகவும் ஆக்கினார்கள்.

ஆனால், யெப்தா தான் விதித்த நிபந்தனையைப் புனிதப்பெட்டி வைக்கப்பட்டிருந்த கடவுளின் ஆசாரிப்பு கூடாரத்தின் முன்பாகத் திரும்பவும் கூறிவிட்டுப் போருக்குப் புறப்படத் தயாரானார்.

சமாதானமே சிறந்த ஆயுதம்

படைபலம் சிறப்பாக இருந்தாலும் போர்விதிகளைப் பெரிதும் மதித்தார் யெப்தா. சமாதானமே சிறந்த ஆயுதம் என்பதை யெப்தா அறிந்திருந்தார். அம்மோனியர்களின் அரசனிடம் தனது தூதுவர்களை அனுப்பி பலமுறை சமாதானம் பேசினார். ஆனால் ‘இஸ்ரவேலர்கள் எடுத்துக்கொண்டது எங்கள் நிலப்பகுதி’ என அம்மோனியர்கள் வாதிட்டனர். ஆனால், யெப்தா நிதானமாக வரலாறை அவர்களுக்கு நினைவூட்டினார்.

“எகிப்திலிருந்து இஸ்ரவேலர்கள் கடவுளால் வாக்களிக்கப்பட்ட இந்தத் தேசத்துக்கு வந்தபோது, அர்னோன் தொடங்கி யாபோக் வரையும் வனாந்திரம் தொடங்கி யோர்தான் வரையும் இருக்கிற பிரதேசம் முழுவதையும் நேர்மையான முறையில் போர் செய்தே அவர்கள் எடுத்துக்கொண்டார்கள் என்பதையும் கடவுள் கொடுத்த தேசத்தில் 300 ஆண்டுகளாகத் தங்கள் சொந்த உழைப்பை நம்பி வாழ்ந்துவரும் அவர்களைத் தாக்குவதும் கொள்ளையடிப்பதும் முறையல்ல” என்றும் எடுத்துக் கூறினார்.

ஆனால், அம்மோனியர்களின் அரசன் யெப்தாவின் வார்த்தைகளைக் காதில் போட்டுக்கொள்ளாமல் “போர்… போர்…” என்றே கர்ஜித்தான்.

நேர்த்திக் கடனைக் காப்பாற்றினார்

அம்மோனியர்களுடன் மோதுவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலை வந்தபோது யெப்தா தன் கடவுளாகிய பரலோகத் தந்தையிடம் போருக்குச் செல்லும்முன் பிரார்த்தனையும் நேர்த்தியும் செய்தார்.

“தந்தையே அம்மோனியர்களை வென்று, போர்க்களத்திலிருந்து நான் வெற்றியோடு திரும்பி வரும்போது, என் வீட்டிலிருந்து என்னைச் சந்திக்க யார் முதலில் வருகிறார்களோ, அவரை வாழ்நாள் முழுவதும் உமக்குச் சேவை செய்ய அர்ப்பணிப்பேன்” என்றார்.

பின்னர் அம்மோனியர்களோடு நடந்த பெரும் போரில் யெப்தாவுக்கு மாபெரும் வெற்றியைக் கடவுள் கொடுத்தார்.

இஸ்ரவேலர்கள் அகம் மகிழ்ந்தார்கள். பின்னர் தனது வீட்டுக்குப் படையணியுடன் திரும்பி வந்தபோது, அவருடைய மகள் கஞ்சிராவைத் தட்டி ஒலியெழுப்பியபடி வெற்றிகீதம் இசைத்துக்கொண்டு நடனமாடியபடியே வந்து தந்தையை வரவேற்றாள். அவளைத் தவிர அவருக்கு வேறு மகளோ மகனோ இல்லை.

அவளைப் பார்த்தவுடன் தன்னுடைய உடையைக் கிழித்துக்கொண்டு, “ஐயோ, என் மகளே! என் இதயத்தை நொறுக்கிவிட்டாயே! கடவுளிடம் வாக்குக்கொடுத்துவிட்டேன். அதை என்னால் மாற்ற முடியாதே” என்று கலங்கி அழுதார்.

சிறுவயது முதலே கடவுளைக் குறித்து தந்தை வழியே அறிந்திருந்த அந்த மகள், தனது தந்தையின் நேர்த்திக் கடனை நிறைவேற்றினாள். திருமணம் செய்துகொள்ளாமல் தன் வாழ்நாள் முழுவதும் புனிதப்பெட்டி வைக்கப்பட்டிருந்த ஆசாரிப்புக் கூடாரத்தில் கடவுளுக்கு அவள் சேவை செய்து வாழ்ந்தாள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

6 hours ago

வாழ்வியல்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஆன்மிகம்

6 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்