பெற்றோர் கொத்தடிமை; மகள் பிளஸ் 2 தேர்ச்சி: கதவுகள் இல்லா வீட்டின் முதல் வெளிச்சம் சங்கீதா!

By நந்தினி வெள்ளைச்சாமி

"என் கிராம மக்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆனால், அவர்களுக்கு எந்த உதவியானாலும் நான் செய்வேன்" என மகிழ்ச்சியுடன் கூறும் சங்கீதா, பிளஸ் 2 முடித்திருக்கிறார். 263 மதிப்பெண்களுடன் 12-ம் வகுப்பில் தேர்ச்சியடைந்துள்ள சங்கீதாவுக்கு பல்வேறு பக்கங்களிலிருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.

263 மதிப்பெண்கள் என்பது வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு குறைவானதாகத் தோன்றலாம். ஆனால், சங்கீதாவின் இந்த வெற்றி என்பது, இருளில் மூழ்கியிருக்கும் இருளர் சமூகத்தினருக்கான, குறிப்பாக அச்சமூக பெண்களுக்கான வெளிச்சம், நம்பிக்கை கீற்று. இருளர் சமூகத்தில், கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட குடும்பத்தில் இருந்து முதல் ஆளாக சங்கீதா 12-ம் வகுப்பில் இந்த தேர்ச்சியைப் பெற்றிருக்கிறார்.

விழுப்புரம் மாவட்டம், வீரணாமூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி - லஷ்மி ஆகியோரின் மூத்த மகள் சங்கீதா. வீரணாமூரில், இவர்களையும் சேர்த்து 26 இருளர் குடும்பங்கள். அங்குள்ள இருளர் வீடுகளில் தவழ்ந்து, குனிந்துதான் செல்ல வேண்டும். அவ்வளவு குறுகிய ஓலை வீடுகள். கதவுகள் கூட இல்லை. இன்னும் சில வீடுகளில், மண்ணைக் குழைத்துத் தான் சுவர் எழுப்பியுள்ளனர்.

பூந்தமல்லியில் அமைந்துள்ள செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்தவர்கள் தான் சங்கீதாவின் பெற்றோர். கழிவறை இல்லாத சிறிய ஓலை வீடு, வாட்டியெடுக்கும் வறுமை, இருளர் சமூகத்திற்கேயுரிய பிரச்சினைகள் என அனைத்தையும் கடந்து 12-ம் வகுப்பில் வெற்றி பெற்ற சங்கீதாவைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தோம். 'நன்றி' என மெலிதாகப் புன்னகைத்தார். வெற்றியின் உணர்வுகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

"தேர்ச்சி பெற்றுவிட்டோம் என்றதும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. இன்னும் மேல்படிப்பை சிறப்பாக படிக்க வேண்டும் என அம்மாவும் அப்பாவும் சொன்னாங்க. நர்ஸிங் படிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை", என்றார் சங்கீதா.

குறைவான மதிப்பெண்கள் பெற்றுவிட்டோமோ என, ஆரம்பத்தில் சங்கீதா வருத்தமடைந்துள்ளார். ஆனால், மற்றவர்கள் அளித்த ஊக்கத்தாலும், பாராட்டுகளாலும், நர்ஸிங் படிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

"தேர்வு சமயத்தில், எனக்கு அம்மை போட்டிருந்தது. அடுத்த ஆண்டு தேர்வு எழுதலாம் என பெற்றோர்கள் கூறினர். ஆனால், மற்றவர்கள் அளித்த ஊக்கத்தால் இம்முறையே எழுதி தேர்ச்சி அடைந்துள்ளேன். 500 மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பேன் என நினைத்தேன், ஆனால், குறைவாக எடுத்துவிட்டோம் என வருத்தமாக இருந்தது" என்கிறார் சங்கீதா.

நர்ஸிங் படிப்பதற்கு, சங்கீதாவுக்கு தன் வீட்டின் பொருளாதாரச் சூழல் கைகொடுக்குமா என்ற அச்சமும் கவலையும் உள்ளது.

சங்கீதாவின் வீட்டில் கழிவறையும் இல்லை. குளிப்பதற்கு மட்டும், ஓலையில் சிறிய குளியலறையை ஏற்படுத்தியுள்ளனர்.

சங்கீதாவின் தந்தை சின்னசாமி, தான் 7-வது படிக்கும்போதே பூந்தமல்லியில் உள்ள செங்கல் சூளையில் கொத்தடிமையாக இருந்தார். திருமணமான பின்பு, அவரது மனைவி லஷ்மியும் அந்த செங்கல் சூளையில் கொத்தடிமையாகத்தான் இருந்தார். செங்கல் சூளையில் இருந்து 2009 ஆம் ஆண்டு தான் இருவரும் மீட்கப்பட்டனர். அதுவரை, சங்கீதா, தன் தாத்தா, பாட்டியின் அரவணைப்பில், வீரணாமூரில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தார்.

