கிறிஸ்துவின் தானியங்கள்: உலகின் ஒரே நீதிபதி

By அனிதா அசிசி

சு

யவிமர்சனம் என்பதில் நம் யாருக்குமே அக்கறை இல்லை. அதற்குக் காரணம் அனைவரும் தம்மை மட்டுமே நிறைகள் கொண்ட மனிதராக நினைத்துக்கொள்வதுதான். இதனால் தம் குறைகளை விட்டுவிட்டு மற்றவரை விமர்சிப்பதிலும் அவர்களுக்குத் தீர்ப்பு எழுதுவதிலும் இன்பம் காண்பது நம் இயல்பாகவே மாறிவிட்டது.

பல நேரத்தில் இது சரியான அணுகுமுறை போலவும் சில நேரம் மட்டுமே இது தவறு என்பதுபோலவும் உணர்கிறோம். மற்றவர்களை விமர்சிப்பதிலும் அவர்களைப் பற்றி இறுதி முடிவுக்கு வருவது பற்றியும் கடவுளின் அணுகுமுறை என்ன? இதற்கான பதிலைத் தெரிந்துகொள்வதற்கு, தற்போது தவக்காலத்தில் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

“யாருக்கும் தீர்ப்பளிக்க மாட்டேன், யாரையும் கண்டனம் செய்ய மாட்டேன்” என்ற தீர்மானத்தை எடுத்துக்கொள்ள இதுவே நல்ல தருணம். ஏனெனில், கண்ணால் காண்பதையும் காதால் கேட்பதையும் வைத்து யாருடைய செயலையும் நாம் மதிப்பிட முடியாது.

உண்மையை அறிந்த ஒருவர்

அடுத்தவரைப் பற்றிக் கிண்டலாகவோ புறமோ பேசுகிற பழக்கம் பலரிடமும் இருக்கிறது. குறிப்பாக, மற்றவர்களது தனிப்பட்ட வாழ்வு, அதில் உள்ள நிறை குறைகளைச் சுட்டிக்காட்டிப் பேசும் போக்கு நம் மனதைக் கவ்விக்கொண்டிருக்கும் ஒரு நோயாகவே இருக்கிறது. இப்படிப் பேசும் நேரத்தில் நாம் மற்றவர்களைத் தீர்ப்பிடுகிறோம், கண்டிக்கிறோம். இப்படிப் பேசுவது இறை வார்த்தைக்கு எதிரானது என்பதை உணர கிறிஸ்துவின் வார்த்தைகள் வாய்ப்பளிக்கின்றன.

“அவரது வேலை சரியில்லை” என்றோ “அவருக்கும் இவருக்கும் ஒரு மறைமுக ஒப்பந்தம் இருக்கிறது” என்றோ “இந்தச் செல்வாக்கும் பணமும் இப்படித்தான் வந்திருக்கும்” என்றோ நாம் ஆதாரமில்லாமல் பேசுகின்ற பேச்சுகள் அனைத்துமே சக மனிதர்கள் மீது நாம் சுமத்துகின்ற தீர்ப்புகளாகவும் மற்றவர்கள் மீதான அவமதிப்பதாகவும் இருக்கின்றன.

இறைவன் ஒருவரே உண்மையை அறிவார். மனித மனங்களின் ஆழத்தை அறிந்தவர் அவரே. இதை உணர்ந்து, “பிறரைக் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள். அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டிக்காதீர்கள். அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்கள்” என்னும் உன்னதமான வாழ்வியல் உண்மையை இயேசு எடுத்துக்காட்டினார். இதை விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் லூக்கா எழுதிய நற்செய்தியில் கிறிஸ்துவின் வார்த்தைகள் தானியங்களாக மின்னுவதைக் காணுங்கள்.

உலகின் நீதிபதி ஒருவரே

தீர்ப்பிடுதல் கடவுளுடைய பணி. அது மனிதர்களின் பணி அல்ல. இந்த உலகத்தைப் படைத்தவர் கடவுள். இந்த உலகத்துக்குப் படியளக்கிறவர் கடவுள். இந்த உலகத்தின் சொந்தக்காரர் கடவுள். நமக்கு வாழ்வு என்ற கொடையைக் கொடுத்தவர் கடவுள். எனவே, நாம் மற்றவர்களைத் தீர்ப்பிடுவது வாழ்வியல் அறம் அல்ல.

நாம் தீர்ப்பிட்டால், தேவையில்லாமல் கடவுள் செய்ய வேண்டிய செயலைச் செய்கிறோம். மனிதர்களாகிய நாம் ஒருவரின் செயல்களை அடிப்படையாக வைத்துத் தீர்ப்பு சொல்கிறோம். ஆனால், ஒருவரின் செயல்களை வைத்துச் சொல்வது, உண்மையான தீர்ப்பாக இருக்க முடியாது.

ஒருவர் உள்ளத்தில் வஞ்சக எண்ணம் வைத்துக்கொண்டு, வெளியே நல்லது செய்வதுபோல நடிக்கலாம். மனிதர்களாகிய நமக்கு ஒருவரின் உள்ளத்தை ஊடுருவிப்பார்க்கும் ஆற்றல் கடவுளால் கொடுக்கப்படவில்லை. ஆனால், கடவுள் அனைவரது உள்ளத்தையும் உற்றுப் பார்க்கிறார். அதன் அடிப்படையில் அவர் ஒருவரைத் தீர்ப்பிடுகிறார். இதுதான் முழுமையான, நியாயமான தீர்ப்பாக இருக்க முடியும்.

கடவுளுக்கு ஏற்ற வாழ்வு வாழ நாம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து உதவ வேண்டுமே தவிர, அவர்களைக் கண்டனத்துக்கு உள்ளாக்குவது கடவுளின் சித்தத்துக்கு எதிரானது. நிறை, குறைகளோடு வாழும் நம்மை சக மனிதர்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிற நாம், மற்றவர் குறைகளையும் ஏற்றுக்கொண்டு, அவர்களைத் தீர்ப்பிடாமல், அவர் அந்தக் குறைபாட்டிலிருந்து மீண்டுவர உதவுவதுதான் சிறந்த வழிகாட்டியான வாழ்வாக இருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்