ஓடிடி திரை அலசல் | Indian Predator: Murder in a Court Room - குரலற்றவர்களின் குருதியாட்டம்!

By குமார் துரைக்கண்ணு

2004 ஆகஸ்ட் 13, மகராஷ்டிரா மாநிலம் நாக்பூரின் மாவட்ட நீதிமன்றம் எப்போதும் போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. பிற்பகல் 2.30 மணியிலிருந்து 3 மணி இருக்கும், குற்றவாளி ஒருவரை போலீஸ் பாதுகாப்பாக அழைத்து வருகின்றனர். அந்த போலீஸ் வாகனத்தை பெண்கள் கூட்டம் சூழ்கிறது. அதில் ஒரு பெண்ணைப் பார்த்து, நாகூசும் வார்த்தைகளால் திட்டுகின்ற அந்த குற்றவாளி, சிறையில் இருந்து வெளியே வந்து உன்னை மீண்டும் வன்புணர்வேன் என்று மிரட்டுகிறார். பயத்தில், அவமதிப்பில் உறையாமல் தனது காலில் கிடந்த செருப்பைக் கழற்றி குற்றவாளியை அடிக்கிறார் அப்பெண்.

அவ்வளவுதான் கூடியிருந்த பெண்கள் கூட்டம் மொத்தமும் சேர்ந்து துரத்த நாக்பூர் மாவட்ட அமர்வு நீதிமன்ற அறை எண் 7-ல் போலீஸ் பாதுகாப்புடன் தஞ்சமடைகிறார் குற்றவாளி. நீதிமன்ற அறைக்கதவு உடைக்கப்படுகிறது. 400-க்கும் மேற்பட்ட பெண்கள், மிளகாய் பொடி , காய்கறி வெட்டும் கத்தி , கற்களுடன் உள்ளே நுழைகின்றனர். கொஞ்ச நேரத்தில் குற்றவாளிக்கான தீர்ப்பை எழுதிவிடுகிறேன். சுமார் 70 கத்திக் குத்துகள், ரத்தக்களமாகிறது நீதிமன்ற அறை. இது கதையல்ல உண்மையில் நடந்த சம்பவம்.

இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ள இந்தி மொழி ஆவணப்படம்தான் Indian Predator சீரிஸின், 3-வது தொடராக வெளிவந்துள்ள 'Murder in a Court Room'. உமேஷ் விநாயக் குல்கர்னி இந்த ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். கொலையுண்ட அந்த நபரின் பெயர் பரத் காளிசரண் என்ற அக்கு யாதவ். நீதிமன்றத்தில் தங்களுக்கான இந்த நியாயத் தீர்ப்பை எழுதியவர்கள் நாக்பூரின் கஸ்தூர்பா நகரில் தினக்கூலிகளாக வாழ்ந்த தலித் மக்கள். கொலை செய்யப்பட்டவனின் பின்புலத்தையும், கொலை செய்த மக்களின் வாழ்வியல் துன்பியல் அனுபவங்களையும் விவரிக்கிறது இந்த ஆவணப்படம். இந்தக் கொலைக்கான காரணங்களையும், கொலை செய்தவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைகள் என்ன, வழக்கின் இறுதி விசாரணையில் என்ன தீர்ப்பு வழங்கப்பட்டது என்பதை ஆழமாக அலசுகிறது இந்த ஆவணப்படம்.

32 வயதேயான அக்குயாதவ் மீது 3 கொலை வழக்குகள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகள் இருந்துள்ளன. ஆனால், காவல் துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்காததால், இத்தனை குற்றங்கள் நீண்டிருக்கிறது. அதேபோல், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க சென்றால், அப்பெண்களையே தரக்குறைவாக பேசுவதுடன், அவர்களை மிரட்டவும் செய்துள்ளனர் காவலர்கள்.

இதனால் அக்குயாதவ், 10 வயது சிறுமி முதல், குழந்தைப் பெற்று சில நாட்களே ஆன பெண்கள் வரை பலரது வாழ்க்கையையும் சீரழித்துள்ளான். அக்குயாதவிற்கு பயந்துகொண்டு அவன் இருந்தவரை, கஸ்தூர்பா நகரில் எந்த கொண்டாட்டங்களும், திருமணங்களும் நடைபெறவில்லை. மேலும் சிறு வியாபாரிகள்கூட அந்த பகுதிக்கு வரவே இல்லை. அக்குயாதாவால் வெளியே சொல்லமுடியாத துயரத்தை அனுபவித்த வந்த மக்கள், அவனை கொலை செய்த பின்னர், அந்தப் பகுதி மக்கள் அனைவரது வீடுகளிலும் கறி விருந்து சமைத்துண்டு மகிழ்ந்ததாக கூறும் காட்சிகளில் அம்மக்களின் முகங்களில் அப்படியொரு மகிழ்ச்சி வெளிப்படுகிறது.

ஆவணப்படம் பார்க்கிறோம் என்ற அசதி சிறிதும் ஏற்படாத வகையில், ஒளிப்பதிவு, இசை, காட்சியமைப்புகள் என அனைத்தும் சிறப்பாக கையாளப்பட்டுள்ளன. அதேநேரம் வலி மிகுந்த இந்த துயரச் சம்பவத்தை பார்வையாளர்களுக்கு சரியான முறையில் கடத்தியிருக்கும் இயக்குநரின் மேக்கிங் அபாரம். மொத்தம் 3 எபிசோட்கள், தலா 50 நிமிடங்களுக்கு குறைவில்லாமல் உள்ளன.

இந்த ஆவணப்படத்தில், அக்குயாதவ் மரணம் நடந்த விதம் குறித்து பலதரப்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், அக்குயாதவ் மரணம் நடந்த விதத்தை எதிர்மறையாக விமர்சித்து அதாவது தலித் மக்களின் மீது குற்றம்சாட்டியும் பேட்டிகள் இடம்பெற்றுள்ளன. அவை, "சட்டம் உங்களுக்கு எத்தனையோ உரிமைகளை வழங்குவதாக கூறிக்கொள்ளலாம். ஆனால், எந்த உரிமைகளையெல்லாம் செயல்படுத்துவதற்கு இந்த சமூகம் அனுமதிக்கிறதோ அவற்றை மட்டும்தான் உண்மையிலேயே உரிமைகள் என்று அழைக்க முடியும்" என்று சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் கூறியதை உங்களுக்கும் நினைவுபடுத்தலாம். குரலற்றவர்களின் குருதியாட்டமான இந்த 'Murder in a Court Room' ஆவணப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

34 mins ago

சினிமா

3 hours ago

இந்தியா

43 mins ago

இந்தியா

50 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்