திருநெல்வேலி உறை செல்வர்தாமே

By வே.முத்துக்குமார்

திருக்குடமுழுக்கு விழா : ஏப்ரல் 27

பாண்டிய நாட்டுக்கு உட்பட்ட 14 பாடல்பெற்ற சிவத்தலங்களில் ஒன்றாக திருநெல்வேலியில் உள்ள சுவாமி நெல்லையப்பர், காந்திமதியம்மாள் திருத்தலம் திகழ்கிறது. புராண முக்கியத்துவமும் வரலாற்றுச் சிறப்புமுடைய இக்கோயிலுக்கு 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஏப்ரல் 27-ம் தேதியன்று திருக்குடமுழுக்குப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.

பேர் அண்டம், அனவரதம், பிரளயச்சிட்டம், தென்காஞ்சி, சிவபுரம், திரிமூர்த்திபுரம், இபபுரி, கச்சபால்யம், பிரம்மபுரம், தரணிசாரம், விண்டுதலம், காமகோட்டம், சகலசித்தி ஸ்தலம் எனப் பல்வேறு புராணப் பெயர்களாலும், வேணுவனம், நெல்லூர், சாலிவேலி, சாலிவாடி, சாலிநகர், தாருகாவனம், கீழ்வெம்பு நாட்டு குலசேகர சதுர்வேதி மங்கலம் உள்ளிட்ட பெயர்களாலும் அழைக்கப்படும் பெருமை இத்திருத்தலத்துக்கு உண்டு.

இரட்டைக் கருவறைகள்

காந்திமதியம்மை தான் படைத்த உலகத்தைக் காக்கும் பொருட்டு, நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல், வேணுவனத் திருவிளையாடல், காலசம்ஹாரமூர்த்தி ஸ்வேத கேதுவுக்கு எமபயம் ஒழித்த திருவிளையாடல் எனப் பல்வேறு திருவிளையாடல்களை நிகழ்த்திக் காட்டிய இறைவனிடத்தில் வேண்டித் தவம் இயற்றி அவனருளை இவ்வுலகம் பெறும்படிச் செய்ததே இத்திருத்தலத்தின் வரலாறாகும்.

சைவ சமயக் குரவர்களாகிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் உள்ளிட்டோர் எழுந்தருளி தமிழ்வேதம் பாடிப் பரப்பிய மகிமையுடைய இத்திருத்தலம் திருநெல்வேலி நகரத்தின் நடுவில் 5 கோபுரத் தளங்களுடன் வானளாவி நிற்கிறது. வேணுவனநாதர், நெல்லை கோவிந்தா என இங்கு மட்டும் அப்பனுக்கு இரட்டைக் கருவறைகள். அப்பனின் சன்னிதி கோபுரத்தைவிட அம்மையின் சன்னிதி கோபுரம் அழகு வாய்ந்தது. திருக்கோயிலுக்குள் அமையப்பெற்றுள்ள பொற்றாமரைக் குளக்கரையில் நின்று பார்த்தால், அம்மையின் கோபுரப் பேரழகையும் கம்பீரத்தையும் தரிசிக்கலாம்.

ஆயிரங்கால் மண்டபம், ஊஞ்சல் மண்டபம், சோமவார மண்டபம், சங்கிலி மண்டபம், மணி மண்டபம், வசந்த மண்டபம், சிந்துபூந்துறை தீர்த்த மண்டபம் என ஏழுவகையான மண்டபங்களையும், ஐந்து ரதங்களையும் (விநாயகர், முருகர், நெல்லையப்பர், காந்திமதியம்மன், சண்டிகேசுவரர்) அப்பன் பிரம்ம தாண்டவமாடிய தாமிரசபையையும் உடைய சிறப்பு இத்திருத்தலத்துக்கு உண்டு.

‘திங்கள் நாள் விழமல்கு திருநெல்வேலி உறை செல்வர்தாமே’ எனத் திருஞானசம்பந்தரால் குறிப்பிடப்பட்டு பாடப்பெற்றுள்ள இத்திருக்கோயிலில் ஆண்டின் பன்னிரண்டு மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுவது தனிச் சிறப்பாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

சினிமா

16 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

40 mins ago

க்ரைம்

46 mins ago

க்ரைம்

55 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்