ஜோதிடம் அறிவோம்! 50: இதுதான்... இப்படித்தான்! குளித்ததும் முதலில் துடைப்பது முதுகா? முகமா?

By ஜெயம் சரவணன்

அன்பார்ந்த வாசகர்களே... இது 50ம் அத்தியாயம். இத்தனை அத்தியாயங்கள் தொடர, உங்கள் ஆதரவே காரணம். அதற்கு மனமார்ந்த நன்றி.

இப்போது பொதுவான சில தகவல்களைப் பார்க்கலாம்.

அதாவது சகுன சாஸ்திரம்....

இந்த சகுன சாஸ்திரம்தான். ஜோதிடத்தில் 80 சதவீதம் பங்கு வகிக்கிறது என்றால் மிகையில்லை. அதாவது ஒருவரின் ஜாதகத்தை ஆய்வு செய்யும்போது, அவர் உள்ளே நுழையும் விதம், அவருடன் வந்தவர்கள், அவர்கள் எத்தனை பேர், அமரும் பாங்கு, அவரின் உடை நிறம், உடல்மொழி, அவர் ஜாதகத்தைத் தரும் விதம், அதன்பிறகு அவரின் உடல் அசைவுகள் இதெல்லாம்தான் ஒரு ஜோதிடருக்கு சகுன நிமித்தம்.

இவை மட்டுமல்ல, ஜோதிடரின் ஐம்புலன்களும் கூர்மையாக இருக்க வேண்டும். பார்வையில் படும் விஷயங்கள், கேட்கும் சத்தம், காற்றின் வாசனை, நாவில் உண்டாகும் மாற்றம், மனதில் ஏற்படும் எண்ணங்கள், இவை எல்லாம் சேர்ந்து பலன்களில் வெளிப்படும்,

உதாரணமாக, ஐந்து தினங்களுக்கு முன் ஒரு இளைஞர் திருமணப்பொருத்தம் பார்க்க வந்திருந்தார்.

அவருடன் ஏற்பட்ட சகுன நிமித்தம் என்னவென்று பார்ப்போம்.

அவர் தன் நண்பருடன் வந்திருந்தார். இருவரும் கருப்பு நிற டீசர்ட் அணிந்திருந்தனர். நான்கு சேர்களும், ஒரு ஸ்டூலும் இருந்தது, ஆனால் அவர் சேரில் அமராமல், ஸ்டூலில் அமர்ந்தார்.

அதாவது சௌகரியமாக அமராமல் அசௌகரியமான நாற்காலியில் அமர்ந்தார்.

திருமணப் பொருத்தம் பார்க்க வேண்டும் என்றவாறே இடது கையால் பெண்ணின் ஜாதகத்தைத் தந்தார்.

நான் இந்த இருவரின் ஜாதகத்தையும் ஆய்வு செய்வதற்கு முன்பே இது பொருந்தாது என சகுன சாஸ்திரம் காட்டிவிட்டது.

இருவர் ஜாதகத்தை பார்த்தவுடன் இது எந்த வகையிலும் பொருந்தாது என்பதும் அந்த இளைஞனுக்கு மாரக கண்டத்தை தரும் என்பதும் பார்த்த உடனே காட்டியது.

ஆனால் நட்சத்திரப் பொருத்தம் 10 க்கு 7 இருந்தது. ஆனால் ஜாதக ரீதியிலான பொருத்தம் அறவே இல்லை. நான் இந்த விபரங்களையெல்லாம் எடுத்துக் கூறி, வேறு நல்ல ஜாதகம் அமையும் என்று சமாதானபடுத்தி அனுப்பினேன்.

எனவே இங்கு சில விபரங்களை உங்களுக்குத் தருகிறேன் பயன்படுத்துங்கள்.

எந்த சுப காரியத்துக்குச் சென்றாலும் மூன்று பேராகச் செல்லாதீர்கள். அது காரியத்தடை உண்டாக்கும்.

உடையின் நிறம் அடர் சிவப்பு, கருப்பு நிறத்தைத் தவிருங்கள்.

கைகளைக் கட்டிக்கொண்டு இருக்காதீர்கள். அது உங்கள் காரியத்தையும் கட்டிப்போட்டுவிடும்.

உங்கள் கைகள் சாதாரணமாக இருக்கட்டும். அதாவது தலைமுடியை கோதுவது, கன்னத்தில் கை வைப்பது, புருவம், மீசையை தொடுவது கூடாது. அது காரியத்தடையைக் காட்டும்.

அதே சமயம் நெற்றி, காதுமடல், மூக்கு நுனி, இவைகளைத் தொட... நீங்கள் கேட்டு வந்த காரியம் வெற்றியாகும்.

மேற்கண்டவை அனைத்தும் ஜாதகம் பார்க்கும் போது மட்டுமல்ல எந்த விஷயத்திற்கு நீங்கள் சென்றாலும் பொருந்தும். பலன் கொடுக்கும்.

காலை எழுந்தவுடன் உங்கள் உள்ளங்கை, கோயில்கோபுரம், நிலைக்கண்ணாடி, பசு, யானை(படம்), பழங்கள், குழந்தைகள், எனப் பார்க்க அந்த நாள் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கும்.

குளித்தவுடன் முதலில் முதுகைத் துடைக்க வேண்டும். பிறகே முகத்தைத் துடைக்க வேண்டும்.

