குங்கும அர்ச்சனை செய்யுங்கள்... உங்கள் குங்குமத்தைக் காப்பாள் அன்னை! தை நிறைவு வெள்ளியில் தேவி தரிசனம்!

By வி. ராம்ஜி

தை மாத நிறைவு வெள்ளிக்கிழமை நாளில், அம்பாளை தரிசனம் செய்ய மறக்காதீர்கள். இந்த நாளில் அம்பாளுக்கு பூக்கள் சூட்டி, தீபமேற்றி வழிபட்டால், இன்னும் இன்னும் உங்களை வளமாக வாழச் செய்வாள் தேவி என்பது சத்தியம்!

தை மாதத்தின் செவ்வாயும் வெள்ளியும் அம்பிகைக்கு உகந்த நாட்கள். தை மாதத்தில் அம்பாளின் சாந்நித்தியம் ஆலயங்களில் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம். அதனால்தான், தை மாத செவ்வாய்க்கிழமையிலும் வெள்ளிக்கிழமையிலும் அம்பாள் கோயிலுக்குச் சென்று, அம்பிகையை ஆராதிப்பதும் தரிசிப்பதும் பெண்களின் வழக்கமாக இருந்து வருகிறது.

அதேபோல், இல்லங்களில் வெள்ளிக்கிழமைகளில் வீடு அலம்பி, சுத்தம் செய்து, சுவாமி படங்களுக்கு பூக்கள் அலங்கரித்து, விளக்கேற்றி, லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வழிபடுவார்கள். பூஜையின் நிறைவில், சர்க்கரைப் பொங்கல், கேசரி என இனிப்புகளைப் படைத்து நைவேத்தியம் செய்து, அக்கம்பக்கத்தாருக்கு பகிர்ந்தளிப்பார்கள்.

தை மாதத்தின் நிறைவு வெள்ளிக்கிழமை இன்று. எனவே இந்த நல்லநாளில், அருகில் உள்ள அம்மன் கோயில்களுக்குச் செல்லுங்கள். திருச்சி சமயபுரம் மாரியம்மன், திருச்சி உறையூர் வெக்காளியம்மன், சென்னை காளிகாம்பாள், சென்னை முண்டகக்கண்ணியம்மன், மயிலாப்பூர் கற்பகாம்பாள், காஞ்சிபுரம் காமாட்சி அன்னை, மதுரை மீனாட்சி அம்மன், சாத்தூரை அடுத்துள்ள இருக்கன்குடி மாரியம்மன், நெல்லை பேராத்து செல்வியம்மன், தீப்பாய்ச்சி அம்மன், கன்யாகுமரியில் உள்ள குமரியம்மன், தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன், மணலூர் மாரியம்மன், கொரநாட்டு கருப்பூர் பெட்டிகாளியம்மன், அம்பகரத்தூர் காளியம்மன், திருக்கடையூர் அபிராமி அன்னை, திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி, திருமீயச்சூர் லலிதாம்பாள், கோவை கோனியம்மன், ஈரோடு சின்ன மாரியம்மன், பெரிய மாரியம்மன், அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி, மாசானியம்மன் , சென்னை தி நகரில் அமைந்துள்ள முப்பாத்தம்மன் முதலான ஆலயங்களில் அம்மனைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் இந்த நாளில் வருவார்கள்.

அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் செல்லுங்கள். அம்பாளை மனமுருகப் பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் வீட்டில் கடன் பிரச்சினையாக இருந்தாலும் கல்வியில் குழந்தைகள் மந்தமாக இருந்தாலும் சரி, நல்ல உத்தியோகம் கணவருக்கு அமைய வேண்டும் என்றாலும் சரி, உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தாலும் சரி... சகல பிரச்சினைகளையும் அம்மனுக்கு முன்னே எடுத்துவையுங்கள். அனைத்தையும் சீராக்கித் தந்தருள்வாள் அன்னை!

தை நிறைவு வெள்ளி நாளில், அம்பாளுக்கு எலுமிச்சை தீபமேற்றுங்கள், செவ்வரளி மாலை சார்த்துங்கள். உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்களோ அந்த எண்ணிக்கைக்குத் தக்கபடி, தாமரை மலர்கள் சூட்டி, அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்.

அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடுங்கள். உங்கள் குங்குமத்தைக் காத்தருள்வாள் தேவி. மாங்கல்ய பலம் தந்து, மனை யோகமெல்லாம் தந்தருள்வாள் அம்பிகை!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தொழில்நுட்பம்

2 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

மேலும்