ஆன்மா என்னும் புத்தகம் 09: பறத்தலின் பொருட்டு பற

By என்.கெளரி

அமெரிக்காவின் பிரபல எழுத்தாளரான ரிச்சர்ட் பாக் எழுதிய ‘ஜோனாத்தன் லிவிங்ஸ்டன் ஸீகல்’ 1970-களில் அதிகமாக விற்பனையான புத்தகங்களில் ஒன்று. இந்தப் புத்தகத்தின் கதாநாயகனான ஜோனாத்தன் என்ற கடல் காகத்துக்கு, அந்தக் காலகட்டத்தில் நட்சத்திர அந்தஸ்தே இருந்தது. அந்த ஜோனாத்தன் கடல் காகம், மற்ற கடல்காகங்களைப் போல சாமானிய வாழ்க்கையை வாழ விரும்பாமல் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறது. நூறு பக்கங்களுக்குள் அடங்கிவிடும் இந்தப் புத்தகம், பறந்த விரிந்த உலகை ரசித்து வாழ நினைக்கும் ஒரு கடல் காகத்தின் வாழ்க்கையை விவரிக்கிறது. தற்போது, இந்தப் புத்தகம் நவயுக காலகட்டத்தின் ஆன்மிக அடையாளமாகவே பார்க்கப்படுகிறது.

பறக்க நினைக்கும் கடல் காகம்

ஜோனாத்தன், தான் வாழும் கடல் காகக் கூட்டத்தில் வித்தியாசமான கடல் காகமாக இருக்கிறது. “பெரும்பாலான கடல் காகங்கள் பறப்பதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அவற்றுக்குச் சாப்பிடுவது மட்டும்தான் ஒரே குறிக்கோள். ஆனால், இதற்கு மாறாக, ஜோனாத்தனுக்குச் சாப்பிடுவது மட்டுமே குறிக்கோளாக இன்றி பறப்பதே குறிக்கோளாக இருந்தது”. ஜோனாத்தனின் தந்தை அதனிடம், “நீ பறப்பது உணவைத் தேடி மட்டும்தான் இருக்க வேண்டும். பறக்க வேண்டும் என்ற ஆசையில் நீ பறக்கக் கூடாது” என்று எச்சரிக்கிறார்.

அவர் எச்சரிக்கையையும் மீறி, ஜோனாத்தன் அதிவேகமாகப் பறந்துவந்து நீரில் குதிப்பது, கடல் நீரில் தாழப் பறப்பது எனப் பல சோதனைகளை மேற்கொண்டது. அது தன் ஆற்றலை மீறிப் பறப்பதற்கு முயன்றது. ஆனால், அதன் பெரும்பாலான முயற்சிகள் தோல்வியடைந்தன. அதற்குத் தனக்கிருக்கும் வரம்புகள் தெரிந்துதான் இருந்தது.

“நான் ஒரு கடல் காகம். என்னுடைய இயல்பால் நான் வரையறுக்கப்பட்டிருக்கிறேன். நான் அதிவேகமாகப் பறப்பதற்கு விதிக்கப்பட்டிருந்தால், ராஜாளியைப் போல சிறிய இறக்கைகள் எனக்கு இருந்திருக்கும். நான் மீன்களுக்குப் பதிலாக எலிகளைச் சாப்பிட்டிருப்பேன்” என்று நினைத்தது ஜோனாத்தன். ஒருநாள், ஒரு மணி நேரத்தில் 140 மைல் வேகத்தில் பறந்தால், அடுத்தநாள் அது ஒரு மணி நேரத்தில் 200 மைல் வேகத்தில் பறந்து மகிழ்ச்சியடைந்தது. இந்த வேகத்தில் எந்த ஒரு கடல் காகமும் பறந்தது கிடையாது.

அது தன் இனத்தை வேறொரு கட்டத்துக்கு நகர்த்திச் சென்றுவிட்டதாக நினைத்து ஆனந்தம் அடைந்தது. தான் கற்றுக்கொண்டதைத் தன் கூட்டத்தாருக்கும் கற்றுக்கொடுத்தால் இரை தேடி ஒவ்வொரு மீன்பிடிப் படகாக ஓட வேண்டியிருக்காது என்று அது நினைத்தது. தன் கூட்டத்தினரின் உயர்ந்த நிலையை உணர்த்த நினைத்தது ஜோனாத்தன்.

