நிர்மலாதேவி விவகாரத்தில் ஆடிப்போயிருக்கும் உயர்கல்வி வட்டாரம்; பல்கலை வரை பாயும் பணமும் பாலியல் தொந்தரவும்: பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஆதங்கம்; புகார் பெட்டிகள் அமைக்க வலியுறுத்தல்

By என்.சன்னாசி, எஸ்.ஸ்ரீனிவாசகன்

அருப்புக்கோட்டை உதவி பேராசிரியை நிர்மலாதேவியின் ஆடியோ விவகாரம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து துறை அலுவலர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் என அனைவரிடமும் இது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அதேநேரம், நிர்மலாதேவி கூறுவது உண்மையா, இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் செல்லத்துரைக்கு ஆதரவாக ஒரு குழுவும், எதிராக ஒரு குழுவும் நிர்வாக ரீதியாக செயல்படுகிறது. பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இவர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆசிரியர்கள், மாணவர்கள் சங்கங்களும் நிறைய உள்ளன. நிர்மலாதேவியின் விவகாரத்தை பெரும்பாலானோர் பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பிரச்சினையுடன் இணைத்தே பேசுகின்றனர். எதிலும் சம்பந்தப்படாத அலுவலர்கள், நிர்மலாதேவி பிரச்சினையால் பல்கலைக்கழகத்துக்கு பாதிப்பு வந்துவிடுமோ என்ற கவலையில் உள்ளனர். நிர்மலாதேவிக்கு இவ்வளவு செல்வாக்கு உள்ளதா எனவும் சிலர் ஆச்சரியப்படுகின்றனர்.

நிர்மலாதேவி தனது ஆடியோ பதிவில் குறிப்பிடும் அளவுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் மோசமாகியுள்ளதா என்பது குறித்து மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணிபுரி யும் பெயர் வெளியிட விரும்பாத பேராசிரியர்கள், அலுவலர்கள் சிலர் கூறியதாவது:

பொதுவாக, பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சித் துறையில் சிறு தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. இல்லை என ஒரேயடியாக கூறமுடியாது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கும் இது பொருந்தும். ஆராய்ச்சிப் படிப்பை முடித்து பிஎச்டி டிகிரியை குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்குவது என்பது அந்தந்த மாணவர் சார்ந்த பேராசிரியர்களின் கையில் (வழிகாட்டி) இருக்கிறது.

பிஎச்டி முடிக்க இழுத்தடிப்பு நடக்கிறது. இதை தவிர்க்க சிலர் பணம் வாங்குகின்றனர். மிகச் சிலர் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலில் ஈடுபடுகின்றனர். சாதி ரீதியாக மாணவர்களைக் கையாளும் போக்கும் உள்ளது.

பல லட்சம் கைமாறுகிறது

ஆராய்ச்சி மாணவர்களை தனிப்பட்ட முறையில் வேலை வாங்கும் பேராசிரியர்களும் உண்டு. தற்போது அது குறைவு. சிலர் ரூ.2 லட்சம் முதல் 7 லட்சம் வரை பெற்றுக்கொண்டு பிஎச்டி படிப்பை முடித்துக் கொடுக்கும் நிலையும் உள்ளது. காரணம், பல லட்சங்களைக் கொடுத்து பேராசிரியர் பணிக்கு வருபவர்கள், ஆராய்ச்சிப் படிப்புக்கு வரும் மாணவர்களிடம் அதை வசூலித்து ஈடுகட்டிவிடலாம் என கருதுகின்றனர்.

தவிர, உதவித் தொகைக்கான ஆராய்ச்சிப் படிப்புக்கு யுஜிசி தேர்வு எழுதி வருவோருக்கு மாதம் ரூ.40 ஆயிரம் வரை 5 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. இத்தொகைக்கும் சில வழிகாட்டி பேராசிரியர்கள் ஆசைப்படுகின்றனர். இதுபோன்ற தவறுகளை ஒருபோதும் ஏற்க முடியாது. ஆனாலும், புகார் வந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்.

படிப்பை முடித்தால் போதும் என்ற எண்ணத்தில், குடும்ப சூழல் கருதி, பாதிக்கப்படுவோர் வெளியில் புகார் தர முன்வருவது இல்லை.

மேலும், இங்கு சிறப்பு விசாரணைக் குழுக்கள் இல்லை. பணம் வசூலிப்பது, பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை, பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் அளிக்க ஒவ்வொரு துறையிலும் விசாரணை அதிகாரிகளின் பெயர் விவரம், தொடர்பு எண்களை எழுதி வைக்க வேண்டும். ‘உமன் ஃபோரம்’, விஜிலென்ஸ் கமிட்டி உள்ளிட்ட குழுக்களை ஏற்படுத்த வேண்டும்.

துணைவேந்தராக பிபி.செல்லத்துரை பொறுப்பேற்ற பிறகு சில பணி நியமனம் (ஆசிரியர் அல்லாத) நடந்துள்ளது. இதற்கும், நிர்மலாதேவி விவகாரத்துக்கும் தொடர்பு இல்லை.

