அசத்திய அரசு மருத்துவர்கள்!

By ச.ரேணுகா

அரசு மருத்துவமனை என்றவுடன், அசுத்தம், அக்கறையின்மை, ஆள்பற்றாக்குறை, இடநெருக்கடி, போதிய மருத்துவ வசதியின்மை என்பதே நம் மனதில் முதலில் நினைவுக்கு வரும்.

எதையும் இலவசமாய் தந்தால், அதன் தரம் குறைவாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்திருக்கிறது. இது தவறான எண்ணம் என்கிறார்கள் அரசு மருத்துவமனை ஊழியர்கள்.

“ஆட்சி செய்வது எந்த கட்சியாக இருந்தாலும், எத்தனை சலுகைகள் தந்தாலும், எங்கள் கடமையில் நாங்கள் எந்த மாற்றமுமின்றி நிறைவாகத்தான் செய்துவருகிறோம்.

அதிலும், உயிரைக் காக்கும் மருத்துவத் துறையை சேர்ந்தவர்களாகிய நாங்கள், எடுக்கும் முடிவில் தெளிவும், நோயாளிகள் மீது அக்கறையும் இருக்க வேண்டும் என்பதில் கவனமாய் இருக்கிறோம்” என்கிறார்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள்.

ஹரி நாரக் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும், சிறப்பாக சிகிச்சை அளிக்கப்பட்டதும் இதனை நிரூபிக்கும் வகையில் நடந்துள்ள சம்பவம்.

கடந்த மார்ச் 2-ம் தேதி மாமல்லபுரத்தில் அடிபட்ட நிலையில் இருந்த ஒருவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், அங்கிருந்து மார்ச் 3-ம் தேதி காலை 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்.

அவரின் இரத்த அழுத்தம் குறைவாகவும், மூளையின் செயல் திறன் மிகவும் கவலைக்கிடமாகவும் இருந்தது. அப்போது பணியில் இருந்த மருத்துவர் சி.டி. ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்துள்ளார். ஸ்கேன் முடிவில் மூளையில் இரு இடங்களில் பெரும் ரத்த கசிவு இருந்தது தெரிய வந்தது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்தால் தான் உயிர் பிழைப்பார் என்ற சூழ்நிலையில், தலைமை மருத்துவர் மகேஷ்வர் ஆலோசனையின்படி அவசர மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

உலகத்தின் சிறந்த வசதிகள் பெற்ற பெரிய மருத்துவமனைகளில் கூட இது போன்ற நோயாளிகள் பிழைப்பது கடினம். கோடீஸ்வரரான கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமேக்கர் இது போலவே தலையில் அடிபட்டதால் இன்னும் கோமாவில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரி நாரக்குக்கு சிகிச்சைக்குப் பிறகும் முழுமையாக சுயநினைவு திரும்பவில்லை. அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது அச்சமயம் மருத்துவர்களுக்கு தெரியவில்லை. எனவே அவருக்கு தேவையான இரத்தம், உடுத்த உடை ஆகியவற்றை கல்லூரி மாணவர்கள் கொடுத்து உதவினர்.

இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. வென்ட்டிலேட்டர் நீக்கப்பட்டது. தன் பெயர் ஹரி என்றும், ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் மட்டும் சொல்லி இருக்கிறார். அதன் பிறகு, சமூக வலைதளங்கள் மூலம், அவரைப் பற்றிய செய்திகள் பகிரப்பட்டன.

ஒடிசாவை சேர்ந்த அரசு மருத்துவர்கள் இதனை அறிந்து, காவல் துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். காவல் துறை அதிகாரிகள் இத்தகவலை நோட்டீஸாகவும், வானொலியிலும் அறிவிப்புகளாக வெளியிட்டனர். இதனை அறிந்த அவரது குடும்பத்தினர் காவல் துறையை அணுகினர். இதன் மூலம் நோயாளியின் முழுப் பெயர் ஹரி நாயக் என்பதும், ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த காலஹண்டியில் உள்ள துவமுலா கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவரது பெற்றோர் பிஸ்வாம்பர் நாயக் மற்றும் லட்சுமி நாயக் என்பதும் தெரியவந்தது.

இந்த செய்தியை பேஸ்புக்கில் பகிர்ந்த, மகேஸ்வரன் தலைமையிலான குழுவைச் சேர்ந்த மருத்துவர் ராஜா விக்னேஷ், “தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சைகளுக்கு 40 லட்சம் வரை செலவாகியிருக்கும். இங்கு இவருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒடிசாவிலிருந்து அவர்களது உறவினர்கள் வந்த பிறகு, இவரை பார்த்த பிறகு தான் இவரது அடையாளத்தை உறுதி செய்ய முடியும்” என்று கூறுகிறார்.

அரசு மருத்துவமனைகளில் ஹரி நாயக்கைப் போன்று தினமும் குறைந்தபட்சம் 6 பேர் அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கும் சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளிலும் நன்கு படித்த மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்களாலும் சவாலான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாய் செய்து முடிக்க முடியும் என்பதை இச்சம்பவம் உறுதி செய்துள்ளது.

அரசு மருத்துவமனை என்றாலே, நன்றாக இல்லை.. நன்றாக இருக்காது.. என்று குறை சொல்லிக் கொண்டு இருப்பவர்கள், இந்த செய்தியையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வார்களா?

சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உடன் வருவோரிடம் கனிவாகப் பேசுதல், மருத்துவமனையை இன்னும் சுத்தமாகவும் சுகாதாரம் நிறைந்ததாகவும் வைத்தல் போன்ற சில அம்சங்களில் கவனம் செலுத்தினால், இன்னும் பல உயரங்களை எட்டுவோம் என்பதே பொதுமக்களின் கருத்து.

தட்டிக் கேட்க உரிமை இருக்கும் நமக்கு, தட்டிக் கொடுக்கும் கடமையும் இருக்கிறதல்லவா?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

சினிமா

5 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

29 mins ago

க்ரைம்

35 mins ago

க்ரைம்

44 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்