யானைகளின் வருகை 41: செங்கல் சூளைகள் ஏற்படுத்திய பனை சோறு போதை!

By கா.சு.வேலாயுதன்

நள்ளிரவு நேரம். அடர் வனத்தை ஒட்டியுள்ள பெரிய தடாகம் பகுதியில் ஒரு தோட்டம். அதன் நடுவே வானத்தை எட்டிப்பிடிப்பது போல் அங்கே செங்கல்சூளை புகை போக்கிகள் நிழலாய். அதை சுற்றி 'கருமுசு'ன்னு ஒரே இருட்டு. வரிசையாய் செங்கல் சூளைகள். சூளைகள் எரிந்து முடிந்து லேசான புகையை கோபுர உச்சியில் கசிய வைத்துக் கொண்டிருந்தன. அதை ஒட்டினாற் போல் பெரிய, பெரிய பனை மரங்கள். சூளையில் அடுப்புகளில் வைத்து எரிப்பதற்காக இரண்டாக பிளந்து போடப்பட்டிருந்தன. அந்த மரங்களில் நடுவே உள்ள சோறு போன்ற பகுதி அடுப்பில் வைத்தால் எரியாது. விறகையும் எரிய விடாது.

இரண்டாக பிளக்கப்பட்ட அந்த மரங்களிலிருந்து அந்த சோறு போன்ற அப்பகுதியை எடுத்து ஒரு பக்கம் குவியலாக குப்பை மேடு மாதிரி சிறிது தூரத்தில் கொட்டியிருந்தார்கள். அதில் எழுந்த வாசம் அந்த ஏரியாவையே ஒரு மாதிரி நாற வைத்தது. அதை சுவாசித்தாலே போதை வந்துவிடுகிற மாதிரியான கடும் புளிப்பு வாசம். அந்த நேரத்தில் அதை நோக்கி கருங்குன்றுகள் போல் ஏழெட்டு உருவங்கள். வேகமாக நகர்ந்து வருகின்றன. ஏற்கெனவே அங்கே சில கருங்குன்றுகள் நின்று ஒன்றையொன்று முட்டி மோதிக்கொண்டிருந்தன. அதை உற்றுப் பார்த்தால்தான் தெரிகிறது. அங்கே முகாமிட்டிருப்பது அத்தனையும் காட்டு யானைகள்.

தன் குட்டிகளுடன் அந்த புளிப்புச் சோற்றை உண்டு விட்ட யானைகள் மயக்கத்தில் தள்ளாடினவா? போதையில் ஆடினவா தெரியவில்லை. ஒன்றையொன்று முட்டிக் கொண்டன. குட்டிகளை பிடித்துத் தள்ளின. ஒன்றுக் கொன்று கனைப்பையும், பிளிறலையும் வெளிப்படுத்த ஆரம்பித்தன. அதற்கு மேல் அவற்றால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சிறிது நேரம்தான். அங்கிருந்து சில மீட்டர் தொலைவே இருந்த இடிபாடுகளுடன் கூடிய கூரை வீடுகளை நெருங்கின. அத்தனையும் செங்கல் சூளை தொழிலாளர்கள் தங்கியிருக்கும் குடிசைகள். கூரை வீடுகள். டென்ட் கொட்டகைகள். முதலில் டென்ட் கொட்டகைகளை தும்பிக்கையால் பிரித்து பிடுங்கி வீசின. பிறகு கூரை வீடுகள், குடிசைகள். நல்லவேளை. அப்படி வீசப்பட்ட வீடுகளில் யாரும் இல்லை .

அனைவரும் அந்த வருட பொங்கலுக்காக சொந்த ஊருக்கு நான்கு நாட்களுக்கு முன்பே புறப்பட்டு சென்றிருந்ததால் தப்பித்தார்கள். பிறகென்ன அங்கே யானைகள் ஒரே ஆட்டம்தான். விடியற்காலை அங்கிருந்து ஓரிரு கிலோமீட்டர் தள்ளியுள்ள சாலைக்கே வந்துவிட்டன. அந்த யானைகளின் சத்தத்தைக் கேட்டு சுற்றுப்புறம் ஊர் மக்கள் எல்லாம் விழித்துக் கொண்டனர். அடித்துப் பிடித்து ஓட்டமாய் ஓடி, பட்டாசுகளை கொளுத்தி, டமாரம் அடித்து, ஆய், ஊய் என்று ஊளையிட்டு அந்த யானைகளை காட்டுக்குள் விரட்டுவதற்குள் படாத பாடு பட்டு விட்டனர். இந்த சம்பவம் நடந்தது ஐந்தாண்டுகளுக்கு முன்பு.

