1996க்குப் பிறகு பொங்கிய போஸ்டர் மோகம்: ரசிகர்களின் 2017-ன் நம்பிக்கையை நனவாக்குவரா ரஜினி?

By கா.சு.வேலாயுதன்

ரஜினியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து அவர் ரசிகர்கள் போஸ்டர் அடிப்பதும், தெருக்களில் ஒட்டுவதும் அதிசயமில்லைதான். இந்த ஆண்டு அது எல்லை கடந்திருக்கிறது. திரும்பின பக்கமெல்லாம் போஸ்டர்கள்தான். குறிப்பாக கோவையில் மட்டும் ஆயிரம் விதமான போஸ்டர்கள் இறக்கப்பட்டிருப்பதாகவும், ஒரே ஒரு அச்சகத்தில் மட்டும் 350 போஸ்டர்கள் டிசைன் செய்யப்பட்டதாகவும், ஒரு ஆப்செட் அச்சகத்தின் ஊழியரே தெரிவிக்கிறார். அதிலும், 'ரஜினியே.. தமிழக முதல்வரே' என்ற வாசகங்கள் தாங்கிய போஸ்டர்கள் மட்டுமல்லாது, முன்னாள் அகில உலக ரஜினி ரசிகர் மன்றத்தலைவர் சத்தியநாராயணவுக்கும் போஸ்டர் இறக்கி அதிர்ச்சி அரசியல் கொடுத்திருக்கிறார்கள் ரசிகர் மன்ற நிர்வாகிகள்.

'' 'முத்து' படம் வெளியான காலகட்டத்தில் திமுக- தமாகாவிற்கு ஆதரவு வாய்ஸ் கொடுத்த 1996-ம் ஆண்டு பிறந்தநாளுக்குத்தான் இந்த அளவுக்கு ரசிகர்கள் மூலம் போஸ்டர்கள் ரஜினிக்கு போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அதற்குப் பிறகு இப்போதுதான் அந்த மோகம் திரும்பியிருக்கிறது. அதற்கு அவர் அரசியலுக்கு வருவார் என்ற அதீத நம்பிக்கைதான் காரணம்!'' என கருத்து தெரிவிக்கிறார்கள் இந்த போஸ்டரில் மூழ்கி முக்குளித்திருக்கும் ரசிகர்கள்.

கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை பதிவு செய்யப்பட்ட ரஜினி ரசிகர் மன்றங்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேல் உள்ளன. பதிவு செய்யாமலும் அதே அளவு எண்ணிக்கையில் மன்றங்கள் உள்ளன. தற்போதைய ரசிகர் மன்ற சேர்ப்பு, உறுப்பினர், ரஜினி சந்திப்புக்கான தேர்வுகளை கதிர்வேலு, ஷெரிப், பாபு, செல்வராஜ் என நான்கு பேர் கொண்ட குழு செய்து வருகிறது. இவர்கள் தவிர முபாரக், அபு, சண்முகம் என பல்வேறு நிர்வாகிகளும் தனித்தனி எண்ணிக்கையில் மன்றங்களை வைத்து செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் கடந்த 4 நான்கு நாட்களுக்கு முன்பு அகில உலக ரஜினி ரசிகர் மன்றத்தலைவர் சுதாகர் கதிர்வேலு, பாபு, ஷெரிப் ஆகியோரை சென்னைக்கு அழைத்துப் பேசியதாகவும், அவர்களிடம் கோவை மாவட்டத்தில் எம்எல்ஏக்கள் தொகுதி வாரியாக 11 பேர் முதல் 20 பேர் வரையிலான நிர்வாகிகளை தேர்வு செய்து பட்டியல் தயார் செய்யும்படியும், அதேபோல் வார்டு வாரியாகவும், பூத் வாரியாகவும், அவர்களை வைத்தே நிர்வாகிகள் தேர்வு செய்யும்படியும் கேட்டுக் கொண்டதாக ரசிகர்கள் மத்தியில் பேச்சு உள்ளது.