உண்மை வெளிவர வேண்டும்

அலுவலர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் புவனேஸ்வரன், முத்தையா கூறியபோது, ‘‘நிர்மலாதேவியின் ஆடியோ விவகாரத்தில் உண்மை வெளிவர வேண்டும். பின்னணியில் யார் இருந்தாலும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்’’ என்றனர்.

ஆராய்ச்சி மாணவி ஒருவர் கூறியபோது, ‘‘ஆராய்ச்சி மாணவர்களைப் பொறுத்தவரை அவரவருக்கு பொறுப்பு அவசியம். நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் பிஎச்டி முடிக்க வேண்டும். ஆராய்ச்சிப் பிரிவில் நடக்கும் தவறுகளுக்கு, வழிகாட்டி பேராசிரியர்களை மட்டும் குறைகூற முடியாது. இரு பக்கத்திலும் தவறு இருக்கிறது. பல்கலைக்கழக உயர் பொறுப்பில் இருப்பவர்களில் சிலர் தவறு செய்தால், அது மாணவர்களையும் தவறு செய்யத் தூண்டும். பல்கலைக்கழக ஆராய்ச்சித் துறையைப் பொறுத்தவரை, மாணவர் - ஆசிரியை, மாணவி - ஆசிரியர் என்பதால் மட்டும் தவறு நடக்கிறது என சொல்ல முடியாது. ஒரே பாலினத்தவராக இருந்தாலும் பிரச்சினை உருவாக வாய்ப்பு உள்ளது. ஆசிரியர் - மாணவர் என்ற எல்லையை மீறும் போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது’’ என்றார்.

பல்கலைக்கழகங்களின் எஸ்எப்ஐ மாணவர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாரதி கூறியதாவது:

நிர்மலாதேவி ஆடியோ குறித்து மாணவ, மாணவிகள் உட்பட பல்வேறு தரப்பிலும் விசாரணை நடத்தினோம். இங்கு உள்ள யாருக்கும் அவரைத் தெரியவில்லை. தவிர, இந்த சூழலால் பல்கலைக்கழகத்தின் நிலைமை மோசமாகி, எந்த நிதியும் கிடைக்காத நிலை ஏற்பட்டால் மாணவர்கள் பாதிப்புக்கு ஆளாவார்கள். அதுபோன்ற சூழல் ஏற்படக்கூடாது என்பதால் இவ்விஷயத்தை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்தோம். தவிர, யார் மீதும் குற்றச்சாட்டுக்கான ஆதாரம் கிடைக்காததால், போராட்டத்தில்கூட பல்கலைக்கழக பாரம்பரியத்தை பாதுகாக்கவே கோஷம் எழுப்பினோம். இதுகுறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடக்க வேண்டும் எனத் தெரிவித்தோம்.

பல்கலைக்கழக நிர்வாகத்தில் பொதுவாக சில முரண்பாடுகள் உள்ளன. இதை, நிர்மலாதேவி பிரச்சினையில் இணைக்க சிலர் முயற்சிக்கிறார்களா என்பது தெரியவில்லை. அதே சமயம், பல்கலைக்கழகத்தில் எந்த சம்பவம் ஆனாலும் சாதி ரீதியாக பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு உயர்கல்வித் துறை இயக்குநரின் நேரடி உத்தரவின்பேரில் ஒரு பேராசிரியர், மேலும் ஒரு உதவி பேராசிரியர் என 2 பேர் மீது இதுவரை பாலியல் ரீதியிலான புகார்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி, பாலியல் ரீதியிலான புகார்கள் ஏதும் வெளிவரவில்லை.

நிர்மலாதேவி பிரச்சினையில் பல்கலைக்கழகத்தில் உள்ள 3 பேருக்கு தொடர்பு இருக்கலாம் என தகவல் வருகிறது. இது உண்மையா என விசாரணை முடிவில்தான் தெரியும். இதையும் கடந்து நிர்மலாதேவியின் செல்வாக்கு பாய்ந்திருக்க வாய்ப்பு இல்லை.

உயர்கல்வித் துறையில் பிஎச்டி துறையில்தான் அதிக தவறுகள் நடக்கிறது. மாணவர்கள்தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். வழிகாட்டி பேராசிரியர் திறமையானவரா, நேர்மையானவரா என்று பார்த்தே தேர்வு செய்ய வேண்டும். அவர்கள் பணம் கேட்டாலோ, சொந்த வேலையை ஏவினாலோ, பாலியல் சீண்டல் வந்தாலோ தைரியமாக மறுக்க வேண்டும். வரம்பு மீறினால் தயங்காமல் புகார் அளிக்க வேண்டும். இத்தகைய புகார்களைப் பெறவும், விசாரிப்பதற்கும் ஆய்வு மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகப் பிரிவினர் என அனைத்து துறையினரும் இணைந்த குழு அமைக்க வேண்டும். வெளிப்படையாக புகார் பெட்டி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

12 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்