கோவையிலிருந்து ஆனைகட்டி சாலையில் மாங்கரை எட்டுவதற்கு முன்பே உள்ளது சின்னத் தடாகம், பெரியதடாகம், அனுவாவி சுப்பிரமணியர் கோயில் போன்ற கிராமங்கள். இந்த கிராமங்கள் தொடங்கி மாங்கரை உள்ள முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் திரும்பின பக்கமெல்லாம் செங்கல் சூளைகளாக காட்சியளிக்கிறது. இந்த செங்கல் சூளைகள் ஆரம்ப காலத்தில் காட்டிலிருந்து கொண்டு வரப்படும் பல்வேறு வகை விறகுகளையே எரிபொருளாக பயன்படுத்தி வந்தன. அதை விட மலிவாக சீமைக்கருவேல மரங்கள் கிடைக்க அதை பிறகு எரிபொருளாக பயன்படுத்தின.

அதுவும் ஒரு கட்டத்தில் கூடுதல் விலை என்று கருதி சுற்றுப்பகுதிகளில் சுலபமாக கிடைத்த பனை மரங்களை விலைக்கு வாங்கி பயன்படுத்த ஆரம்பித்தன. அதை இரண்டாக பிளந்து நடுப்பகுதியில் உள்ள சோற்றை எடுத்தெறிந்து விட்டு விறகை பயன்படுத்த வந்தது வினை. பொதுவாகவே காட்டு யானைகள் பனை மரம் இருந்தால், பனம்பழம்,அதன் கிளைகள் தண்டு பகுதிகளை உண்ண அதன் வாசத்திற்கு ரொம்ப சுலபமாக வந்துவிடும். இங்கே கணக்கற்ற முறையில் பனை மரங்கள் பிளக்கப்பட்டு, சோறு எடுத்தெறிந்து குப்பையாக அழுகல் வாசத்துடன் கிடக்கும் போது சும்மாயிருக்குமா?

காட்டுக்குள் இருந்த யானைகள் யாவும் ஊருக்குள் வர ஆரம்பித்து விட்டன. பனை சோறு சாப்பிட்டு போதையில் தள்ளாடி அவை செய்த சேட்டைகளில் மக்கள் அரண்டு போயினர். இது ஒரு பக்கம். இந்த பனைசோறுக்கு அடிமையாகும் முன்பே அட்டப்பாடி மலைகளில் சாராய ஊறல் மொடாக்களில் முகம் நுழைத்து பழகியிருந்தன இப்பக்கம் வலசை வரும் காட்டு யானைகள்.

தமிழக எல்லையான ஆனைகட்டிக்கு மேலே உள்ள கேரளத்தின் அட்டப்பாடி மலைகளில் 20 ஆண்டுகளாகவே மதுவிலக்கு அமலில் உள்ளது. அங்குள்ள பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு அங்கே மட்டும் இப்படியொரு மதுவிலக்கு கொள்கை நடைமுறையை பின்பற்றி வருகிறது அரசு. அதை வாகாக பயன்படுத்தி அங்கே கள்ளச்சாராயப்பேர்வழிகள் பெருக்கெடுத்தார்கள்.

இங்குள்ள சோலையூர், தாசனூர், புதூர், அகழி, சித்தூர், கூலிக்கடவு, கோட்டத்துறை, சிறுவாணி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கிராமங்களில் சாராய ஊறல் மொடாக்கள் அணிவகுத்தன. அதில் கரும்பு மட்டி, அழுகல் பழங்களின் கரைசல் எல்லாமே நொதித்துக்கிடக்க அதையும் ருசி பார்த்திருந்தன இந்த காட்டு யானைகள். இரவு நேரங்களில் மொடாக்களை உடைத்து நொறுக்கி, அதில் இருந்தவற்றை ஊறிஞ்சிக் குடித்து விட்டு அக்கம் பக்கம் உள்ள காடுகளில் புகுந்து ஒரே அரிச்சாட்டியம்.