பரிபூரணத்துக்கான தேடல்

ஆனால், அடுத்த நாள் ‘பொறுப்பற்று பறந்து’கொண்டிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டு ஜோனாத்தன் கடல் காகக் குழுவின்முன் நிறுத்தப்பட்டது. “உணவை உண்டு, எவ்வளவு காலம் வாழ முடியுமோ அவ்வளவு காலம் வாழும் வாழ்க்கையின் நோக்கம் அதற்குப் புரியவில்லை” என்று கூறிய குழுவினர் கூட்டத்தைவிட்டு ஜோனாத்தனை வெளியேற்றிவிட்டனர். சிறிது காலம், தனிமையில் பாறைகளின் மேல் பறந்துதிரிந்து கழித்த ஜோனாத்தன், தன்னைப் போலவே பறத்தலின் பொருட்டு பறக்க நினைக்கும் மேன்மையான கடல் காகக் கூட்டம் ஒன்றைச் சந்தித்தது.

அந்தக் கூட்டத்தின் கடல் காகங்களிடம் ஜோனாத்தன் பறத்தலின் பல்வேறு பரிமாணங்களைக் கற்றுக்கொண்டது. ஜோனாத்தனின் திறமையைப் பார்த்த கடல் காகங்கள், அதனிடம் லட்சத்தில் ஒரு கடல் காகத்திடம் இருக்கும் திறமை இருப்பதாகக் கூறின. அது பரிபூரணம் அடைவதற்கான தேடலைத் தொடங்க வேண்டும் என்று அவை வலியுறுத்தின.

“இந்த உண்மையைப் புரிந்துகொள்ள பெரும்பான்மையான கடல் காகங்களுக்கு 1000 ஜென்மங்கள் தேவைப்படும். இந்த உலகத்தில் நாம் என்ன கற்றுக்கொள்கிறோமோ அதைத்தான் நாம் அடுத்த உலகத்தில் அடைகிறோம். இந்த உலகில் எதையுமே கற்றுக்கொள்ளாவிட்டால், அடுத்த உலகத்திலும் எதையும் கற்றுக்கொள்ளப்போவதில்லை. அப்போது இந்த உலகத்தில் எந்தக் குறைகளுடன் வாழ்கிறோமோ அதே குறைகளுடன்தான் அடுத்த உலகத்திலும் வாழ வேண்டியிருக்கும்” என்று ஜோனாத்தனுக்கு அந்தக் கடல்காகங்கள் விளக்கின.

28chgow_Seagull bookrightகடவுளைச் சந்தித்தல்

ஒரு முறை, நகராமலே நினைத்த இடத்துக்குப் பயணம் செய்யும் அற்புத சக்திவாய்ந்த முதிய கடல் காகத்தைச் சந்திக்கும் வாய்ப்பு ஜோனாத்தனுக்குக் கிடைக்கிறது. அந்த முதிய கடல் காகத்தைச் சந்தித்தவுடன், ஜோனாத்தனுக்கு தான் எலும்பும் இறக்கைகளும் கொண்ட பறவை மட்டுமல்ல; தன்னிடம் எதனாலும் கட்டுப்படுத்த முடியாத சுதந்திரமும் பறக்கும் திறனும் இருக்கின்றன என்பதை உணர்ந்தது. நாம் நம்மைப் பார்க்கும் பார்வையை மாற்றிக்கொள்ளாவிட்டால், நம்மிடம் இருக்கும் திறமைகளை கண்டுபிடிக்கவே முடியாது. இறுதியில் ஜோனாத்தன், பறக்க ஆசைப்படும் கடல் காகங்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தது.

இந்தப் புத்தகத்தில் ரிச்சர்ட் பாக் ‘சிறந்த கடல் காக’த்தை இயேசு கிறிஸ்துவின் உருவகமாக விவரிக்கிறார். இந்தப் புத்தகம் எளிமையான கருத்துகளை வலியுறுத்தவதாகப் பலர் நினைத்தாலும், மனித ஆற்றலின் எல்லைகளையும் சாத்தியங்களையும் கடக்க நினைக்கும் ஒவ்வொரு தலைமுறையினருக்கும், அவர்களை உந்தித் தள்ளும் லட்சிய உயிராகவே கடல் காகம் இருக்கும்.

ரிச்சர்ட் பாக்

இவர் அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் 1936-ம் ஆண்டு பிறந்தார். அமெரிக்க விமானப் படையில் விமானியாகப் பணியாற்றிய இவர், விமானத் தொழில்நுட்ப எழுத்தாளராக விளங்கினார். இவர் பெரும்பாலான புத்தகங்களை பறவைகள், பறத்தலை உருவகமாக வைத்து எழுதியிருக்கிறார். ‘Illusions’, ‘Bridge Across Forever’, ‘Nothing By Chance’ ‘The Ferret Chronicles’ உள்ளிட்ட புத்தகங்களை இவர் எழுதியிருக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

48 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்