படிப்போம் பகிர்வோம்: உலகத்துக்கான யோகப் புத்தகம்

By கனி

ரமஹம்ச யோகானந்தர், அவரது சுயசரிதையின் கடைசி வரியை எழுதி முடித்தவுடன், “இந்தப் புத்தகம் லட்சக்கணக்கானவர்களின் வாழ்க்கையை மாற்றும். நான் சென்ற பிறகும், எனது தூதுவனாக இந்தப் புத்தகம் செயல்படும்” என்று சொல்லியிருக்கிறார். அவரது வாக்கு நிரூபணமாகியிருக்கிறது. 1946-ம் ஆண்டு வெளியான ‘ஒரு யோகியின் சுயசரிதம்’ (An Autobiography of a Yogi) புத்தகம், உலகம் முழுவதும் அதிகமாக விற்பனையான ஆன்மிகப் புத்தகங்களில் ஒன்றாக இன்றளவும் திகழ்கிறது.

புத்தகத்தின் பின்னணி

இந்தப் புத்தகம் உருவானதற்கான பின்னணி சற்றுப் புதிரானதாகவே இருக்கிறது. 19-ம் நூற்றாண்டின் இந்தியத் துறவி லாஹிரி மகாசயர், தான் இறந்து ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, தன்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதப்படும் என்று தீர்க்கத்தரிசனமாகக் கூறியிருந்தார். அந்தப் புத்தகம் யோகத்தை உலகம் முழுவதும் எடுத்துச்செல்லும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்தச் செய்தி, பரமஹம்ச யோகானந்தருக்கு அவருடைய குரு ஸ்ரீ யுக்தேஸ்வர் (துறவி லாஹிரியின் மாணவர்) மூலம் விளக்கப்பட்டத்தாகக் கூறப்படுகிறது. இந்தப் புத்தகத்தை எழுதும் பணியையும் யோகானந்தரின் குரு ஸ்ரீ யுக்தேஸ்வரே அவரிடம் ஒப்படைத்ததாக அறியப்படுகிறது. துறவி லாஹரி இறந்து சரியாக ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான இந்தப் புத்தகம், துறவி லாஹிரி, ஸ்ரீ யுக்தேஸ்வரின் வாழ்க்கைக் கதைகளை உள்ளடக்கியதாகவும் இருக்கிறது.

‘ஒரு யோகியின் சுயசரிதம்’ புத்தகம், உலகில் அதிகமாகக் கொண்டாடப்பட்ட ஆன்மிகப் புத்தகங்களில் ஒன்றாக விளங்குகிறது. உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் 1893-ம் ஆண்டு பிறந்த யோகானந்தர், தன் இளமைக் காலத்தின் பெரும்பகுதியை கொல்கத்தாவில் கழித்தார். முகந்தா லால் கோஷ் என்ற இயற்பெயரைக் கொண்ட யோகனந்தர், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அவருடைய குரு யுக்தேஸ்வரரின் வழிகாட்டுதலில் தன் ஆன்மிக வாழ்க்கையைத் தொடங்கினார். 1920-ம் ஆண்டு, அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்தில் நடைபெற்ற சர்வதேச மதங்களின் மாநாட்டில் இவர் கலந்துகொண்டார். உலகில் யோகாவைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய உரைகளில், யோகானந்தரின் இந்த உரைக்கும் முக்கிய இடமிருக்கிறது.

துறவிகளின் சந்திப்புகள்

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் யோகானந்தர் பல்வேறு துறவிகளைச் சந்தித்து உரையாடியிருக்கிறார். அந்தத் துறவிகளைச் சந்தித்த அனுபவங்களை இந்தப் புத்தகத்தில் யோகனந்தர் தொகுத்திருக்கிறார். பக்தர் ஒருவர் பரிசளித்த ‘ஃபோர்டு’ காரில் பயணம் செய்து தொலைதூரத்தில் வசித்துவந்த சுவாரசியமான பல துறவிகளை அவர் சந்தித்திருக்கிறார். ஜெர்மனியைச் சேர்ந்த மறைஞானி ‘தெரஸே நியூமன்’, யோகினி நிர்மலா தேவி, துறவிகள் கிரி பாலா, டைகர் ஸ்வாமி உள்ளிட்டவர்களைச் சந்தித்திருக்கிறார். அத்துடன், இந்தியாவில் மகாத்மா காந்தி, விஞ்ஞானி ஜகதீச சந்திர போஸ், கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், ஸ்ரீ ரமண மகரிஷி உள்ளிட்டவர்களைச் சந்தித்த அனுபவங்களையும் இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறார். யோக சாதனைகள் மூலம் மனதையும் உடலையும் கட்டுப்படுத்தி சுயத்தை அறிந்துகொள்வதைப் பற்றி இந்தப் புத்தகத்தில் அவர் விளக்கியிருக்கிறார். இந்து ஆன்மிக இலக்கியங்களான வேதங்கள், உபநிடதங்கள், மகாபாரதம் போன்றவற்றுடன் பைபிள் பற்றிய சுவாரசியமான அறிமுகத்தையும் இந்தப் புத்தகம் வழங்குகிறது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தியாவில் நடந்த மெய்ஞானத் தேடல் குறித்த கோட்டுச் சித்திரமாக இந்தப் புத்தகம் அறிமுகம் செய்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

25 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்