ஒரு பக்கம் காட்டு யானைகள். இன்னொரு பக்கம் இந்த கள்ளச்சாராயத்தால் குடியை கெடுக்கும் ஆண் மக்கள். பார்த்தனர் இங்கு வசிக்கும் கிராமத்து பெண்கள். தாமே கிளர்ந்தெழுந்து கள்ளச் சாராய மாபியாக்களுக்கு எதிராக போராட்டங்களை செய்தனர். ஊறல் மொடக்களை அவர்களும் குழுக்களாக சென்று உடைத்து எறிந்தனர். இதனால் அங்கு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டது. போராட்டக் குழுக்களுக்கு மிரட்டல் வர, அதை முறியடிக்க தீவிர கம்யூனிஸ்ட்டுகளும் ஆட்சியாளர்களுக்கும், மாஃபியா கும்பல்களுக்கும் எதிராக போராட்டக்களத்தில் இறங்கினர்.

போலீஸிற்கு மாமூல் போவதால்தான் அவர்கள் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால்தான் நாங்களே இதை ஒழிக்க களத்தில் இறங்கினோம்! என அவர்கள் முழங்க, அதை மீடியாக்கள் பிரதானப்படுத்த அதனால் ஆட்சியாளர்களுக்கு அரசியல் ரீதியாக சிக்கல்கள் ஏற்பட்டது. வேறு வழியில்லாமல் கேரள காவல்துறை இந்த விஷயத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வந்தது. கள்ளச் சாராயத்தை ஒழித்தும் கட்டினர்

கள்ளச் சாராயத்தின் மூலம் தங்களுக்கு கிடைத்து வந்த போதை சுகம் மறைந்ததால் அட்டப்பாடி வாழ் 'குடி'மகன்கள் அவஸ்தைப்பட்டார்களோ இல்லையோ. அதற்கு முன்பே காட்டுக்குள் ஊறல் மொடாக்கள் கிடைக்காது வெகுண்ட காட்டுயானைகள். அட்டப்பாடியிலிருந்து கீழே இறங்கி வர ஆரம்பித்தன.

குறிப்பாக மாங்கரை தாண்டியுள்ள தடாகம் பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளில் அப்போதுதான் பனை மரங்களை எரிபொருளாக பயன்படுத்த ஆரம்பித்திருந்தனர். எரிந்து மணக்கும் பனைமரங்கள் அவற்றை குஷிப்படுத்தி ஈர்த்தன என்றால், அங்கு திக்குக்கு, திக்கு கிடந்த பனைச்சோறு குவியல்கள் அவற்றின் போதைக்கு தீனியாக அமைந்தது. அதன் எதிர்வினை இங்குள்ள செங்கல் சூளைக்காரர்கள் மட்டுமல்ல, 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த தோட்டங்காடு உள்ள விவசாயிகளும் அனுபவித்தனர். பனை சோறு போதையில் கதி கலக்கும் யானைகள் குறித்து தொடர்ந்து செய்திகள் வெளியாக, வனத்துறையினர் உஷார் ஆகினர். சூளைக்காரர்கள் எக்காரணம் கொண்டும் பனை மரங்களை விறகுக்கு பயன்படுத்தக்கூடாது எச்சரிக்கை செய்தன. அதன் எதிரொலி. பனை மரங்களை சூளையில் விறகாக எரிப்பதை கடந்த சில ஆண்டுகளாகவே கைவிட்டுள்ளனர் சூளை உரிமையாளர்கள்.

இருந்தாலும் ஊருக்குள் வந்து போதைக்கு பழகி, விளைநிலங்களை அழித்து பழகின காட்டு யானைகள் அவ்வளவு சுலபமாக நிற்குமா? இந்த ஏரியாவை இன்னமும் கலக்கிக் கொண்டிருக்கின்றன. பெரியதடாகம், சின்னத்தடாகம், மாங்கரை, சோமையனூர், கணுவாய், ஆனைகட்டி என எங்கெங்கு செங்கல் சூளைகள் உள்ளனவோ, அங்கெல்லாம் யானைகளும் கூடவே குடி கொள்கின்றன. இந்த கிராமங்களில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமானோர் யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தும், படுகாயமடைந்தும் உள்ளனர். சரி. மனிதர்கள் மட்டுமா இறந்தார்கள். காயமுற்றார்கள். அதை விட அதிகமாக யானைகள்தான் துன்பம் அனுபவித்தன. தன் உயிரையும் விட்டன. எப்படி? செங்கல் சூளைகளுக்காக வெட்டப்பட்ட குழிகளில் சிக்குவது. சேற்றில் அகப்படுவது. அவுட்டுக்காய் எனப்படும் காட்டுப்பன்றிக்கு வைக்கப்பட்ட வெடியில் சிக்கி அடிபடுவது, உயிரிழப்பது... தொடர்கதையானது.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in  

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

8 mins ago

தமிழகம்

24 mins ago

இந்தியா

48 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்