அதிலும் பூத் கமிட்டி நிர்வாகிகள் தேர்வு செய்யும் விஷயத்தில் ஏற்கெனவே வெவ்வேறு கட்சிகளிலோ, அமைப்புகளிலோ, அல்லது ரசிகர் மன்றத்தின் பொறுப்பிலிருந்து பூத் பணிகள் ஆற்றியிருந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறதாம். கோவையில் ஒரு சிலர் ரஜினி ரசிகர்களாக இருந்து, சுயேச்சையாக நின்று கவுன்சிலர் ஆனவர்கள் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் அழைத்து இது சம்பந்தமான பேச்சுவார்த்தைகளை ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் செய்து வருவதாகவும் அதன் எதிரொலிதான் தற்போது ரசிகர்கள் மத்தியில் இந்த ரஜினியின் இந்த பிறந்தநாளுக்கு இந்த அளவு போஸ்டர் மோகம் என்கிறார்கள் விவரமறிந்த ரசிகர்கள்.

இதில் சத்தியநாரயாணாவுக்கு போஸ்டர் அச்சடித்து ஒட்டிய ரசிகர் முபாரக்கிடம் பேசியபோது, ''1996-ல் ரஜினி வாய்ஸ் கொடுத்ததில்தான் அன்றைக்கு திமுக-தமாகா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு அவர் ஸ்திரமான அரசியல் முடிவை இப்போதுதான் எடுத்திருக்கிறார் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். அதனால்தான் எங்கள் உணர்வுகளை இப்படி வெளிப்படுத்துகிறோம்!''

என்றவரிடம், 'சத்தியநாராயணாவிற்கு போஸ்டர் அடித்திருப்பது, அவர் ஒதுங்கியிருப்பவரை, ஒதுக்கப்பட்டிருப்பவரை வம்புக்கிழுப்பது போல ஆகாதா?' எனக் கேட்டபோது, ''இன்றைக்கு சுதாகர் ரசிகர் மன்றத்தலைவராக இருந்தாலும் ரசிகர்களின் ஊனாக, உணர்வாக, உயிராக இருந்தவர் சத்தியநாராயணாதான் என்பது ஒவ்வொரு ரசிகருக்கும் தெரியும். ரஜினியை கூட நாங்கள் போஸ்டராகத்தான் பார்த்திருக்கிறோம். சத்தியநாராயணாவுக்கு எங்களை நேரடியாக தெரியும். எங்கள் உணர்வுகள் தெரியும். அதனால் அவரை தவிர்த்து விட்டு ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்து நடப்பது கடினம். அதை எங்களைப் போன்ற ரஜினி, சுதாகர் உள்பட அனைவருமே அறிவார்கள். தேவை ஏற்படும் சரியான காலகட்டத்தில் அவரை இறக்குவார் ரஜினி. அந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகத்தான் அவர் புகைப்படத்தையும் போஸ்டரில் போட்டுள்ளோம்!'' என்றார்.

ஏராளமான பத்திரிகை விளம்பரங்கள், விதவிதமான எண்ண முடியாத போஸ்டர்களை இறக்கி, அதில் தமிழகமே, முதல்வரே என்றெல்லாம் அச்சடித்திருக்கும் எஸ்.சி. சண்முக சுந்தரத்திடம் (கோவை மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்துணைத்தலைவர்) பேசியபோது, ''1996-ல் ரஜினி வாய்ஸ் கொடுத்து கிங் மேக்கராக இருந்தார். இனி வரப்போகும் தேர்தலுக்குள் கட்சி ஆரம்பித்து கிங்காகவே (முதல்வராக) ஆகப் போகிறார். அதை ஒவ்வொரு மன்ற உறுப்பினரும் உணர்ந்திருக்கிறோம். அதை இந்த பிறந்தநாளில் வெளிப்படுத்தியிருக்கிறோம். இந்த பிறந்தநாள் அவர் தமிழக முதல்வர் ஆவதற்கான பிறந்தநாள்!'' என்றார் உணர்ச்சி பொங்க.

ரஜினி அரசியலுக்கு வருகிறரோ இல்லையோ, கமல் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்ததில் அவருக்கு தடுமாற்றம் இருக்கிறதோ இல்லையோ, ரசிகர்கள் இன்னமும் பழைய உணர்வோடுதான் இருக்கிறார்கள். அது இந்த முறை கூடுதலாகவே வெடித்திருக்கிறது. அது புஸ்வானம் ஆகாமல் ரஜினிதான் காப்பாற்ற வேண்டும்.

ரஜினி பிறந்தநாளுக்காக  கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் சில:

 

 

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்