கிறிஸ்துவின் தானியங்கள் 04: பறவைகளைவிட நாம் சிறந்தவர்கள்!

By அனிதா அசிசி

 

நா

ளைய தினம் என்பது எதிர்காலம். அதற்காகச் சேமித்து வைப்பது இன்றைய வாழ்க்கைமுறையில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இயேசு வாழ்ந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் இதேநிலைதான். ஆள்பவர்களுக்கு மண், பொன், பெண், புகழ் மீது ஆசை என்றால் குடிகளுக்கோ பொன், பொருள், பொக்கிஷங்களைச் சேர்த்துவைப்பதில் ஆசை. பொருள் மீது வைக்கும் ஆசையைக் கடவுள் மீது வைத்துப்பார்; அதுவே திருட முடியாத ‘பொக்கிஷம்’ என்கிறார் இயேசு. கடற்கரையில் அவர் போதனை செய்துகொண்டிருந்தபோது திரளான உயர்தட்டு யூதர்கள் அவர் பேசுவதைக் கவனிப்பதற்காக வந்திருந்திருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் செல்வந்தர்களுக்கு இணையாக அன்றாட வாழ்க்கைப் பாட்டைக் குறித்துக் கவலை கொள்கிற ஏழை யூதர்களும் இருந்தார்கள். இயேசு பேசத் தொடங்கினார்.

உடலின் விளக்கு கண்கள்

“பூமியில் உங்களுக்காகப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைப்பதை நிறுத்துங்கள். ஏனென்றால், இங்கே பூச்சிகளும் துருவும் அவற்றை அழித்துவிடும்; திருடர்களும் திருடிக்கொண்டு போய்விடுவார்கள். அதனால், பரலோகத்தில் உங்களுக்காகப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்; அங்கே பூச்சிகளோ துருவோ அவற்றை அழிக்க முடியாது. திருடர்களால் அதைத் திருட முடியாது. உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கேதான் உங்கள் இதயமும் இருக்கும்.

கண்களே உடலுக்கு விளக்கு. உங்கள் கண்கள் ஒரே விஷயத்தின் மேல் கவனமாக இருந்தால், உங்கள் முழு உடலும் பிரகாசமாக இருக்கும். ஆனால், உங்கள் கண்கள் எல்லாவற்றையும் பொறாமையோடு பார்த்துக்கொண்டிருந்தால், உங்கள் முழு உடலும் இருளாய் இருக்கும். உங்களுக்குள் இருக்கும் ஒளி உண்மையில் இருளாக இருந்தால், அது எப்பேர்பட்ட இருளாக இருக்கும்!

வானத்துப் பறவைகள்

அதனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், எதைச் சாப்பிடுவது, எதைக் குடிப்பது என்று உங்கள் உயிருக்காகவும், எதை உடுத்திக்கொள்வது என்று உங்கள் உடலுக்காகவும் கவலைப்படுவதை நிறுத்துங்கள். உணவைவிட உயிரும் உடையைவிட உடலும் அதிக முக்கியம் இல்லையா? வானத்துப் பறவைகளைக் கூர்ந்து பாருங்கள். அவை நம்மைப் போல் விதைப்பதும் இல்லை, அறுவடை செய்வதும் இல்லை. ஏன், களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதும் இல்லை. ஆனாலும், உங்கள் பரலோகத் தந்தை அவற்றுக்கு உணவு அளிக்கிறார். பறவைகளைவிட நீங்கள் அதிக மதிப்புள்ளவர்கள் அல்லவா? கவலைப்படுவதால் உங்களில் யாருக்காவது தன்னுடைய வாழ்நாளில் ஒரு நொடியையாவது கூட்ட முடியுமா? அப்படியிருக்க ஏன் உடைக்காகக் கவலைப்படுகிறீர்கள்?

லில்லிப் பூக்கள் வளருவதைக் கவனித்துப் பாருங்கள்; அவை உழைப்பதும் இல்லை, நூற்பதும் இல்லை; ஆனால் செல்வச்செழிப்பில் மிதந்த சாலமோன்கூட இந்தப் பூக்களில் ஒன்றைப் போல் உடுத்த முடிந்ததா? இன்றைக்கு இருந்து நாளைக்கு இல்லாமல்போகும் காட்டுச் செடிகளுக்கே இவ்வளவு அழகான உடையைக் கடவுள் கொடுத்திருக்கிறார் என்றால், உங்களுக்குக் கொடுக்க மாட்டாரா? அதனால், எதை உண்போம், எதைக் குடிப்போம், எதை உடுத்துவோம் என்று ஒருபோதும் கவலைப்படாதீர்கள். இவை அனைத்தும் உங்களுக்குத் தேவை என்று உங்கள் பரலோகத் தகப்பனுக்குத் தெரியும்.” என்று அவர் கூறியபோது அங்கிருந்த செல்வந்தர்கள், ஏழைகள் ஆகிய அனைவரது முகத்தில் மட்டுமல்ல; சீடர்களின் கண்களும் உடலின் விளக்குபோல் ஒளிர்ந்தன.

பயம் தேவையில்லை

இன்னொருமுறை அன்றைய ரோமை ஆட்சியாளர்களையும் மதத்தின் பெயரால் மக்களை பாவிகளாக்கி வைத்திருந்த யூதப் பழமைவாத மதக்குருமார்களைப் பார்த்து பயப்பட வேண்டாம் எனத் தன் சீடர்களுக்கு அறிவுறுத்தும்போது, “ பரலோகத் தந்தைக்கு மட்டுமே பயப்படுங்கள். குறைந்த மதிப்புள்ள இரண்டு காசுக்கு ஐந்து சிட்டுக்குருவிகளை விற்கிறார்கள்தானே? ஆனால், அவற்றில் ஒன்றைக்கூடக் கடவுள் மறப்பதில்லை. உங்கள் தலையிலுள்ள முடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. பயப்படாதீர்கள்; சிட்டுக்குருவிகளைவிட நீங்கள் மதிப்புள்ளவர்கள்” என்றார்.

பறவைகள், செடிகள், புல் பூண்டு, பூச்சிகள் என உலக உயிர்கள் அனைத்தின் தேவைகளையும் பரலோகத் தந்தையாகிய யகோவா தன் பொறுப்பில் எத்தனை அழகாகக் கவனித்துக்கொள்கிறார் என்பதை சொன்ன இயேசு, “பறவைகளைவிட நீங்கள் அதிக மதிப்புள்ளவர்கள் அல்லவா?” என்று தம் சீடர்களுக்கும் மக்களுக்கும் எடுத்துக் கூறினார். இயேசுவின் உவமைகள் இன்னும் மனித இனத்துக்கு உயிர்ப்புள்ள உணவாக இருக்கின்றன.

பறவைகளுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்ளும் கடவுள், மனிதர்களுடைய தேவைகளை இன்னும் நன்றாகக் கவனித்துக்கொள்வார். இயேசுவின் திட்டவட்டமான பார்வை இது. இதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் வேண்டாம் என மனித குலத்தைப் பார்த்து அவர் கூறுகிறார்.

(தானியங்கள் பெருகும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

17 mins ago

வலைஞர் பக்கம்

57 mins ago

கல்வி

50 mins ago

இந்தியா

47 mins ago

தமிழகம்

53 mins ago

ஓடிடி களம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

12 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்