"என் அப்பா, 5,000-10,000 ரூபாய் வரை கடன் வாங்கியிருந்தார். அதனைச் செலுத்துவதற்காக, செங்கல் சூளையில் கொத்தடிமையாக இருந்தார். நான் 7-வது படித்த பிறகு வசதியின்றி, நானும் அதே செங்கல் சூளையில் கொத்தடிமையாக்கப்பட்டேன்.

திருமணமான பின்பு என் மனைவியும் அங்குதான் கொத்தடிமையாக இருந்தார். கர்ப்பமாக இருந்தபோது கூட கற்களைத் தூக்கி வேலை பார்ப்பார். அந்த வாழ்க்கை ஜெயில் வாழ்க்கை போன்றது. அழுதுகொண்டே தான் வேலை செய்வோம். ரொம்ப கஷ்டப்பட்டோம், நல்லது கெட்டதுன்னா கூட அனுப்ப மாட்டாங்க. உடம்பு சரியில்லை என்றாலும் அனுப்ப மாட்டார்கள். என் பிள்ளைக்கு உடம்பு சரியில்லை என்றால் கூட பார்க்க அனுப்ப மாட்டார்கள். இப்போது அந்த வாழ்க்கையை நினைத்தாலும் பயமாக இருக்கிறது" என்கிறார், சங்கீதாவின் தந்தை சின்னசாமி.

செங்கல் சூளையில் நாளொன்றுக்கு 400 ரூபாய் கொடுத்தாலும், 300 ரூபாயை நிர்வாகம் எடுத்துவிட்டு, 100 ரூபாயைத்தான் எங்களுக்கு தருவார்கள் என்கிறார் சின்னசாமி.

20 ஆண்டுகளாக செங்கல் சூளையில் கொத்தடிமையாக இருந்த சின்னசாமி மற்றும் அவரின் மனைவி, மாவட்ட நிர்வாகத்தின் உதவியினாலும், அங்குள்ள சமூக ஆர்வலர்களின் முயற்சியாலும் 2009-ல் மீட்கப்பட்டனர். தற்போது வீரணாமூரில் உள்ள இருளர் குடும்பங்களில் சிலர் இப்படி மீட்கப்பட்டவர்கள் தான்.

"அப்பா, அம்மா செங்கல் சூளையில் இருந்தபோது சிறு வயதில் ஏங்கி ஏங்கி அடிக்கடி அழுவேன் என பாட்டி சொல்லுவாங்க. அதனாலேயே எனக்கு அடிக்கடி உடம்பு முடியாமல் போய்விடும்", என, அந்நாட்களின் ரணத்தைப் பகிர்ந்துகொள்கிறார் சங்கீதா.

"எவ்வளவு கஷ்டப்பட்டாலும் படிப்பை மட்டும் விடக்கூடாது என அம்மா, அப்பா சொல்வார்கள்", என்கிறார்.

தற்போது, சின்னசாமி மரம் வெட்டுதல் உள்ளிட்ட கூலி வேலைகளைச் செய்து வருகிறார். அதில், நாளொன்றுக்கு 300 ரூபாய் வருமானம்.சங்கீதாவுக்கு 2 மற்றும் 7 ஆம் வகுப்பு படிக்கும் இரு தங்கைகள் உள்ளனர்.

சங்கீதா 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கு முன்பே பல இன்னல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. அதில், முக்கியமானது சாதிச் சான்றிதழ் பெறுதல். இருளர் சமூகத்தினர் எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சினைகளுள் சாதிச் சான்றிதழ் பெறுவதும், பட்டா பெறுவதற்குமான போராட்டங்களும் முக்கியமானவை.

சங்கீதா உட்பட வீரணாமூரில் உள்ள இருளர் குடும்பங்கள் சாதிச் சான்றிதழ் பெற மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி போராட்டம், உண்ணாவிரதத்தை நடத்தியுள்ளனர். அதன்பிறகு தான், அங்குள்ளவர்களில் முதலாவதாக சங்கீதாவுக்கு 2017-ல் சாதிச் சான்றிதழ் கிடைத்தது. அதாவது, அவர் 10-வது முடித்த பின்புதான் அவருக்கு சாதிச் சான்றிதழ் கிடைத்தது. அதே ஆண்டில், வீராணாமூர் அருகே உள்ள ஏரியில் இருளர் குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. அங்கு வீடுகளும் கட்டப்பட்டு வருகிறது.

"இவ்வளவு கஷ்டத்தைத் தாண்டி சாதிச் சான்றிதழ் வாங்கியதில் எனக்கு சந்தோஷம்" என்கிறார் சங்கீதா.

சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, நிலப்பட்டா பெறுவதில் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் மூலம் இருளர்களுக்கு பல பணிகளைச் செய்து வரும் ராஜேஷ் என்பவரிடம் பேசினோம்.

