கிறிஸ்துவின் தானியங்கள்: உங்களைக் காட்டும் கண்ணாடி

By அனிதா அசிசி

 

டவுளைக் காண முடியாது. ஆனால், அவருடன் பேச முடியும். அவருக்கும் நமக்குமான ஒரே பாலம் பிரார்த்தனை. வீட்டில் இருந்தபடியே கடவுளை நோக்கிப் பிரார்த்திப்பதற்கும் அவரது பிரசன்னமும் அருளும் வழிந்தோடும் ஆலயம் தேடிச் சென்று பிரார்த்திப்பதற்கும் இடையிலான வேறுபாட்டை ஒவ்வொரு சமயத்தினரும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். யூதர்கள் காலை, மதியம், மாலை என மூன்று முறை பிரார்த்தனை செய்வதை அன்றாட ஆன்மிகக் கடமையாகக் கொண்டிருந்தனர்.

யூதர்கள் தேவாலயத்துக்கு வந்து பிரார்த்தனை செய்வது கடவுளை விரைவாகச் சென்றடையும் வழி என்று நம்பினார்கள். அதற்காக பரலோகத் தந்தைக்குப் பிரம்மாண்டமான ஆலயத்தை எழுப்பினார்கள். பலி செலுத்தவும் பிரார்த்தனைக்காகவும் ஆலயத்தில் குவிந்துவிடுவது அவர்களது வழக்கமாக இருந்தது.

ஆண்டுக்கு ஒருமுறை வரும் பாவமன்னிப்பு நாளில் அதுவரை செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி அனைவரும் நோன்பிருக்க வேண்டும் என அறிவுறுத்தியது யூதத் திருச்சட்டம். ஆனால், கடவுளின் அருளைச் சிறப்பாகப் பெறுவதற்காகப் பலர் திங்கள், வியாழன் என வாரத்தில் இரு தினங்கள் நோன்பிருந்தனர். இந்த இரண்டு நாட்களும் எருசலேமில், மக்கள் பொருட்களை வாங்கச் சந்தைகளில் முண்டியடிப்பார்கள்.

அதேபோல, விளைச்சலில் பத்தில் ஒரு பங்கை ‘தசம பாக’மாக ஆலயத்துக்குக் கொடுக்க வேண்டுமென்று யூதர்களின் இணைச்சட்டம் (14:22), கூறுகிறது. இதைப் பின்பற்றிவந்த யூதர்கள், இதுபோன்ற பாரம்பரிய ஆலயச் சடங்குகளை ஏழைகளும் மற்றவர்களும் பார்க்க வேண்டும் என்பதற்காகப் பிரார்த்தனை செய்வது, தசமபாகம் தருவது, பலிசெலுத்துவது ஆகியவற்றை ஆரவாரத்துடன் படாடோபமாகச் செய்து ஆலயத்தின் அமைதியைக் கெடுத்து வந்தார்கள்.

தாங்கள் நோன்பிருப்பது தெரிய வேண்டும் என்பதற்காக, தங்கள் முகத்தை வெள்ளையாக்கிக்கொண்டு சந்தைவெளிகளில் நடந்தார்கள். அதேபோல் கொடுக்கத் தேவையில்லாத விளைபொருட்களிலும் பத்திலொரு பங்கைக் கொடுத்தார்கள். கடவுள் காரியத்தில் இப்படி விளம்பரப் பிரியர்களாக இருந்த பரிசேயர்களை முன்வைத்து இயேசு கூறிய உவமை; நம் தந்தையைத் தொடர்புகொள்ளப் பிரார்த்தனை என்ற உறவுப் பாலத்தை எத்தனை கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை எடுத்துக்காட்டியது.

இருவரில் யார் ஏற்புடையவர்?

தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்குபவர்களை விமர்சிக்கும்விதமாக இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “இருவர் இறைவனிடம் வேண்ட, கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிவசூலிப்பவர். பரிசேயர் ஆலய வாசலில் நின்றுகொண்டு, இவ்வாறு இறைவனிடம் உரத்த குரலில் வேண்டினார்: ‘கடவுளே, கொள்ளையர், நேர்மையற்றோர், பாலியல் தொழில் செய்வோர் போலவோ இல்லாதது குறித்து நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என் எல்லா வருவாயிலிருந்தும் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்’ என்று ஜெபித்தார்.

ஆனால், வரிவசூலிப்பவர் தொலைவில் நின்றுகொண்டு, வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என்று கடவுளுக்கு மட்டுமே கேட்கும் தன் மனக்குரல் கொண்டு ஜெபித்தார். இந்த இருவரில் பரிசேயரல்ல, வரிவசூலிப்பவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில், தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார் இயேசு.

பிரார்த்தனை எனும் கண்ணாடி

பரிசேயர் ஆலய வாசலில் நின்றபடி பிரார்த்தனை என்ற பெயரால் உரத்துச் சொன்ன அனைத்தையும் உண்மையிலே அவர் கடைப்பிடித்தார். தினமும் பிரார்த்தனை செய்தார், வாரம் இருமுறை நோன்பிருந்தார், பத்தில் ஒரு பங்கை ஆலயத்துக்குக் கொடுத்தார். ஆனால், பிரார்த்தனை என்பது தான் செய்வதைச் சொல்வது அல்ல, தன்னைப் புகழுவதும் அல்ல, அல்லது தன்னை மற்றவர்களோடு ஒப்பிடுவதும் அல்ல.

மாறாக, பிரார்த்தனை என்பது கடவுளைப் புகழ்வது, கடவுளோடு நெருங்கிவர அவர் துணையை நாடுவது, நிறைவாழ்வை நோக்கிய தொடர்ச்சியான தேடல் என்பதை பரிசேயர் மறந்துவிடுகிறார். பிரார்த்தனை என்பது கடவுளுக்கும் எனக்கும் உள்ள தனிப்பட்ட உறவு. அதன் வழியே கடவுள் என் மனம் எனும் கண்ணாடியில் இருப்பது அனைத்தையும் காண்கிறார்.

இயேசு தன் பூமி வாழ்வில் கடவுளாகிய தந்தையிடம் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்பதை இருமுறை தன் சீடர்களுக்கும் மக்களுக்கும் கற்றுக்கொடுத்திருக்கிறார். பிரார்த்தனை என்பது எவ்வாறு இருக்க வேண்டும், எவ்வாறு இருக்கக் கூடாது என்பதைத் தெளிவாக எடுத்துக்காட்டிய இயேசு, சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும்போது, “ பிதாவே இவர்களை மன்னியும், ஏனெனில் இவர் செய்வது என்னவென்று அறியாமல் செய்கிறார்கள்” என்று தன் மரணத்தை விரும்பிய எதிரிகளை மன்னிக்கும்படி தன் தந்தையிடம் கோரினார்.

இது எத்தனை உன்னதமான தாழ்ச்சி. ஒருவர் தம்மைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும் என்னும் இயேசுவின் அழைப்பு எளிதான போதனைதான். ஆனால், அதைக் கடைப்பிடிக்கும்போதுதான் நமக்கும் இயேசுவின் மேன்மை புரியத் தொடங்குகிறது.

(கிறிஸ்துவின் தானியங்கள் செழிக்கும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

7 mins ago

இந்தியா

40 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுலா

3 hours ago

மேலும்