அதாவது நீங்கள் குளிக்கும் போது மூதேவியும், ஶ்ரீதேவியும் காத்துக்கொண்டிருப்பார்களாம். நீங்கள் துடைக்கும் முதல் பகுதி எதுவானாலும் முதலில் மூதேவி வந்து பற்றிக்கொள்வாளாம். பிறகே ஶ்ரீதேவி பொறுமையாக வந்து அமர்வாளாம்.

நீங்கள் முதலில் முகத்தைத் துடைக்க மூதேவி உங்கள் முகத்தைப்பற்றிக்கொள்வாள். எனவேதான் முதலில் முதுகையும் பிறகு முகத்தையும் துடைக்க வேண்டும் என பெரியோர்கள் சொல்வார்கள்.

இது சரிதான் என்றாலும், இப்போது வேறுஒரு விளக்கத்தையும் பார்ப்போம்.

உழைப்பின் அடையாளம் முதுகு. சனியின் ஆளுமை உள்ள இடம் முதுகு. சனியின் பரிபூரண அருள் இருந்தால்தான் செய்கின்ற தொழில், உத்தியோகம் நிரந்தரமானதாகவும், மன நிறைவைத் தருவதாகவும் இருக்கும்.

எனவேதான் முதுகுப் பகுதி சனியின் அம்சம் என்பதால் அதற்கே முதல் மரியாதை.

முதலில் முகத்தைத் துடைப்பவர்கள்.... நிச்சயமாக சொல்கிறேன் ....முகஸ்துதி பாடி , ஆமாம்சாமி போட்டு வாழ்பவர்களாகத்தான் இருப்பார்கள்.

குளிக்கும்போது எந்த நீராக இருந்தாலும்( சுடுநீர், தண்ணீர்) முதலில் கால் பாதத்தில் இருந்துதான் குளிக்கத் தொடங்க வேண்டும்.

ஈரத்துண்டை கட்டிக்கொண்டு பூஜை செய்யக்கூடாது. அதுபோல் ஓர் உடை மட்டும் அணிந்து சாப்பிடக்கூடாது. இரு உடை நமது மேனியில் இருக்க வேண்டும்.

திருநீறை ஈரப்படுத்தி பூசக்கூடாது, சாதுக்கள் மட்டுமே அவ்வாறு பூசலாம்.

திருநீறு மேற்பகுதியிலும், அதற்கு கீழே குங்குமம் இட வேண்டும். புருவ மத்தியில் விசேஷித்த மை, சந்தனம் இட வேண்டும்.

ஆலய வழிபாட்டின் போது முதலில் கோபுர தரிசனம், பிறகு கொடிமர வணக்கம், அதை அடுத்து பலிபீடம். இங்குதான் உங்கள் கோரிக்கைகள் வைக்கப்படவேண்டும். அதை அடுத்து இறைவனின் வாகனம். இவரிடம்தான் நீங்கள் இறைவனை வணங்க அனுமதியும், உங்கள் வருகையையும் பதிவு செய்யவேண்டும்.

இறைவனிடத்தில் நீங்கள் எதுவும் கேட்கக் கூடாது. ஆலயத்தில் இறைவனின் திருநாமத்தை மட்டுமே உச்சரித்துக்கொண்டு தரிசனம் செய்ய வேண்டும்.

அவருக்கு அனைத்தும் தெரியும். எனவே கோரிக்கை வைக்கிறேன் என்ற பெயரில் அவரை தொந்தரவு தராதவாறு தரிசனம் மட்டும் செய்யுங்கள்.

கொடிமரத்திடம் மட்டுமே சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும், அதுவும் வடக்கு பார்த்து, ஆண்கள் தம் உடலின் அனைத்து அங்கங்கள் படும்படியாகவும், பெண்கள் தங்கள் உடலின் மார்பு, வயிறு, யோனி பூமியில் படாமலும் வணங்க வேண்டும், (இவை புனிதமானவை மண்ணில்படக்கூடாது).

அடுத்து... நீங்கள் வெளியே செல்லும் போது மிருகங்கள் (நாய், பசு,காளை,ஆடு உட்பட) உங்களின் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கம் செல்ல செல்லும் காரியம் வெற்றி, மாறாக இடமிருந்து வலம் சென்றால் தாமதம்.

பறவைகள் இடமிருந்து வலம் சென்றால் வெற்றி, மாறாக வலமிருந்து இடம் சென்றால் தாமதம்.

இன்னும் சில சகுனங்களை உங்கள் அனுபவத்திலேயே அறிந்துகொள்ளுங்கள்.

அன்பார்ந்த வாசகர்களே. இந்தத்தொடர் இத்துடன் இனிதே நிறைவுபெறுகிறது,

எனது எழுத்தைப் பாராட்டி ஊக்கப்படுத்திய மறைந்த ஐயன் எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அவர்களை வணங்கி, எனக்கு ஆசிரியராகவும் வணங்குதலுக்குரிய குருவாகவும் இருக்கும் தேனி- யோக ராம்சங்கர் அவர்களுக்கும் நன்றியையும் வணக்கத்தையும் கூறிக்கொள்கிறேன். முக்கியமாக, வாசகர்களாகிய உங்களுக்கு, கோடனுகோடி நன்றிகள்!

- நிறைவுற்றது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஆன்மிகம்

8 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்