"2015 வெள்ளத்தின்போது வீரணாமூர் கிராமத்தில் நிவாரணப் பணிகள் மேற்கொண்டிருந்தோம். அப்போதுதான் இவர்களின் நிலைமை புரிந்தது. வெள்ளத்தின்போது, சங்கீதாவின் தாத்தா, பாட்டி மீது வீட்டின் சுவர் விழுந்து படுகாயம் ஏற்பட்டது. கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டவர்கள் குறித்து செய்திகளில் படிக்கிறோம். நான் அப்போதுதான் அவர்களின் நிலைமையை நேரில் பார்த்தேன். அங்குள்ள இருளர்களின் நிலையை பேராசிரியர் கல்யாணியிடம் தெரிவித்தேன். அதன்பிறகு தான், அவர்களுக்கு சாதிச் சான்றிதழ், பட்டா பெறுவதற்கான பணிகளில் ஈடுபட்டோம்.

இங்குள்ளவர்கள் 3-4 வது படிக்கும்போதே பள்ளிப்படிப்பை நிறுத்திவிடுவர். மாந்தோப்பு வைத்திருப்பவர்கள் 20,000 அட்வான்ஸ் கொடுத்து இங்குள்ள பிள்ளைகளை வேலைக்கு அழைத்துக்கொண்டு போய் விடுவர். அதனால், கல்வி முறிந்துவிடும். பண கஷ்டம் என்பதால், படிப்பில் நாட்டம் இருக்காது.

இங்கு நிறைய பணிகள் செய்த பின்பு, இங்குள்ளவர்களிடம் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளோம். விழுப்புரம் மாவட்டத்தில், பிரபுசங்கர் ஆட்சியராக இருந்தபோது, 6 மாதங்களில், 2,500 இருளர்களுக்கு மேல் சாதிச் சான்றிதழ் பெற்றுக்கொடுத்தார். தரமான வீடுகள் கட்டிக்கொடுத்தார்.

சங்கீதாவின் வெற்றி மற்றவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும். சாதிச் சான்றிதழ் சங்கீதாவுக்கு கிடைத்திருக்காவிட்டால், பெற்றோர்களுடன் வேலைக்குச் சென்றிருப்பார். இல்லாவிட்டால், திருமணம் செய்து வைத்திருப்பர்" என்கிறார், ராஜேஷ்.

இருளர்களுக்காக பல்வேறு பணிகளை பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் வாயிலாக செய்து வருபவர் பிரபா கல்விமணி. சங்கீதாவின் வெற்றிக்கு பல வகைகளில் பங்கு வகித்த அவரிடம் பேசினோம்.

விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், திருவள்ளூர் ஆகிய வட தமிழக மாவட்டங்களில் இருளர்கள் அதிகம் உள்ளனர். பெரும்பாலும் இவர்கள் சமவெளியில் வாழ்கிறவர்கள். இருளர்கள் ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் இல்லாமல், சிதறி வாழ்பவர்கள். இவர்களுக்கென தனி குடியிருப்புகள் இல்லை. தோட்டக் காவல், ரைஸ்மில், செங்கல் சூளையில் கொத்தடிமைகளாகச் செல்கின்றனர். 75% அப்படித்தான் உள்ளனர். குறைவாகத்தான் விவசாயக் கூலிகளாக ஊருக்குள் இருப்பார்கள். மற்றவர்கள், மழைக்காலங்களில் ஊருக்கு வருவார்கள், மற்ற நேரங்களில் செங்கற்சூளையில் இருப்பார்கள்.

சாதி ரீதியான அடக்குமுறைகளுக்கு இவர்கள் எளிதில் ஆளாகி விடுவார்கள். திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் இவர்கள் குற்றவாளியாக்கப்படுகின்றனர். சமூகப்பாதுகாப்பு இல்லாதது தான் இதற்கு காரணம். பாலியல் ரீதியான வன்கொடுமைகள் அதிகம்", என்றார்.

இருளர்களின் வாழ்நிலையை மேம்படுத்த எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முறையாக அமல்படுத்துதல், சாதிச் சான்றிதழ், பட்டா வழங்குதல் உள்ளிட்டவற்றை அரசு முறையாகச் செய்தாலே போதுமானது என்கிறார் பிரபா கல்விமணி.

இருளர் சமூக மாணவர்களிடையே கல்வியை ஊக்குவிக்க கோடைக்கால பயிற்சி முகாம்கள், 10, 12 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறும் அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி ஊக்குவித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளில், இச்சங்கம் ஈடுபட்டுள்ளது.

கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரத்தின் சிறுபகுதி, திருவண்ணாமலை மாவட்டத்தின்  சிறுபகுதி என சில பகுதிகளில் இச்சங்கள் இருளர்களுக்காக களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றது.

இருளர்களுக்கு சாதிச் சான்றிதழ் கிடைக்க அவர்கள் குறித்து, வருவாய்த்துறைக்கு இன்னும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்கிறார் பிரபா கல்விமணி.

தடைகளையும், அழுத்தங்களையூம் மீறி அடுத்த படிநிலைக்கு புறப்பட்டிருக்கும் முதல் வெளிச்சம் சங்கீதாவுக்கு மீண்டும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வோம்.

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

சினிமா

18 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்