சமூக நீதி போராட்டம் தொடர்வது காலத்தின் கட்டாயம்

By வழக்கறிஞர் கே.பாலு

செ

ப்டம்பர் 17-ம் தேதி சமூகநீதி வரலாற்றில் மறக்க முடியாத நாள். தந்தை பெரியார் பிறந்தநாள் என்பதோடு மட்டுமல்ல; 1987-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி அன்று இடஒதுக்கீட்டுக்காகப் போராடிய 21 பாட்டாளிகள், காவல்துறையினர் நடத்திய தடியடித் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த நாள். கல்வி, வேலைவாய்ப்பில் தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் பெரும்பான்மை சமூகமான வன்னியர் சமூகத்துக்கு மாநில அளவில் 20 சதவீதமும், தேசிய அளவில் 2 சதவீதமும் இடஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி தொடர் சாலை மறியல் போராட்டத்தை டாக்டர் ராமதாஸ் தலைமையிலான வன்னியர் சங்கம் நடத்தியது.

அப்போது எம்ஜிஆர் ஆட்சி. அவர் உடல்நலக் குறைவால் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த காலம். தமிழகம் அதற்கு முன்பு இத்தனை பெரிய சாலை மறியல் போராட்டத்தைக் கண்டது இல்லை. எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, 1989-ல் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை வன்னியர் சங்கம் புறக்கணித்தது. வட மாவட்டங்களில் பல வாக்குச் சாவடிகளில் ஒரு வாக்குகூட பதிவாகாத நிலை உருவானது.

அத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த கருணாநிதி, டாக்டர் ராமதாஸ் தலைமையிலான வன்னியர் சங்கத் தலைவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டத்தின் நோக்கம் என்னவோ, வன்னியர்களுக்கு தனி இடஒதுக் கீடு வேண்டும் என்பதுதான். ஆனால், கருணாநிதியோ இசைவேளாளர் சமுதாயம் உள்ளிட்ட 108 பின்தங்கிய சமூகங்களை இணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற புதிய பிரிவினையை ஏற்படுத்தி, கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்தார். பழம் நழுவி பாலில் விழுந்ததுபோல, வன்னியர்கள் நடத்திய போராட்டத்தால் 107 சமூகத்தினர் இடஒதுக்கீடு பெற்றனர்.

இடஒதுக்கீடு தியாகிகள் 21 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஆண்டுதோறும் செப்டம்பர் 17-ம் தேதி விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள தியாகிகள் நினைவிடங்களுக்கு சென்று பாமக நினைவஞ்சலி செலுத்தி வருகிறது.

இந்தத் தியாக வரலாற்றை, இடஒதுக்கீட்டால் பயனடைந்த பிற சமூகத்தினர் மட்டுமல்லாமல் வன்னியர் சமூகத்தைச் சார்ந்த இந்தத் தலைமுறையினர்கூட உணர்ந்து கொள்ளவில்லை என்பது வேதனையளிக்கும் விஷயம்.அந்தப் போராட்டம் நடந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவூட்டும் வகையில் விழுப்புரத்தில் மாபெரும் சமூகநீதி மாநாட்டை பாமக வரும் 17-ம் தேதி (நாளை) நடத்துகிறது.

இத்தருணத்தில், 1987 சாலை மறியல் போராட்டத்தின் விளைவாகப் பயன்பெற்றுவரும் 108 சமூகத்தினர் மட்டுமல்லாமல், சமூகநீதிக்காக குரல் கொடுக்கும் அனைத்து இயக்கங்களும், அரசியல் வேறுபாடுகளைக் கடந்து இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளின் தியாகத்தைப் போற்றும் வகையில் தங்கள் தியாக தீபத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும். இடஒதுக்கீட்டால் கடந்த 28 ஆண்டுகளில் அரசுப் பணிகளில் எத்தனையோ உயர்பதவிகளைப் பெற்றவர்கள், இடஒதுக்கீட்டால் உயர்கல்வி படித்தவர்கள் செப்டம்பர் 17-ம் தேதி ஒரு நிமிடம் இடஒதுக்கீட்டுப் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும்.

இடஒதுக்கீட்டுக்கு மூடுவிழா கொண்டாட சமூகநீதிக்கு எதிரான இயக்கங்கள் துடித்துக்கொண்டிருக்கின்றன. இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசுவது இக்கால இளைஞர்களின் நவீன நாகரிகமாக மாறிவருகிறது.

இடஒதுக்கீட்டுக்கான பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தும் நாளைத்தான் சமூகநீதிக் கொள்கைகள் முழு வெற்றி பெற்ற நாளாகக் கொண்டாட முடியும். அதுவரை சமூகநீதிக்கான போராட்டங்கள் தொடர வேண்டியது காலத்தின் கட்டாயம்!

கட்டுரையாளர், சமூகநீதிப் பேரவை தலைவர், வழக்கறிஞர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

49 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்