விவிலிய மாந்தர்கள்: கடவுள் தேர்ந்தெடுத்த இரண்டு பெண்கள்!

By ஜோ.ஆரோக்யா

பெண்களால் தலைமை ஏற்கமுடியாது என்ற கர்வத்தை தலைக்கு ஏற்றிக்கொண்ட ஆண்களுக்கு பாடம் கற்றுத் தருவதற்காக கடவுள் படைத்த பாத்திரங்கள்தான் தெபோராளும் யாக்கேலும்.

தேபோராள் எனும் தீர்க்கதரிசி

எதிர்காலத்தின் மீதும் நிகழ்காலத்தின் மீதும் தீர்க்கதரிசனங்களைச் சொல்லும் மனிதருள் புனிதராக பெண்களையும் கடவுள் தேர்வு செய்வார் என்பதற்கு, பெண் தீர்க்கதரிசியான தெபொராள் உதாரணமாக இருந்தார். அவர் இஸ்ரவேலர்களின் புதிய தலைவரான பாராக், தன்னை வந்து சந்திக்கும்படி செய்தி அனுப்பினார்.

ஓடோடி வந்த பாராக்கிடம் “ ‘நீ பத்தாயிரம் பேரை அழைத்துக்கொண்டு கொண்டு பள்ளத்தாக்கில் உள்ள கீசோன் நீரோடைக்குச் செல். அங்கே யாபீனின் படைக்கு எதிராக நீ சண்டை போட வேண்டும். கொடுங்கோல் படைத் தளபதியான சிசெராவை அங்கே நீ தோற்கடிப்பாய்’ என்று நம் கடவுளாகிய பரலோகத் தந்தை கூறுகிறார்” என தீர்க்க தரிசனம் உரைத்தார்.

இதைக் கேட்ட பராக், “கடவுளின் நல்வாக்கை உரைத்த நீங்களும் என்னோடு வந்தால்தான் நான் போருக்குச் செல்வேன் ” என்று கூறினார். அதற்கு தெபொராள் மறுமொழியாக, “நான் வருகிறேன். ஆனால், ‘சிசெராவை நீ கொல்ல மாட்டாய். ஒரு பெண்தான் கொன்றுபோடுவாள்’ என நம் கடவுள் உரைக்கிறார்” என்று கூறி பாரக்குடன் தெபோராள் புறப்பட்டார். கீசோன் நீரோடை நோக்கிப் படை புறப்பட்டது.

யாக்கேல் எனும் வீராங்கனை!

இதை அறிந்த சிசெரா, எத்தனை பெரிய வீரனும் அருகில் நெருங்கமுடியாதபடி சக்கரங்களில் இரும்புக் கத்திகள் பொருத்தப்பட்ட 900 ரதங்களோடும் தனது எல்லா படைகளோடும் கீசோன் நீரோடைக்கு வந்து சேர்ந்தான்.

அப்போது நீரோடையில் கணுக்கால் அளவே தண்ணீர் சிலுசிலுத்து ஓடிக்கொண்டிருந்தது. சிசெராவின் மாபெரும் படையோடு மோத, பத்தாயிரம் பேர் கொண்ட தனது படையுடன் பாராக் நீரோடையை நெருங்கிக்கொண்டிருந்தார். அப்போது கடவுள், கீசோன் நீரோடையில் திடீர் வெள்ளத்தை கரைபுரண்டு ஓடச் செய்தார்.

அதில் சிசெராவின் ரதங்கள் அடித்துச் செல்லப்பட்டு சேற்றில் சிக்கிக்கொண்டன. திடீரென மீண்டும் வெள்ளம் வடிந்தது. அப்போது அங்கே வந்த பாராக்கும் அவருடைய வீரர்களும் திடீர் தாக்குதல் நடத்தி சிசெராவின் படையைத் தோற்கடித்தனர். இவர்களை இனி வெல்லமுடியாது என்பதை அறிந்ததும் சிசெரா தன்னுடைய ரதத்திலிருந்து இறங்கி, தப்பித்து ஓடினான்.

அவன் ஓடிப்போய், யாக்கேல் என்ற பெண்ணின் கூடாரத்துக்கு முன்பாக நின்றான். யாக்கேல் ஒரு புறதேசத்துப் பெண். ஆனால் பரலோகத் தந்தையே உண்மையான கடவுள் என்பதை அறிந்து அவரை வணங்கி வந்த கடும் உழைப்பாளி. கால்நடை வளர்ப்புதான் அவளது தொழில். இஸ்ரவேலர்களை, யாபினும் சிசெராவும் கொடுமைப்படுத்தி வந்ததையும் கீசோன் ஓடையில் இருதரப்புக்கும் போர் நடக்க இருந்ததையும் அறிந்திருந்தாள்.

போரில் தோற்று தனது கூடாரத்தின் முன்பாக வந்து நிற்பவன் சிசெரா என்பதை அறிந்து கொண்ட யாகேல், அவனை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றாள். அவன் குடிப்பதற்காகச் சூடான பால் கொடுத்தாள். வயிறுமுட்டக் குடித்த அவனுக்கு, ஒரு போர்வையைக் கொடுத்தாள். களைப்பில் இருந்த சிசெரா, போர்த்திகொண்டு அவளது கூடாரத்தில் அயர்ந்து தூங்கிப்போனான். அப்போது யாக்கேல் சிறிதும் யோசிக்காமல் மிகத் துணிச்சலான முடிவு ஒன்றை எடுத்தாள்.

ஒரு நீண்ட கூடார ஆணியை எடுத்துவந்து சுத்தியலைக் கொண்டு தூங்கிக்கொண்டிருந்த சிசெராவின் தலையில் வைத்து ஓங்கி அடித்தாள். சிசெரா இறந்துபோனான். சிசெராவைத் தேடிக்கொண்டு பாராக் அங்கே வந்தார்.

“நீங்கள் தேடுகிற ஆள் இவரா என்று பாருங்கள்” எனக் கூறி பாராக்கை அழைத்துச் சென்று காட்டினாள். அங்கே சிசெரா இறந்து கிடப்பதைப் பார்த்து வியந்துபோனார். இஸ்ரவேலர்களுக்கு மீண்டும் வெற்றியைக் கொடுத்ததற்காக பாராக்கும் தெபொராளும் பரலோகத் தந்தையைப் புகழ்ந்து பாடினார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

7 hours ago

ஜோதிடம்

7 hours ago

மேலும்